பிறக்கட்டும் புதுவருடம்!!
07 – மலைமகளின் கவிதைகள்!
24 Jul 2011 3 Comments
“காதலெனும் சோலையிலே!
“அழகான சந்தம் கொண்ட
சிந்து கவி!
இங்கே அற்புதமாய் தவழ்கிறதே
ஒரு கங்கை நதி!!”
ஓர் மதிப்பீடு!
கன்னித்தமிழ் சொல்லெடுத்து!
காதலெனும் பூதொடுத்து!
கவிதை மழை பொழிகின்ற
கார்முகிலே மலைமகளே!
காதலெனும் சோலையிலே
கண்டெடுத்தாய் தேன்கவிதை!
காலமெல்லாம் வாழ்ந்திருக்கும்
காதலர்கள் உள்ளவரை!
சொல்நயமும் பொருள்நயமும்
சோதிமிக்க நவகவிதை!
எந்நாளும் நிலைத்திருக்கும்
இனியதமிழ் உள்ளவரை!
தங்கத்தை மதிப்பிட்டேன்
தராசு பிழைத்த தன்றோ!
வைரத்தை மதிப்பிட்டேன்
வார்த்தைகள் வரவில்லை!
சர்க்கரைப் பந்தலிலே
தேன்மாரி சொரிகின்றாய்!
சங்கத்தமிழ் சொற்களிலே
சந்தனமாய் கரைகின்றாய்!
பூமாலை சொரிகின்றேன்!
பொன்மலர்கள் தூவுகிறேன்!
பாமாலை நீ சூடி
பல்லாண்டு வாழ்கவென்று!
வடித்துவைத்த கவிதைகளை
வரிசையிட்டு காட்டுகிறேன்
வாழ்த்தியுனை மகிழ்ந்திடுமே!
வாசமுள்ள மலர்களெல்லாம்!
புலத்தில் வேரூன்றினாலும்
பிறந்த தலத்தை மறவாத
தார்மீகப் பண்பையும்!
தாளாத பாசத்தையும்!
நெஞ்சைவிட்டு
நீங்காத நேசத்தையும்!
நினைவில் கொண்டு
தாயகத்தின் திசைநோக்கி
தலை வணக்கம் செய்கின்றார்!
“உன்னை வணங்குகிறேன்”
அன்னைத் தமிழே!
அழகின் மொழியே!
என்னை ஈன்ற
இனிய தாயே!
மண்ணின் மகளே!
மலையின் ஊற்றே!
பெண்ணின் பெருமை
பேசும் திரு நாடே!
மும்மலை சூழ்ந்த
திருகோண மலையே!
முத்தமிழ் தித்திக்கும்
முது பெரும் நகரே!
உன்னை வணங்கி
உறவைத் தொழுகிறேன்!
என்னை வாழ்த்தி
இனிய வரம் தாராய்!”
சந்தம் கொஞ்சி விளையாடும்
செந்தமிழ்க் கவிதைக்கு மட்டுமல்ல
எழுத்துக்கும் சொல்லுக்கும் கூட
இலக்கணம் கண்ட சங்கத் தமிழன்
காதலுக்கு மட்டும் ஏனோ
இலக்கணம் கூற மறந்து விட்டான்…
இதோ…
“ஆழ் மனஅறிவு”
சொல்லில்
புரிவதல்ல
காதல்!
சொல்லாமல்
வெல்வதில்லை
காதல்!
புள்ளியிடும்
கோலமல்ல
காதல்!
உறவின்
பொக்கிஷமாய்
இருப்பதுதான்
காதல்!”
விழி கொண்டு தீண்டினால்
ஒரு சுகம்!
விரல் கொண்டு தீண்டினால்
இன்னொரு சுகம்!
உடல் கொண்டு உரசினால்
வேறொரு சுகம்!
இதழ் கொண்டு எழுதினால்
என்ன சுகம்?
“இன்ப சுகம்”
விழி பேசினால்
ஒரு சுகம்!
விரல் தீண்டினால்
மறு சுகம்!
மொழி மலர்ந்தால்
தனிச்சுகம்!
மெளனம் பூத்தால்
இன்னுமோர் சுகம்!”
காதலர்கள் செய்யும்
குறும்பை விட
இந்த காதல் செய்யும்
கொடுமை மிக மோசமானது..
“காதல் சோலை”
சிரிக்க வைத்ததும்
சிந்திக்க வைத்ததும்
அழவைத்ததும்
அவஸ்த்தை தந்ததும்
காதல்!
…….
துடிக்க வைத்ததும்
துன்பம் தந்ததும்
துணையாய் இருந்ததும்
துயரம் கொடுத்ததும்
காதல்!
மழலைத் தமிழில்
மனதைக் கொள்ளை கொள்கிறதே
இந்தச் சின்னஞ்சிறு முல்லைப் பூ!
“முல்லைப் பூவே!”
முல்லைப் பூவே!
முத்து மணியே!
பிள்ளை வடிவில்
பேசும் நிலவே!
தத்தித் தத்தி
தாவும் குயிலே!
முத்தம் தந்து
முகிழ்க்கும் மலரே!”
புலம் பெயர் மண்ணின்
பொய்யான வாழ்வையும்
அது தரும் அவலங்களையும்
எப்படியோ இனம் காட்டுகிறார்!
“வெளி நாடு!”
வாடைக்காற்று
வந்த போதும்
வண்ண மலர்கள்
மலர்ந்த போதும்
வாழ்வில் இங்கு
அமைதி இல்லையே!”
பெண் என்ற பண்புக்குள்
இன்னும் நீ
அடங்கி விடாதே!
ஆசை காட்டி
மோசம் செய்யும்
ஆண் வர்க்கத்தை
அடையாளம் காண்!
“பெண்ணே!”
உன்னை எரித்து
தன்னை வளர்க்கும்
ஆண்களை
அடையாளம் காண்!
ஏக்கங்கள் கொடுத்து
தூக்கத்தை கெடுக்கும்
ஆண்களை
அடையாளம் காண்!”
புன்னகை உடையணிந்து
புதியதோர் உலகம் காண
புறப்படுகின்றார்!
அன்பு வழி நின்று
மனிதம் வளர்க்க
அறைகூவல் விடுக்கின்றார்!
“புதிய உலகம்”
…….
புன்னகை உடையணிந்து
புதியதோர் பாபுனைந்து
பூக்களை தூவியிங்கு
புதியதோர் உலகம் செய்வோம்!
இரண்டு கைகள் உண்டு
இளமை உணர்வுமுண்டு
அறிவின் துணையைக் கொண்டு
அன்பில் நிலைப்போம் நன்று!
தங்கத் தமிழெடுத்து
தாலாட்டுப்பாடி
தாய்மைக்கே ஒரு
சாமரம் வீசுகிறது
ஒரு கவிதை!
“தாய்!”
உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்து
காப்பவள்
கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்”
இயற்கையின் எழில் கூறவந்த
கவிதாயினி
இளங்கதிரோன் எழுந்து வரும்
அழகு கூறுகிறார்!
“அதிகாலை!”
அதிகாலைப்
பொழுதொன்று
உதிக்கின்றதே!
அதை
அறியாத மனமிங்கு
தூங்குகின்றதே!
உனக்குள்ளே நான்!
எனக்குள்ளே நீ!
இந்த உறவும் இந்த நெருக்கமும்
என்றும் வேண்டும் எமக்குள்ளே!
“என்னுள் நீ!”
விழிமூடும் போதும்
விளக்காக நீ!
மொழி பேசும் போதும்
இதழாக நீ!
உள்ளத்தில் நல்
உணர்வாக நீ!
தன்னம்பிக்கை யூட்டும்
ஒரு நன்னம்பிக்கை கவிதை!
பூமிப் பந்தையே
ஒரு நொடியில் புரட்டிப்போடும்
ஒரு நெம்புக்கோல் கவிதை இது!
“கலங்காதே!”
பாதைகளில் நமக்கு
தடைகள் வரலாம்!
பகலிரவாய் துன்பங்கள்
தேடி வரலாம்!
நாளை என்பது நமக்கு
வராமலா போகும்?
நம்பிக்கையை நீயும்
இழக்காதே நண்பனே!”
அழகான சந்தம் கொண்ட
ஒரு சிந்துகவி!
இங்கே…
அற்புதமாய் தவழ்கிறதே
ஒரு கங்கை நதி!!
“மாற்றம்
மனதுக்கு
வேண்டும்!”
