05 – வேதாவின் கவிதைகள்!

வேதாவின் கவிதைகள்!

ஓர் மதிப்பீடு!

ஆழ வேரூன்றி!

அகலக் கிளைகள் பரப்பி!

வானோக்கி உயர்ந்து!

விரிந்து விருட்சமாகி!

விழுதுகள் பல இறக்கி!

எங்குமாய் வியாபித்து நின்று

நிழல் கொடுக்கும் இந்த ஆலமரத்தின்

அடி முடி தேடுவது என்பது

அவ்வளவு சுலபமானது அல்ல…

சிற்றெறும்பாகிய நான்

என் சிறு கைகளால் முழம் போடுகின்றேன்!

குருவி தலையில் பனங்காய் சுமக்க 

முயல்வதைப் போன்றது எனது முயற்சி!

சொல்லோடு பொருளெடுத்து!

சுவையோடு தமிழ் எடுத்து!

நில்லாது ஓடுகின்ற

நினைவுகளை நெஞ்சேற்றி!

நற்சுவையும் நற்பொருளும்

நயமோடு எடுத்துரைக்கும்

நல்ல பல கவிதைகளை

நாம் காணமுடிகிறது!

இந்த விருட்சத்தை நாம் வியந்து நோக்குமுன்னர்..

இதன் ரிஷி மூலத்தை நாம் கண்டறியவேண்டும்!

தமிழும், சைவமும், சமூக சேவையும் நிறைந்தது இவரது குடும்பம்.

இவரின் தந்தையார் திரு.முருகேசு சுவாமிநாதன் அவர்கள் மலேசியாவிலும் இலங்கையிலும் பல கல்லூரிகளை நிறுவியும், கடமையாற்றியும் வந்துள்ளார்.

இவை எல்லாம் இன்று பிரசித்தி பெற்ற கல்லூரிகளாக யாழில் திகழ்கின்றன.

இத்தகைய பின்னணிகளோடு

களத்தில் நிற்கும் வேதா இலங்காதிலகம்

அவர்கள் அரிய பெரிய பல படைப்புக்களை

நாளும் தந்து கொண்டிருக்கின்றார் என்பதில்

வியப்பேதுமில்லை!   

தாய்ப் பாலோடு பாசத்தை மட்டுமல்ல

வீரத்தையும் விளையவைக்கும்

ஒரு வீரத்தாலாட்டு கேட்கிறதே!

ஆராரோ தாலாட்டு அன்னையின் தாலாட்டு

அறிதுயில் போன்றது அன்னையின் தாலாட்டு

ஆசைத் தாலாட்டு பிள்ளைக்கு சீராட்டு

மங்காத வீரம் முளைவிடும் தாலாட்டு

தங்கத் தமிழனின் தொன்மைத் தாலாட்டு

துஞ்சிடும் விழி தூங்கிட தாலாட்டு!

பக்குவமாய் வளர்த்தெடுத்த

ஒரு விண்ணின் நிலவை

விடியும் வேளையில்   

திருமணப்பந்தலிலே மிக அழகாக

அமர வைக்கிறார்!

பஞ்சில் பொதித்து பக்குவமாய் வளர்த்து

மிஞ்சும் அறிவு சிறக்க வைத்து

கொஞ்சும் சிரிப்பு குலுங்க காத்து

விண்ணின் நிலவாய் மின்ன வைத்து

கண்ணின் இமையாய் கருத்துடன் காத்து

பெண்ணிற்கு விடியலென்று திருமணம்

மிக அற்புதமான கவிதை ஒன்று!

மகரந்தம் தேடும் வண்டினங்கள்

தேன் அருந்தியதும்

திசை மாறிப் போகின்றனவே!

என வண்டைத் திட்டுவது போல்

ஆண் வர்க்கத்தையே ஜாடை காட்டி

சாடுகிறார் மிக அற்புதமாக! 

பூவிதழ் விரித்து

பூந்தாது மகரந்தம் ஏந்தி

பழகும் வண்டின் வரவிற்காய்

மகிழ்ந்து ஏங்கி

தேன் பரிமாறியதும்

மலர் நன்றியை பெறுவதில்லையே!

வண்டின் நன்றி நவிலா நழுவல்

ஆணாதிக்கமோ?

பெண்ணடிமை பற்றி ஒரு கவிதை!

பெண் விடுதலை பற்றி மிக நேர்மையாக

பேசுகிறார்!

பெண் பயம் விடுத்தாலும்

பெண் நேர்மை பேசினாலும்

பெண் கேள்வி கேட்டாலும்

ஏன் பொங்குகிறது ஆணினம்?

கவிதை பற்றி ஒரு கவிதை….

வண்ண ஆரம்! சொல்லோவியம்!! சுகராகம்!!

மிக அற்புதமான சொல்லாட்சி!

ஏற்றதை இணைத்து எளிய சாரமாய்

வார்த்தையால் வளைக்கும் வண்ண ஆரம்

உள்ளுணர்வுச் சொல்லோவியம்

உயிரின் சுகராகம் கவிதை

தன்னை வளர்த்தெடுத்த

ஒரு தமிழ் வானொலிக்கு

காணிக்கை செய்கின்றார்

கடல் அலை கால்கள் தழுவிட இன்பம்

மடல் விழி குளுமையில் மலர்ந்திட இன்பம்

தமிழ் அலை மனதை தழுவிட இன்பம்

அமிழ்ந்து இனி உலகை மறந்திட எண்ணம்!

இவ்வாறாக இவரது கவிதைகளில், ஆன்மீகம், அரசியல், சமூகம், பெண்விடுதலை, காதல், வீரம், ஆகிய எல்லா துறைகளையும் மிகவும் அழகாகவும்

கவிதை நயத்தோடும் பதிவு செய்திருக்கின்றார்!

இந்த கவிதை நூல் நூலகம் என்னும் தளத்தில்

பதிவேற்றம் செய்யபட்டிருகின்றது என்பதிலிருந்து இதன் சிறப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது.

கவிதை என்ற தளத்திலிருந்து மேலும் விரிவாகி,

பயணக் கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகள், வானொலி நிகழ்ச்சிகள் என்று இவர் தன்னை  வளர்த்து கொள்ளுகிறார்.    

இணையத்தில் இவரது படைப்புகளை பார்க்கும்போது

ஆச்சரியம் மேலிடுகிறது!

பொறுப்பான ஒரு உயர் பதவியிலிருந்து கொண்டு

இவருக்கு எப்படி எழுத நேரம் கிடைக்கிறது?

இருந்தும், தமிழன்னைக்கு இவர் சூட்டியிருக்கும் அணிகலன்கள் யாவும் மிகவும் அற்புதமானவை!

இன்னும் பல படைப்புக்களை இவர் தருவார், தரவேண்டுமென வாழ்த்துவதோடு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறேன்!

வாழ்க தமிழ்!

வளரட்டும் இவர் தமிழ்த் தொண்டு!

ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்

ரியாத், சவூதி அரபியா

10/07/2011

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: