03 – கார்காலக் குளிர்நிலவே!
30 May 2011 Leave a comment
“கார்காலக் குளிர்நிலவே!”
சின்னக் கவிக்குயிலே!
செவ்வந்திப் பூச்சரமே!!
கன்னக் குழிக்குள்ளே
கால்தடுக்கி வீழ்ந்தேனே!
கொள்ளைச் சிரிப்பினிலே
கோடிசுகம் இருக்குதடி!
கோலமயிலழகே!
கொவ்வைஇதழ் சிந்தாதே!
பிஞ்சுமொழி அழகே!
பித்தம் தலைக்கேறுதடி!
பிள்ளைச் செல்வம் நீ!
பேசும்மொழி அமிர்தமன்றோ!
கண்ணே கலைமானே!
கார்காலப் பூமரமே!
பொன்னே மணிமுத்தே!
புதுவைரப் பெட்டகமே!
கள்ளச் சிரிப்பினிலே
கல்லும் கரையுதடி!
கார்காலக்குளிர் நிலவே!
கண்ணில் ஒளி வீசுதடி!
சின்ன இதழ்பிரித்து
சிந்தாதே முத்துமழை!
அன்ன நடைபயின்று
ஆடிவா பெண்மயிலே!
02 – கண்மணியே நீ உறங்கு!
30 May 2011 Leave a comment
“கண்மணியே நீ உறங்கு!”
ஆசைக் கனியமுதே!
ஆழ்கடலின் ஆணிமுத்தே!
பாசமலர்க் கொடியே!
பவள மணிச்சுடரே!
கோல மயில் அழகே!
கொஞ்சும் கிளி அழகே!
காலம் இனி இல்லை!
கண்மணியே நீ உறங்கு!
தேனே திரவியமே!
தெவிட்டாத செந்தமிழே!
மானே மயிலினமே!
மாசற்ற நித்திலமே!
சோலைக் குயிலினமே!
சுவையுள்ள பழரசமே!
காலம் இனி இல்லை!
கண்மணியே நீ உறங்கு!!
பூவே! புதுநிலவே!
பொற்சிலையே கற்பகமே!
பொன்னே பூந்தளிரே!
பிறைநிலவே மல்லிகையே!
காலைச் சூரியனே!
கமல மலரினமே!
காலம் இனி இல்லை!
கண்மணியே நீ உறங்கு!!
பொய்கைத் தாமரையே!
புதுவைரப் பெட்டகமே!
பிள்ளைக் கனியமுதே!
பேசு மொழிச் சித்திரமே!
மாலை இளவெயில்
மரகதமே மணிக்குயிலே!
காலம் இனி இல்லை!
கண்மணியே கண்ணுறங்கு!!