குயில்கள் கூவுகிறது
குருவிகள் பேசுகிறது
கோடை காலத்தை
குதூகலித்து
கொண்டாடுகிறது!
மயில்கள் நடக்கிறது
மான்கள் துள்ளுகிறது
புவியில் பசுமையோ
புற்களாய் தவழ்கிறது
உலகை மறந்து
காதல் உலாப் போகும்
உள்ளங்கள்!
உறவு கலந்து
ஊஞ்சலாடும் எண்ணங்கள்!
“அன்பென்னும்
பாலத்தில்”
அன்பெனும் சோலையிலே
அழகாக நடந்தோம்
இன்பங்கள் பெறவே
இதயங்கள் கலந்தோம்!
வசந்த கால
ஒரு மாலைப் பொழுதில்
மிக உயர்ந்தமலைச்
சிகரம் நோக்கி
தன் இறக்கைகளை விரிக்கின்றார்
இந்த கவிதாயினி
“இமயம்!”
……
வண்ண வசந்தமென
என்னைக் கவர்ந்தவனே
விண்ணோடும் முகிலோடும்
விளையாடி மகிழ்ந்தவனே
உன்னைச் சரணடைந்தே
உலகில் புதுமைகண்டேன்
எண்ணச் சிறகெடுத்தே
இமயம் வரை நானுயர்ந்தேன்!”
இந்தக் கண்ணீருக்கு
எத்தனை வலிமை?
கண்ணை விட்டு ஓடும்
இந்த கண்ணீருக்குத்தான்
எத்தனை சுகம்?
“கண்ணீர்!”
மனமெனும் தாய்
உணர்வுகளோடு
மல்லுக்கட்டுகிறாள்!
நினைவு மகள்
நெஞ்சைப் பிழிந்து
நீராகக் கொட்டுகிறாள்!
காரணம் சொல்லாமல்
கண்களுக்குள் திரண்டு
என் கன்னத்தைத் தழுவ
கண்ணீருக்கு
இத்தனை ஆசையா?
சொந்தம் கூறும்
ஒரு சந்தக் கவிதை!
இங்கே
சிந்தி வழிகிறதே
காதலும் தேனும்!
“நீயும் நானும்!”
காதலும்
நேசமும்
நெருப்பும்
நீ!
பூவும்
வாசமும்
தேனும்
நான்!”
தேய்ந்து தேய்ந்து வளரும்
நிலவைப் போல் அல்லவே
உன்னை
நினைந்து நினைந்து உருகும்
நான்!
“நான் நிலவல்ல!”
…….
உறங்காமல்
உனக்காக
பூவிழி நோகவே
விழித்திருந்தேன்
…..
வளர்பிறையாய்
மீண்டும் வர
நான் என்ன
வான் நிலவா?
தத்தித் தத்தி தவழும்
ஒரு முத்து நிலவை
சித்தம் இனிக்க இனிக்க
இங்கே
முத்தமிடுகிறார்!
“கொஞ்சம் வா!”
தத்தித் தத்தி
தவழ்ந்து வந்த
முத்து நிலவே!
சித்தம் இனிக்க
முத்தம் தந்த
செம்பவளமே!
வாழ்வின் அர்த்தத்தை
வாழ்வின் அதிசயத்தை
ஒரு வண்ண மலரோடு
ஒப்பீடு செய்கின்றார்
மிக அற்புதமாக…
“அனுபவித்துப்பார்!”
காலையில் மலர்ந்து
மாலையில் மடியும்
மலருக்குள் எத்தனை
வண்ணங்கள்!
ஒரு பொழுதுக்குள்
மடியும்
பூவுக்குள் எத்தனை
நம்பிக்கை.
அழகான சொற்சந்தம்!
அற்புதமான கோர்வை!
விடியல் பற்றி விரியும்
இந்த கவிதையின்
விசித்திரம் பாருங்கள்!
“விடியல்”
இரவைக் கிழித்து
நிமிரும்
இனிய
விடியலைப் பார்!
அரவம் இன்றி
மலரும்
அழகிய
மலர்களைப் பார்!
பெண்ணின் பெருமை பேசும்
ஒரு பூச்செண்டுக் கவிதை!
எம் கண்ணைக் கவருவதில்
ஆச்சரியம் தான்!
“பெண்”
பூக்களின்
ராணியாக
பூமியில்
பூத்தவள்!
புது மணம்
பரப்பியே
பூக்களை
வென்றவள்!
பிஞ்சுவிரல்! பஞ்சு மெத்தை!!
கொஞ்சு மொழி! குவிந்த இதழ்!!
நெஞ்சமெலாம் நிறைந்து நின்று
நேசமுடன் இனிக்கிறதே!
“மழலையின்பம்!”
குட்டிக்குட்டி குழந்தைகளே!
குரல் எழுப்பும் பிள்ளைகளே!
கட்டி அணைத்து முத்தமிட்டால்
கவலை போக்கும் செல்வங்களே!
பத்துமாத சுமைகளெல்லாம்
பஞ்சு பஞ்சாய் பறந்து விடும்!
சொத்து சுகம் ஏதும் வேண்டாம்!
சொந்தமாக நீயே போதும்!
ஓர் அக்கினிக் கவிதை ஒன்று!
அடைத்து நிற்கும்
தடைகளையெல்லாம்
உடைத்தெறிந்து வருகிறது
வெளியே!
“புறப்படு பெண்ணே!”
அடங்கி அடங்கி நீ
அடிமையாய்
இருந்தது போதும்!
முடங்கி முடங்கி நீ
முணுமுணுத்தது போதும்!
புறப்படு பெண்ணே
புதுயுகம் படைப்போம்!
சந்தனமும் பன்னீரும் தெளித்து
எம் சிந்தையை குளிரவைக்கிறது
ஒரு சந்தக் கவிதை!
“மழலையாய் மாறு!”
மறுபடியும் மறுபடியும்
மன்னிக்கத் தெரியவேண்டும்!
பொறுமையென்னும் பூக்களால்
புன்னகை புரிய வேண்டும்!
வெறுமையும் வறுமையும்
வென்று உயர வேண்டும்!
சிறுமையைத் தர்த்தெறிய
சிந்திக்கத் தெரியவேண்டும்!
அடுக்கு மல்லிப் பூவெடுத்து!
அழகழகாய்த் தொடுத்தெடுத்த
ஓர் அற்புதமான கவிதை இது!
“நானிங்கு இல்லை!”
அடுக்குமல்லிப் பூவெடுத்து
அழகழகாய் மாலைகட்டி
தொடுத்துவைத்த பூச்சரத்தை
சூடிக்கொள்ள ஆசைப்பட்டேன்!
எத்தனை நாள் ஆசை
எனக்குள்ளே இருந்தது
அத்தனையும் நிறைவேறும்
அற்புத நாள் வந்தது!
சந்தமும் செந்தமிழும்
சேர்ந்தே ஒலிக்கிறதே!
சந்தனமும் செந்தூரமும்
சேர்ந்தே மணக்கிறதே!!
“வாழுவோம்!”
எழுதும் போது
என்னை மறப்பேன்!
எழுதாத நேரம்
உன்னுள் தொலைவேன்!
…..
எனது பார்வையில்
நீதான் இருப்பாய்
எனது பாதையிலும்
நீதான் நடப்பாய்!
இது ஒரு கவிதைச்சிற்பம்!
காலகாலமாக வரும்
காதலர்களுக்கு
இது சமர்ப்பணம்!
“காதல்! காதல்!!”
…….
ஓர விழியின்
பார்வை தேடி
உயிர் துறக்கும்
காதல்!
…..
உண்மை என்னும்
கோயில் தன்னில்
உறைந்த வேதம்
காதல்!
…..
பூத்துச் சொரியும்
நிலவைப் போலே
அமுதைப் பொழியும்
காதல்!
…..
சத்தமின்றி
தனக்குத்தானே
முத்தமிடுவது
காதல்!
சாவைக் கடந்து
வாழ்வோம் என்று
சபதமிடுவது
காதல்
இது வெறும்
சொற்களின் குவியல்கள் அல்ல!
அழகிய முத்துக் குவியல்கள்!
இங்கே இருப்பவை
வெறும் எழுத்துக்களின் கோர்வைகள் அல்ல!
விலைமதிப்பற்ற கோஹினூர் வைரங்கள்!!
இந்தக் கவிதைக்கடலில்
நான் முத்துக் குளித்து எடுத்து வந்த
முத்துக்களோ கொஞ்சம்!
இன்னும் கொட்டி கிடக்கிறதே
அள்ளக் குறையாத எத்தனையோ
தங்கப் பாளங்கள்!
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்
ஒவ்வொரு கவிதைகளையும் விரித்தால்
அவை ஓராயிரம் கவிதைகளாக
விரிகின்றனவே!
இது கவிதை நூலுக்கு மட்டுமல்ல
கவிதாயினியின் ஆற்றலுக்கும்
சான்று பகர்கின்றது!
காலத்தால் அழியாத கல்வெட்டு இது!
அடுத்த சந்ததிக்கு மட்டுமல்ல
இன்னும் ஆயிரம் சந்ததிகளின் கைகளிலும்
இந்த கவிதை நூல் தவழும்!
அழகு தமிழ் எழில் கூட்டி!
அற்புதமாய் கோர்த்தெடுத்து!
பழகு தமிழ்க் கவிதை தந்து!
பாரெங்கும் புகழ் பரப்பும்!
கவிதை மகள் நாயகியே!
கவிதாயினி மலைமகளே!
கன்னித் தமிழ் எடுத்து
கவி மாலை சூட்டுகிறேன்!
பூக்கள் பல தொடுத்து
பூச்சரங்கள் நீட்டுகிறேன்!
பேசும் தமிழ் எடுத்து
பேசுகிறேன் உன் கவிதை!
பிள்ளைத் தமிழ் தொடுத்து
பாடி வைப்பேன் உன்புகழை!
பள்ளித் தமிழ் எடுத்து
பார்புகழ வாழ்த்துரைப்பேன்!
வாழ்க நீ பல்லாண்டு!
வளரட்டும் உன்தமிழ் தொண்டு!!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்
ரியாத், சவூதி அரபியா
25/06/2011
06 – பொன்.சிவகெளரி கவிதைகள்!
24 Jul 2011 2 Comments
“முற்றத்து மல்லிகை!”
ஓர் ஆய்வுரை!
தென்றல் மெதுவாக வீச!
தென்னஞ்சோலை இதமாக
தென்பாங்கு பாட!
பொங்கியெழும் கடலலைகள்
பூமி தொட்டு வணங்கி மீள!
புத்தொளிர் வீசிக் கதிரவன்
புலர் காலை எழுந்துவர!
முற்றத்து மல்லிகையின் வாசனையோடு
எங்கும் விரவி வந்து
இதமாக ஒரு மோகன இராகம் மீட்டும்
இந்த கவிதாயினி பொன். சிவகெளரிக்கு
முதலில் இங்கே முல்லைப்பூக்கள்
தூவுகிறேன்!
கவிஞனிலும் பார்க்க
வாசகன் மிகவும் புத்திசாலி!
ஒரு கவிதையின் தலைப்பையும்
அதன் முதலடியையும் பார்த்துவிட்டு
அப்படியே புரட்டிவிட்டு போய்விடுவான்!
இத்தகைய வாசகனின்
சட்டை பிடித்து இழுத்து வைத்து
தன் கவிதைகளை வாசிக்க வைக்கவேண்டியது
ஒரு கவிஞனின் தலையாய பொறுப்பு!
அது மட்டுமல்ல…
அவனது திறமையும் அதுதான்!
ஒரு சிறந்த கவிதைக்கு
இலக்கணங்கள் தேவையில்லை!
எதுகை மோனை தானும்
இருக்கவேண்டிய அவசியமும் இல்லை!
இவைதான் பாடுபொருள்கள்
என்ற கட்டுப்பாடும் ஏதுமில்லை!
ஆனால்… அங்கு கவிதை
இருக்கவேண்டும்!
ஒரு கவிதைக்குரிய
உணர்வு நிலை இருக்கவேண்டும்!
இத்தகைய மிக எளிமையான
அளவு கோல்களோடு
முற்றத்து மல்லிகையை
கொஞ்சம் முகர்ந்து பார்ப்போம்!
முதலில் தன் கவிதைகள் பற்றி
இங்கு அறிமுகம் செய்து வைக்கின்றார்
மிக அற்புதமாக..
“என் உள்ளத்துள் உறங்கிக் கிடந்த
மெளன சப்தங்களின் மொழிபெயர்ப்புக்கள்!
தமிழோடு நான் செய்த சமாதான
உடன் படிக்கையின் சாட்சியங்கள்!
பிரசவத் தாயைப் போல்
விருப்பத்தோடு வேதனையை அனுபவித்து
ஆசையோடு நான் பெற்றெடுத்த
இலக்கியக் குழந்தைகள்!”
……….
“காட்டு மூங்கில்கள் கலைச் சிற்பியால்
கானப் புல்லாங்குழ லாவதைப் போல்
என் சிந்தனைகளை கவிச்சுவை கலந்து
நான் உருவாக்கிய சிற்பங்கள்!”
சீதனங்கள் பலகொடுத்தும்
ஒரு சீரில்லாத வாழ்வில் இணையும்
ஒரு மங்கை நல்லாளைப் பற்றி
எண்ணி எண்ணிப் பார்த்து கண்ணீர் சிந்துகிறார்!
“சீதனங்கள் சீர்வரிசை
ஆதனங்கள் ஆங்களித்து
சீரில்லாத் திருமணத்தில் இணையும்
மாது நல்லாள் தனையும்
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
எதுவுமே புரியவில்லை!”
இவர் ஒரு பெண்பால் கவிஞர்
என்பதனால் போலும்
தாய்மையின் மீது தாளாத பாசம்
கொள்ளுகிறார்.
தான் பிறந்தநாள் இல்லை…
அது அன்னையை போற்றும் நாள்
என்று ஒரு புது இலக்கணம் வரைவு
செய்கிறார். பாராட்டுக்கள்!
“நான் பிறந்த நாள் என் பிறந்த நாள்!
இல்லை… இல்லை…!
என்னைக் கருவில் தாங்கிய
கருணை உள்ளம் கொண்ட
அன்னையைப் போற்றும் நாள்!”
ஒரு விதைவையின் கோலத்தை!
அவள் படும் துன்பத்தை
தத்துவரூபமாக கூறவந்த கவிதாயினி…
கொட்டும் மழையில் நனையும்
கூரையில்லா மண் சுவரானாள்”
அற்புதமான அணி நலன்
கவிதைக்கு மேலும் அழகூட்டுகிறது!
“தாலிக்கயிறு மயானத்தில் உறங்க
விருப்பங்கள் விலங்குகளாக
வீடே இவள் சிறையாக
கொட்டும் மழையில் நனையும்
கூரையில்லா மண் சுவரானாள்!”
நட்பின் மகத்துவத்தை
ஒரு நறுமலரின் மணத்தோடு
உவமை கண்டு
அதன் உயர்வு கூறுகிறார் மிக அழகாக.
“தீய மலர் ஒன்றிலிருந்து வீசும் துர் நாற்றம்
நல்ல மலர்களின் நறுமணத்தையே
நாசம் செய்து விடுவதைப் போலே
தீயவர் உறவும் தூயவர் உள்ளத்தைத்
துருப்பிடிக்க வைத்து விடும்!”
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற
வாழ்வின் உன்னதத்தை தொலைக்கும்
மாந்தரைக் கண்டு
இந்த கவிதாயினியின் கண்கள் சிவக்கின்றன!
“ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற
உன்னதத்தைத் தொலைத்து விட்டு
நெறி கெட்ட வாழ்வு வாழும்
முறை கெட்ட மாந்தரிவர்!”
காதல் கவிதைகள் எழுதாமல்
ஒருவன் கவிஞாகிவிட முடியாது!
என்பதற்கு இவரும் விதிவிலக்கல்ல…
காதல் இரசம் கொஞ்சம் அதிகமாக சுவைக்கும்
கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகிறது!
“உன்னை யாரென்று அறிந்த நாள் முதலாய்
அனைத்திற்கும் நீயே
வேரென்று புரிந்திருந்தேன்!
விழிக் கதவுகளிற்கு தாளிடாமல் அவற்றை
திறந்து வைத்தே உனைப் பார்த்திருந்தேன்!”
காதலுக்கு எத்தனையோ
கவிஞர்கள் இலக்கணம் வகுத்திருக்கின்றார்கள்!
அனால் இவர் வரையும் இலக்கணமோ
மிக அற்புதமானது! வாழ்த்துக்கள்!!
“ஒரு நொடிப் பொழுதில் இதயம் ஒருமித்துப் போதல்!
காத்திருந்து காத்திருந்து ஏக்கத்துடன் வாழ்தல்!
கற்பனைக் கடலில் காலமெல்லாம் மூழ்குதல்!
உயிருக்காய் உயிரையும் கொடுக்கத் துடித்தல்!
எவரையும் பயமின்றி எதிர்க்கத் துணிதல்!
ஆயுள் உள்ளவரை அன்பை பூஜித்தால்!
எம்மை எமக்கே அடையாளம் காட்டுதல்!
இவற்றிற்கெல்லாம் இன்னொரு பெயர் காதல்!”
காதலை மட்டுமல்ல
அது தரும் வலிகளையும்
மிக நுட்பமாக சித்தரிக்கும்
வித்தையையும் இந்த கவிதாயினி
நன்கு அறிந்திருக்கின்றார்!
“வற்றாத கற்பனை நதிகள்
என்னைச் சுற்றிக் கொண்டிருக்க
இரவிற்குள் இமைகள் இறங்க
உன்னைப் பற்றிய கனவுகள்
நீண்டு சென்றன…!”
……….
“மேனி நொந்துபோய் நின்றேன்!
மேகங்களைத் தூது விட்டேன்!
மெய்யான நம் காதல்
பொய்யானதை நான் அறியாமல்!”
…….
நீ என்னை நினைக்க
நான் உன்னை நினைக்க
பெற்றோர் ஏதோ நினைக்க
இறுதியில் எதுவுமே நிறைவேறவில்லை
இறைவன் நினைத்ததைத் தவிர…!”
ஒரு முதிர் கன்னியின் வாயிலாக
வறுமையின் கொடுமை பற்றி
மெளனமாக அழுகின்றார்!
“வறுமை என்னை
வெறுமை ஆக்கியதால்
இனிப்பிருந்தும்
எறும்பு தொடாக் கரும்பானேன்!”
இவர் புலத்தில் கால் பதித்தாலும்
தாய் நிலத்தை மறவாத தார்மீகத்தை
இவரது கவிதைகளில் காண முடிகிறது!
சமூகம், சாதிக்கொடுமை, ஏற்றத்தாழ்வு,
காதல், கண்ணீர், பிரிவுத்துயரம்,
சீதனம், விதவை, முதிர்கன்னி, தாய்மை
இவ்வாறாக எல்லா பாடுபொருள்களையும்
தன் கையிலெடுத்து
மிகவும் அழகான மொழி வளத்தோடும்
தனக்கேயுரித்தான கவிநயத்தோடும்
அற்புதமான கவிதை வரிகளாலும்
புனையப் பட்டிருக்கும் இந்த கவிதை நூல்
திசையெங்கும் பரவி
நறுமணம் வீசவேண்டுமென வாழ்த்துகிறேன்!
சமகாலக் கவிஞர்களுக்கு மட்டுமல்ல
எதிர்கால கவிஞர்களுக்கும்
இது ஒரு கைநூலாகத் திகழும் என்பதில்
சந்தேகமில்லை.!
இந்த நூல் சிறப்புற அச்சேற்றம் பெற்று
வெளிவரும்போது தமிழ் கூறும் நல்லுலகம்
இவரை மிக இலகுவாக இனம் கண்டுகொள்ளும்
என்றால் அது மிகையாகாது!
இவர் இன்னும் நல்ல பல காத்திரமான
படைப்புக்களைத் தருவார் என நம்புவோமாக!
வாழ்க தமிழ்!
வாழ்த்தட்டும் தமிழ் உலகம்!!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்
ரியாத், சவூதி அரபியா
16/07/2011
srisuga2278@yahoo.com
05 – வேதாவின் கவிதைகள்!
24 Jul 2011 Leave a comment
“வேதாவின் கவிதைகள்!”
ஓர் மதிப்பீடு!
ஆழ வேரூன்றி!
அகலக் கிளைகள் பரப்பி!
வானோக்கி உயர்ந்து!
விரிந்து விருட்சமாகி!
விழுதுகள் பல இறக்கி!
எங்குமாய் வியாபித்து நின்று
நிழல் கொடுக்கும் இந்த ஆலமரத்தின்
அடி முடி தேடுவது என்பது
அவ்வளவு சுலபமானது அல்ல…
சிற்றெறும்பாகிய நான்
என் சிறு கைகளால் முழம் போடுகின்றேன்!
குருவி தலையில் பனங்காய் சுமக்க
முயல்வதைப் போன்றது எனது முயற்சி!
சொல்லோடு பொருளெடுத்து!
சுவையோடு தமிழ் எடுத்து!
நில்லாது ஓடுகின்ற
நினைவுகளை நெஞ்சேற்றி!
நற்சுவையும் நற்பொருளும்
நயமோடு எடுத்துரைக்கும்
நல்ல பல கவிதைகளை
நாம் காணமுடிகிறது!
இந்த விருட்சத்தை நாம் வியந்து நோக்குமுன்னர்..
இதன் ரிஷி மூலத்தை நாம் கண்டறியவேண்டும்!
தமிழும், சைவமும், சமூக சேவையும் நிறைந்தது இவரது குடும்பம்.
இவரின் தந்தையார் திரு.முருகேசு சுவாமிநாதன் அவர்கள் மலேசியாவிலும் இலங்கையிலும் பல கல்லூரிகளை நிறுவியும், கடமையாற்றியும் வந்துள்ளார்.
இவை எல்லாம் இன்று பிரசித்தி பெற்ற கல்லூரிகளாக யாழில் திகழ்கின்றன.
இத்தகைய பின்னணிகளோடு
களத்தில் நிற்கும் வேதா இலங்காதிலகம்
அவர்கள் அரிய பெரிய பல படைப்புக்களை
நாளும் தந்து கொண்டிருக்கின்றார் என்பதில்
வியப்பேதுமில்லை!
தாய்ப் பாலோடு பாசத்தை மட்டுமல்ல
வீரத்தையும் விளையவைக்கும்
ஒரு வீரத்தாலாட்டு கேட்கிறதே!
“ஆராரோ தாலாட்டு அன்னையின் தாலாட்டு
அறிதுயில் போன்றது அன்னையின் தாலாட்டு
ஆசைத் தாலாட்டு பிள்ளைக்கு சீராட்டு
மங்காத வீரம் முளைவிடும் தாலாட்டு
தங்கத் தமிழனின் தொன்மைத் தாலாட்டு
துஞ்சிடும் விழி தூங்கிட தாலாட்டு!”
பக்குவமாய் வளர்த்தெடுத்த
ஒரு விண்ணின் நிலவை
விடியும் வேளையில்
திருமணப்பந்தலிலே மிக அழகாக
அமர வைக்கிறார்!
“பஞ்சில் பொதித்து பக்குவமாய் வளர்த்து
மிஞ்சும் அறிவு சிறக்க வைத்து
கொஞ்சும் சிரிப்பு குலுங்க காத்து
விண்ணின் நிலவாய் மின்ன வைத்து
கண்ணின் இமையாய் கருத்துடன் காத்து
பெண்ணிற்கு விடியலென்று திருமணம்”
மிக அற்புதமான கவிதை ஒன்று!
மகரந்தம் தேடும் வண்டினங்கள்
தேன் அருந்தியதும்
திசை மாறிப் போகின்றனவே!
என வண்டைத் திட்டுவது போல்
ஆண் வர்க்கத்தையே ஜாடை காட்டி
சாடுகிறார் மிக அற்புதமாக!
“பூவிதழ் விரித்து
பூந்தாது மகரந்தம் ஏந்தி
பழகும் வண்டின் வரவிற்காய்
மகிழ்ந்து ஏங்கி
தேன் பரிமாறியதும்
மலர் நன்றியை பெறுவதில்லையே!
வண்டின் நன்றி நவிலா நழுவல்
ஆணாதிக்கமோ?”
பெண்ணடிமை பற்றி ஒரு கவிதை!
பெண் விடுதலை பற்றி மிக நேர்மையாக
பேசுகிறார்!
“பெண் பயம் விடுத்தாலும்
பெண் நேர்மை பேசினாலும்
பெண் கேள்வி கேட்டாலும்
ஏன் பொங்குகிறது ஆணினம்?”
கவிதை பற்றி ஒரு கவிதை….
வண்ண ஆரம்! சொல்லோவியம்!! சுகராகம்!!
மிக அற்புதமான சொல்லாட்சி!
“ஏற்றதை இணைத்து எளிய சாரமாய்
வார்த்தையால் வளைக்கும் வண்ண ஆரம்
உள்ளுணர்வுச் சொல்லோவியம்
உயிரின் சுகராகம் கவிதை”
தன்னை வளர்த்தெடுத்த
ஒரு தமிழ் வானொலிக்கு
காணிக்கை செய்கின்றார்
“கடல் அலை கால்கள் தழுவிட இன்பம்
மடல் விழி குளுமையில் மலர்ந்திட இன்பம்
தமிழ் அலை மனதை தழுவிட இன்பம்
அமிழ்ந்து இனி உலகை மறந்திட எண்ணம்!”
இவ்வாறாக இவரது கவிதைகளில், ஆன்மீகம், அரசியல், சமூகம், பெண்விடுதலை, காதல், வீரம், ஆகிய எல்லா துறைகளையும் மிகவும் அழகாகவும்
கவிதை நயத்தோடும் பதிவு செய்திருக்கின்றார்!
இந்த கவிதை நூல் “நூலகம்” என்னும் தளத்தில்
பதிவேற்றம் செய்யபட்டிருகின்றது என்பதிலிருந்து இதன் சிறப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது.
“கவிதை” என்ற தளத்திலிருந்து மேலும் விரிவாகி,
பயணக் கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகள், வானொலி நிகழ்ச்சிகள் என்று இவர் தன்னை வளர்த்து கொள்ளுகிறார்.
இணையத்தில் இவரது படைப்புகளை பார்க்கும்போது
ஆச்சரியம் மேலிடுகிறது!
பொறுப்பான ஒரு உயர் பதவியிலிருந்து கொண்டு
இவருக்கு எப்படி எழுத நேரம் கிடைக்கிறது?
இருந்தும், தமிழன்னைக்கு இவர் சூட்டியிருக்கும் அணிகலன்கள் யாவும் மிகவும் அற்புதமானவை!
இன்னும் பல படைப்புக்களை இவர் தருவார், தரவேண்டுமென வாழ்த்துவதோடு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறேன்!
வாழ்க தமிழ்!
வளரட்டும் இவர் தமிழ்த் தொண்டு!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்
ரியாத், சவூதி அரபியா
10/07/2011
04 – இசாருதீன் கவிதைகள்!
24 Jul 2011 Leave a comment
“மழை நதி கடல்!”
அவையடக்கம்!
தகைசான்ற தலைமைக்கும்!
தமிழறிந்த பெருந்தகைகள்
அனைவருக்கும்!
புகழ் பேசவந்திருக்கும்
புலவர் குழாமிற்கும்!
என் இனிய
பொன்மாலை வணக்கங்கள்!!
வாழ்த்துரை
வளமான தமிழ் மொழியை
வாரி இறைத்து!
மிக அற்புதமான கவிதைகளை
எங்கும் அள்ளித் தெளித்து!
அலட்சியமாகவும், ஏளனமாகவும்
பார்த்தவர்களையும் தன்பால் ஈர்த்துக்கொண்டு!
தனக்கே உரித்தான பாணியில்
வீறுநடை போடும் வெற்றி நாயகனே!
உந்தனுக்கு என் தமிழ் வணக்கம்!
இயற்கையான பேச்சுச்சந்தம்!
உணர்வுகளுக்கேற்ற அடியமைப்புக்கள்!
சொற்களை ஆயுதங்களைப் போல்
கையாளும் திறமை!
உள்ளடக்கத்திலிருந்து
பிரிக்க முடியாத இறுக்கம்!
புதிய பார்வை! சமகால உணர்வு!
ஆகியன இக்கவிதைத் தொகுப்பை
மேலும் மெருகேற்றுகின்றன!
மொழியின் உட்கருத்துக்களை
கண்டறிந்து வெளிப்படுத்துவதோடு,
சொற்களை விபரீதமான,
அபூர்வமான சேர்க்கையால்,
மொழியின் இயல்புக்கு மீறிய
அர்த்த சாத்தியங்களையும்
எழுதிக் காட்டுகிறார்!
சட்டாம்பிள்ளைத் தனத்தை
இவரிடம் சிறிதளவேனும்
காணமுடியவில்லை!
போதனைகள் போதிக்கும் ஒரு போதகராகவும்
இவரைப் பார்க்க முடியவில்லை!
இயற்கையின் இரசிகர்!
இதயங்ளையே அதிகம் நேசிப்பவர்!
பாசத்தின் பண்பு தெரிந்தவர்!
பண்பாட்டின் அர்த்தம் புரிந்தவர்!
பழகு தமிழில் நன்கு எழுதத் தெரிந்தவர்!
இத்தகைய இனிய நண்பர், இனியவன் இசாறுதீன்
அவர்களின் இந்த கவிதைத் தொகுப்பினை
இங்கே வாழ்த்தியுரை வழங்குவதில்
நான் மிக அக மகிழ்கின்றேன்!
இங்கே இவர்
பதித்துச்சென்ற முத்துக்களையும்!
பறித்தெடுத்து கோர்த்து வைத்திருக்கும்
முல்லை மலர்களையும்
உங்கள் பார்வைக்கு இங்கே
காட்சிப் படுத்துகிறேன்!
தாயின் பாசத்தை மிகவும் தத்துவ ரூபமாக
சித்தரிக்கவந்த கவிஞர்…
“தாய்தான் எல்லாம்
அவள்தான்
இரக்கத்தின் சிகரம்!
பாசத்தின் சமுத்திரம்!
மானுடத்தின் நதிமூலம்!
தன்னுயிர் கொடுத்து
இன்னுயிர் காக்கும்
தியாக தீபம்!
தான் பேசும் மொழிக்கும்
தான் பிறந்த மண்ணுக்கும்
மகத்துவம் சேர்க்கும்
மானுட மகுடம்!”
அடுத்து, தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள
தாளாத மோகத்தை….
முத்துச் சிரித்தால்
உன்னை
முல்லைத் தமிழ் என்போம்!
கண் மொழிந்தால்
உன்னை
கன்னித்தமிழ் என்போம்!
பரஸ்பரம் நிகழ்ந்தால்
உன்னை
பிள்ளைத்தமிழ் என்போம்!
ஆறுதல் வார்த்தையே
உன்னை
அன்னைத் தமிழ் என்போம்!
மேலும், “கறுப்புக்கொடி” என்ற ஒரு கவிதையில்
சமகால அரசியலை மிக நுட்பமாக சித்தரிக்கின்றார்..
“……
சுதந்திர தினத்தன்று
தேசத் தலைவருக்கு
ஆயுதக் காவல்!
தேசியக்கொடியில்
குருதிச்சுவடுகள்!
சுதந்திரச்சூரியனுக்கு
கறுப்புக்கொடி!
எங்களது வீட்டுக்குள்ளும்
அரை நிர்வாண
அகதிகள்!
மற்றும் “மழலை” என்றொரு கவிதையில்
எங்கள் மனதை மிகவும் நெகிழ வைக்கின்றார்.
நீ
தாய்ப்பாஷை பேசினால்
இசைக்குயிலின்
இராகம் கேட்கும்!
நீ
தமிழ் வார்த்தை உச்சரித்தால்
காவியப் பேரரசின்
கலைக் கூடம் தெரியும்!”
மேலும், “நான் பாரதியாக வேண்டும்”
என்ற கவிதையில்
இவரும் முண்டாசு கட்டிக்கொண்டு
முறுக்கு மீசை வைத்துக் கொள்ளுகிறார்.
“உன்னைப்போலவே
உருமாலை கட்டி
உன்னைப் போலவே
மீசையை வெட்டி
உன்னைப் போலவே
தலைப்பாகையும் கட்டினேன்!”
இதுவரை யாரும் தொடுவதற்கே அருவருப்படையும்
மண்புழுக்களைக் கூட தனது கவிதைக்கு
கதாநாயகனாக்கி இருக்கிறார்.
“மண் புழுக்களே
மண்ணின் மைந்தர்கள்!
ஓ..
விடு நிலத்தை
விளைநிலமாய் மாற்றும் நீங்கள்தான்
பூமியை
புனர்நிர்மாணம் செய்கிறீர்களா?
தியாகத்தின் உச்சத்தை “மெழுகுவர்த்தி”
என்றொரு கவிதையில் மிகவும் அழகாக சித்தரிக்கின்றார்!
“இருட்டின் ஆதிக்கத்தை விரட்ட
தீக்குளிக்கும் தியாகி நான்!
புகைந்துருகும் கற்பூரம் போலவும்
சிதைந்தெரியும் சாம்பிராணி போலவும்
எரிந்துதிரும் ஊதுவத்தி போலவும்
உங்கள் கைபட்டால் நான் தீக்குளிப்பது
என் மானம் காக்க மட்டும்தான்!”
“கவிதை” என்ற சொல்லுக்கு எத்தனையோ
கவிஞர்கள் இலக்கணம் கண்டிருக்கிறார்கள்.
அர்த்தங்கள் சொல்லி இருக்கிறார்கள்!
ஆனால் நம் கவிஞரோ
ஒரு புது வரைவிலக்கணமே கூறுகிறார்…
“உணர்ச்சிகளின் பாஷை
சுருக்கமான உலக மொழி!
சொற்களின் கைகுலுக்கல்
அர்த்தங்களின் அந்தப்புரம்!
அவலத்தின் அழுகுரல்
ஆனந்தப் பிரளயம்
சொர்க்கத்தின் கடைதிறப்பு
சோகத்தின் வெளிநடப்பு!
ஞானத்தின் ஊற்றுக்கண்
கவிஞனின் குழந்தை!
“கண்ணீர்” என்றொரு கவிதையில்
எங்கள் கண்களையும் கசிய வைக்கின்றார்.
“இமைகளுக்குள்
பிறக்கும்
ஈரக்குழந்தை!
இன்ப துன்பத்தின் பிரவாகத்தில்
இதயம் சுரக்கும்
அமுத சுரபி!
கண்களில் பிறந்து
கன்னத்தில் சங்கமிக்கும்
உப்புநதி!
“கவிஞன்!” என்றொரு கவிதையில்
நல்லதொரு கவிஞனை இனம் காட்டுகிறார்..
“கிழவனைப் போல் சிந்தித்து
குழந்தையாக வாழும்
வாலிப மனிதன்!
குபேரக் கற்பனையில்
குடித்தனம் நடத்தும்
கவுரவ ஏழை!
இதயத் துலாபாரமிட்டு
தீர்ப்பு எழுதும்
நீதிபதி!
எழுத்தேவுகணைகளை
எய்து கொண்டிருக்கும்
எழுச்சிப் போராளி!
மரணத்தால் கூட
மரிக்க வைக்க முடியாத தென்றல்”
இப்படி எத்தனை எத்தனையோ அற்புதமான,
அழகான கவிதைகளை
இந்த தொகுப்பு முழுவதும் காண முடிகிறது!
தமிழ் தாயின் பாதத்தில்
கவிஞர் இனியவன் இசாருதீன் சமர்ப்பிக்கும்
ஒர் அழகான அர்ச்சனை பூ இது!
இது பூத்து குலுங்கி!
திக்கெட்டும் சென்று
நறுமணம் வீச வேண்டுமென
மனதார வாழ்த்துகிறேன்!
கால வெள்ளம் ஓடி
ஒரு நாள் கடலில் கலக்கும் போது
நிச்சயம் இவரது கவிதைகளும்
கரை ஒதுங்கும்!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்
ரியாத், சவூதி அரபியா
22/06/2011
03 – இரவீந்திரன் கவிதைகள்!
24 Jul 2011 Leave a comment
“மீண்டு வந்த நாட்கள்!”
ஆய்வுரை..
களம் பல கண்ட தழும்புகள்!
இவரின் கவிதைகளில்…
துன்பங்களும் துயரங்களும்
இவரைத் துரத்தி வந்த போதும்
புறமுதுகு காட்டாத
புறநானூற்றுப் பண்போடு
நேர்நின்று பொருதுகிறார்!
சங்கத் தமிழனின்
போர்க் குணங்களையும்
அவனது ஆசா பாசங்களையும்
ஆங்காங்கே காணமுடிகிறது!
இவரின் கோபங்கள்
நியாயமானதாகவே தெரிகின்றன!
இவர் வீசும் சாட்டைகள்
சமுதாயத்தின் முதுகில்
காயங்களை ஏற்ப்படுத்துகின்றன.
அறம் பாடும் புலவராகவோ
அல்லது ஒரு அகிம்சை வாதியாகவோ
இவர் வேடம் தரிக்கவில்லை.
மாறாக, மனுடத்தையும்
மானுட நேசத்தையும் நோக்கியே
இவரது கவிதைகள் யாவும்
நடை பயில்கின்றன!
இவர் பட்ட பிரசவ வேதனைகளையும்
அறுவைச் சிகிச்சைகளையும்
அடையாளம் காண முடிகிறது!
இழிசெயல்கள் கண்டு
பொறுக்காது மனம் குமுறுகிறார்!
கடந்து வந்த தடைகளையும்
நடந்து வந்த பாதச் சுவடுகளையும்
இந்த கவிதை நூலில் மிக அழகாக
பதிவு செய்துள்ளார்.
இயற்கையின் அழகையும்
இளமையின் எழிலையும்
தனது வளமான மொழியோடும்
அழகான உவமை அணியோடும்
மிகவும் அற்புதமாகக் கூறுகிறார்!
“வண்டுகள் பறந்து வந்துன்
வாயமுதத் தேனுண்டு
வாச நறு மிதழில்
வட்டமிட்டு வட்டமிட்டே
நின்று நினைவிழந்து
நெஞ்சமதில் மயக்கமுற்று
நித்திரையாய் போனதையும்
நானறிவேன் நானறிவேன்!”
அந்த மண் வாசனையில்
ஒரு மகிமை இருக்கத்தான்
செய்கிறது!.
இது அந்த மண்ணுக்கு மட்டுமல்ல
மக்களுக்கும் இது ஒரு சாபக் கேடு!
சொல்லாமல் சொல்லுகிறார்!
“கொலை அரக்கனின் கோரக் கரங்கள்
ஷேல்லாக விழுகிறது!
வண்டு துளைக்காத மாம்பழங்கள்
குண்டுகள் விழுந்து சிதறினவே!”
ஒரு முதிர் கன்னியின்
ஏக்கப் பெருமூச்சு
எப்படி இருக்கும்?
எப்படி இருக்கக் கூடாது
என்பதனை ஒரு சில வரிகளில்
மிகவும் அற்புதமாக காட்டுகிறார்
“வரன்கள் வந்து வந்து
என்னைப் பார்த்துச் சென்றனர்.
தரகரும் வெளிநாட்டுக்காரரும்
என் புகைப் படங்களை
கேட்டுப் பெற்றனர்.
தந்து போனதில்
எனது ஆல்பம்
நிறைமாதக் கர்ப்பிணியாக
நிறைந்து கனக்கிறது
ஆனால் அதில்
இல்லாதது எனது புகைப்படம்
ஒன்றுதானும்!”
சமூகத்திற்கும்
தமிழனின் இன மானத்திற்கும்
இது ஒரு சாட்டை அடி..
இன்றைய நிலைமைகளுக்கும்
இதுதான் காரணம் போலும்…
“வடக்கத்தையாள்
போடி வெளியிலை”
…….
இவள்
கண்டியில் வாழ்ந்த
இந்திய வம்சம்
இனக்கலவரம்
அகதிகளாக்க
இனத்துடன் சேர்ந்து
உழைத்து வயிறு
கழுவ வந்தவள்!
சந்தைச் சுவரில்
“தமிழினமே ஒன்று படு”
…….
“தன்னிலை மாறினாலும்
தான் மாறக்கூடாது”
வெளிநாடு தந்த வாய்ப்புகளும்
வசதிகளும்
இன்று எம்மை எவ்வளவுக்கு மாற்றி விடுகின்றன..
…………
“இன்று நீ வெளிநாட்டுப் பிரசை
அதனாலோ பெயரையே மாற்றிவிட்டாய்
இந்தநாடு இன்றுனக்கு
சரியான “Hot” என்கிறாய்!
வீடோ “டேட்டி” என்கிறாய்!
இந்த நாடும் இந்த கிளைமேற்றும்
உனக்கு நினைவிலிக்கிறதா?
நினைவை மீட்டிப்பார் மகளே
இது நீ பிறந்தமண்!”
போலி வாழ்வுதனைக் கண்டு
ஏளனம் செய்கிறார்.
இது தவிர்க்க முடியாதது என்பது
எமக்கு மட்டுமல்ல
கவிஞருக்கும் நன்கு தெரியும்..
“பட்டு வேட்டி
சால்வை கட்டி
பதக்கம் சங்கிலி
கழுத்தில் மாட்டி
இடுப்பினுள்ளே
“ரோச் லைற்”
செருகி வைத்து
திருவிழா
திறமகாச் செய்கிறார்
திருநாமம்!
அவரின் மனைவி
வெளுறல் சேலைகட்டி
நகைகள் எதுவுமற்று
வயல்வெளியில்
ஒதுங்கி நின்று
திருவிழா
பார்க்கிறாள்”
உடைந்த நாற்காலி
ஒன்றிற்காக இவரது
மென்மையான உள்ளம்
மெளனமாக அழுகிறது!
உண்மையில் நாம் நேசிப்பது
மனிதர்களாகவும் இருக்கலாம்
அல்லது பொருட்களாகவும்
இருக்கலாம். ஆனாலும்
அந்த நேசத்தில் வேறுபாடு
இல்லை போலும்…
………….
“எனது கல்வி வாசிப்பு எல்லாமே
அந்த நாற்காலியில் தான்!
நான் படிக்கும் போது
சில சமயம் ஆடிக்கொண்டிருக்கும்.
ஓசைகள் கூட எழுப்பும்
அப்பா அந்த நாற்காலியை
சரி செய்து என்னைப் படிக்கவைப்பதில்
மிக அக்கறையோடு இருப்பார்.
……..
இப்போ எனது வீட்டில்
வசதியான தளபாடங்கள் காட்சிதருகின்றன.
ஆடும் என் மகனின் தொட்டிலின்
கீழே சமப்படுத்த
என் உடைந்த நாற்காலியின்
துண்டங்கள் தொட்டிலோடு
துணையாகின்றன”
இவர் ஒரு கவிஞராக மட்டுமல்ல…
சிறந்த மெல்லிசைப் பாடலாசிரியராகவும்
தன்னை இனம் காட்டுகிறார்.
இவரது பாடல்கள் இலங்கை வானொலியில்
அடிக்கடி ஒலிக்கின்றன..
இதோ மிகவும் அற்புதமான பாடல் ஒன்று…
“கலையின் அரங்கில் தாரகையாள்
கானத்தில் இவளே கலைக்குயிளால்
அலையென அவளின் நர்த்தனங்கள்
ஆயிரம் பாவங்கள் காட்டுது பார்!
சிலையென நின்று சிரிக்கின்றாள்
சிந்தையில் நடம் பயில்கின்றாள்!”
தமிழனின்
உரிமைகள் உடைமைகள் மட்டுமல்ல
தன்மானமும்
இந்த மண்ணில் தான் மாண்டு கிடக்கிறது!
அவன் நிமிர்ந்து நின்றால்
நிச்சயம் உடையும் தளைகள் எல்லாம்!
ஆயிரம் வார்த்தைகளை
தன்னுள் அடக்கி வைத்திருக்கிறதே
இந்த அட்டைப்படம்!
மிகவும் அற்புதமான தெரிவு!
இவ்வாறாக மிகவும்
காத்திரமான கவிதைகளையும்
காதுக்கினிய பாடல்களையும்
அழகு தமிழில் எழில் கொஞ்ச
தந்து கொண்டிருக்கும் இந்த கவிஞர்
இன்னும் பல படைப்புக்களைத் தந்து
தமிழ்த்தாயின் அங்கங்களை
அணிசெய்வார் என்பதில் சந்தேகமில்லை!
இவரது களமும் புலமையும்
மேலும் மேலும் வளர்ச்சியடைய
வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்
ரியாத், சவூதி அரபியா
03/07/2011
02 – தர்ஷினி கவிதைகள்!
24 Jul 2011 Leave a comment
“வல்லமை தாராயோ!”
ஆய்வுரை..
தடங்கள் தவறாமல் தளம் வகுத்து,
தாயக மண்ணில் கால் பதித்து,
மண் வாசனையோடு
கவிதை மலர் வாசனையும் தூவும்
“தர்ஷினி கனகசபைக்கு” முதற்கண்
எனது நல்வாழ்த்துக்களும்! நல்லாசிகளும்!!
வாழ்க்கையின் பல கோணங்களை,
மனித வாழ்வின் ஏக்கங்களை,
ஆசையின் அழகுக் கோலங்களை
அன்புப் பிடியின் தவிப்புக்களை,
பெற்றோரின் பாசங்களை,
பிரிக்க முடியாத நேசங்களை
அள்ளித் தெளிக்கும் அன்புகளை,
அடங்க மறுக்கும் ஆசைகளை
மிகவும் அற்புதமாக…
அழகுத் தமிழில் கவியமுது படைக்கும்
இந்த இளம் கவிதாயினிக்கு
ஆசியுரை எழுதுவதில்
என் பேனா மிக அகமகிழ்கிறது!
யாழ்ப்பாணத்திலுள்ள
புவிச்சரிதவியல் பணியகத்தில்
தொழில் உதவிப் பணியாளராக
பணி புரியும் இவர்,
பள்ளி நாட்களில் சிறுகதை,
கவிதை போட்டிகளில் பங்கு பற்றி
முதல் பரிசையே எப்போதும் தட்டி வருவார்.
பேராதனை பல்கலைகழகத்தில்
பட்டப் படிப்பை மேற்கொண்ட காலத்தில்
இவர் எழுதிய பல கவிதைகள்
பல்கலைகழக வெளியீடான
சங்கப் பலகையிலும் வெளிவந்து
எல்லோரினதும் வாழ்த்துக்களையும்
பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
தவிர இவர் எழுதிய
பல இசையும் கதையும் என்ற
வானொலி நாடகங்கள் பல
தமிழ் வானொலிகளில் ஒலிபரப்பாகியிருக்கின்றன.
கவிதையின் மிக உயர்ந்த பண்பு உணர்வுதான்!
வடிவம் எதுவாகவும் இருக்கலாம்!
ஆனால் அது எதோ ஒரு இரசத்தைப் பேசவேண்டும்!
காதல், அன்பு, சோகம், பாசம்,
உறவு, பிரிவு, வீரம், விடுதலை
எதுவாகவும் இருக்கலாம்!
கவிதை என்பது…
கன்னியைப்போல கண்ஜாடை காட்டிப்பேசும்!
அத்தகைய அற்புதமான
கவிதைப் பூக்கள் பலவற்றை
இத்தொகுப்பில் எங்கும் காண முடிகிறது!
உங்கள் பார்வைக்காக
அவற்றில் சிலவற்றை இங்கே
பறித்து வருகிறேன்!
“முதற் சம்பளம்” என்ற கவிதையில்
எமது சமுதாயத்தின்
ஆணாதிக்கத்தை சாடுகிறார் மிகவும் நயமாக…
“………சம்பளம்
கணவன் கையில்
கனத்தது மனது…
கண்களில் கண்ணீர்..”
“பாவிகள்” என்ற கவிதையில்…
பணம் ஏற்படுத்தும் அவலங்களை
மிக அழகாக சித்தரிக்கின்றார்!
“பணம் இல்லாமல்
தன் வாழ்வு சிதறடிக்கப்பட்டதாக புலம்புகிறாள்
அங்கொருத்தி…
பணம் தான் தன்னுடைய வாழ்க்கையை
சிதைத்து விட்டதாக புலம்புகிறாள்
இங்கொருத்தி…”
“முடியுமா உங்களால்?” என்ற கவிதையில்
தாயகத்தின் அவலங்களை படம்பிடித்து காட்டுகிறார்.
“…..துரத்தி வந்த துப்பாக்கி குண்டுகளில்
மாண்டு போன
என் அம்மாவும்….
மாமாவும்…
மறுநாள்
ஆட்லறியில்…
துடிதுடித்து செத்துப்போன.. என்
அப்பாவும் தங்கையும்…
அள்ளி எடுத்து அழவும் முடியவில்லை…”
“மனிதம் – II” என்ற கவிதையில்
மனிதத்தை தேடுகிறார்.
“மாளிகையில் தொலைந்துபோன
மனிதத்தைத் தேடினேன்.. அது
குடிசை வீட்டில்
குந்தியிருந்தது”
“மரணத்தின் பின்” என்றொரு கவிதையில்
எனக்காக இந்த உலகம்
சுற்றாமல் நிற்கப் போவதில்லை
என்பதனை மிகவும் நுட்பமாகவும்
மிகவும் அழகாவும் சொல்லுகின்றார்.
“முற்றத்து மல்லிகையும்
வேலியோர செம்பரத்தையும்
வழமை போல் பூக்கத்தான் போகின்றன…
ஆனாலும்
நானறிய மாட்டேன்”
“விதவை” என்றொரு கவிதையில்
போர்ச்சூழலில் கிழிந்து நொந்து போன
ஒரு சமுதாயம் விதவை பெண்களை
எப்படி நடத்துகின்றது என்பதனை
மிகவும் வேதனையோடு விபரிக்கின்றார்.
“இப்போது மொத்தக் குடும்பத்திற்கும்
நான்தான் வேலைக்காரி.
இருபத்தைந்தில் திருமணம்
இருபத்தியாறில் விதவையாதலால்..”
“அறுவடை” என்றொரு கவிதையில்
எமது அழகான தாயகத்தை
எப்படி படம் பிடிக்கின்றார் பாருங்கள்..
“எங்களூரில்…
இப்போது அறுவடைக்காலம்..
விதைக்கப்பட்ட பயிர்களுக்கல்ல..
மிதிவெடிகளுக்கு..”
“முரண்” என்றொரு கவிதையில்
எமது தாயகம் கிழிந்து போனாலும்
எமது பண்பாடு இன்னும் கலைந்து போகவில்லை
என்பதைக் கூறவந்த கவிஞர்…
“கண்ணா நீ போ… இனி
அவள் அண்ணாவுடன்தான் வருவாள்”
அம்மா சொன்னாள்
அவனுக்கும் புரியவில்லை
எனக்கும் புரியவில்லை.”
“ஆத்மாவின் குரல்” என்றொரு கவிதையில்..
எங்களின் கண்களை பனிக்க வைக்கின்றார்.
ஏழு வயது குழந்தையின் ஆத்மா அழுகிறது…
“ செத்துப் போன இந்நாளில்
திவசம் நீர் செய்ய
வந்திருந்து பார்க்கிறேன்..
வார்த்தைகள் வரவில்லை..
கண்களில் நீர் கோர்க்கின்றேன்..
அம்மா….
ஏன் கொன்றார் என்னை….?”
எங்களின் கண்களை பனிக்க வைத்த
இந்த இளம் கவிதாயினியின்
கன்னி முயற்சிக்கு
தமிழ் கூறும் நல்லுலகம்
இன்முகம் காட்டி இனிது வரவேற்கும்!
வாழ்க தமிழ்! வளர்க இளம்கவியே!!
“பழுதுகள் ஏதுமின்றி
பல கவிதை நீ யாத்து
விழுதுகள் பலவிறக்கி
வெற்றி வாகை நீ சூடு!”
பூக்கள் தூவுவது….
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்
ரியாத், சவூதி அரபியா
20/05/2011
01 – கிரிகாசன் கவிதைகள்!
24 Jul 2011 Leave a comment
“நுண்மாண் நுழைபுலம்!”
“நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று” – வள்ளுவம்
நுண்மாண் நுழைபுலமும்
கவித்துவமுமுள்ள படைப்புகள் இவை!
அற்புதமான!
மிகவும் அழகான சொல்லாட்சி!!
கற்பனைக் கலப்பில்லாத
மிகவும் யதார்த்தமான பாடுபொருள்கள்!
கவிதைக் களம் பல கண்டு
வெற்றி வாகை சூடிய கைவண்ணம்!
கால வெள்ளத்தில்
தனித்து நின்றே எதிர்நீச்சல் போட்டு
கரை ஒதுங்கக்கூடிய கலைப்படைப்பு!
தகுந்த முறையில் ஆவணப்படுத்தி
எதிர்கால சந்ததியிடம்
கையளிக்கப்படவேண்டிய
கலைப் பொக்கிஷம்!
தமிழை நேசிப்பதனால்
தங்களை நேசிக்கிறேன்!
வாழ்த்துக்கள்!
வளரட்டும் தங்கள் திருப்பணி!
அன்புடன்
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
19-04-2011
06 – அன்னையும் பிதாவும் நீரே!
22 Jul 2011 5 Comments
“அன்னையும் பிதாவும் நீரே!”
அன்னையும் பிதாவும் நீரே!
அவனியில் தெய்வம் நீரே!
புண்ணியம் கோடி செய்தேன்!
பூமியில் அடைந்தேன் உம்மை!
ஆயிரம் தவங்கள் நோற்பேன்!
ஆயிரம் தலங்கள் செல்வேன்!
ஆயிரம் பிறவி தோறும்
அன்னையும் பிதாவும் நீரே!
ஐயா என்றழைத்தே உங்கள்
அன்பினைப் பெற்றவன் நானே!
அம்மா என்றழைத்த தெல்லாம்
அன்னையே உன்னைத்தானே!
அன்போடு பாசம் தந்து!
ஆயகலை யாவும் தந்து!
பண்போடு வாழ வைத்தீர்!
பணிந்திருப்பேன் உங்கள் பாதம்!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
17/07/2011
05 – பாதங்கள் தொழுகின்றேன்!
22 Jul 2011 3 Comments
“பாதங்கள் தொழுகின்றேன்!”
பாதங்கள் தொழுகின்றேன்!
பாடியுமை மகிழ்கின்றேன்!
பக்தியுடன் உமைநினைந்தே
பாரினிலே வாழ்கின்றேன்!
தாயேஉன் முகமறியேன்!
தவறென்ன நான்செய்தேன்?
பாவியெனைப் புறந்தந்தே
பாதிவழி போயினையோ?
முந்தித் தவமிருந்தாய்!
முன்னூறு நாள் சுமந்தாய்!
வந்து பிறந்த என்னை!
வளர்த்தெடுக்க நீயில்லை!
கொடிய நோய் வந்து
கொடிமரமே சாய்ந்தாயோ!
பிரிய மனமின்றி
பிரிந்து நீயும் சென்றாயோ!
காலன் வகுத்த விதி
கனிமரமே கண்மறைந்தாய்!
சேய்நான் அருகிருந்தும்
செய்யவில்லை ஒருதொண்டும்!
உள்ளம் குளிரவைத்து
உச்சி மோந்தாயே!
உயிருள்ள வரை நாளும்
உம்பாதம் நான் துதிப்பேன்!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
17/07/2011
22 – வாழ்க்கை என்பது…!
04 Jul 2011 Leave a comment
“வாழ்க்கை என்பது…!”
வாழ்க்கை என்பது
இனிமையானது!
வருவது எதனையும்
ஏற்றுக்கொள்!
வாழ்க்கை என்பது
இன்பம் தருவது!
இருப்பது எதனையும்
பகிர்ந்து கொடு!
வாழ்க்கை என்பது
அனுபவமானது!
வீழ்ந்தபோதும்
எழுந்து நில்!
வாழ்க்கை என்பது
முத்தி தருவது!
இல்லறம் என்னும்
நல்லறம் பேண்!
வாழ்க்கை என்பது
விசித்திரமானது!
காட்டிய வழியில்
பயணம் செய்!
21 – உன் இதயம் சுமக்கட்டும்!
04 Jul 2011 Leave a comment
“உன் இதயம் சுமக்கட்டும்!”
உயிருள்ள
வார்த்தைகளை
உன் உதடுகள்
உதிர்க்கட்டும்!
உயர் கலை
சிற்பங்களை
உன் விரல்கள்
செதுக்கட்டும்!
உன்னத
சிந்தனையை
உன் இதயம்
சுமக்கட்டும்!
உலகம்
உள்ளவரை
உன் பெருமை
பேசட்டும்!
காலம்
உள்ளவரை
உன் கண்கள்
தேடட்டும்!
பூமி
உள்ளவரை
புன்னகை
பூக்கட்டும்!
20 – புன்னகைப் பூக்கள் மலரட்டும்!
04 Jul 2011 Leave a comment
“புன்னகைப் பூக்கள் மலரட்டும்!”
இனிய இரவுகள் மலரட்டும்!
இதமாக உன்கண்கள் வளரட்டும்!
இலட்சியக் கனவுகள் தோன்றட்டும்!
எண்ணங்கள் யாவும் நிறைவேறட்டும்!!
கற்பனை வளங்கள் பெருகட்டும்!
காவிய மலர்கள் பூக்கட்டும்!!
சிந்தனைச் சிறகுகள் விரியட்டும்!
செந்தமிழ் கலைகள் வளரட்டும்!!
காதலர் நெஞ்சங்கள் கனியட்டும்!
கண்களின் வார்த்தைகள் புரியட்டும்!!
சீரிய குணங்கள் சிறக்கட்டும்!
சீதனக் கொடுமைகள் ஒழியட்டும்!!
ஆலய மணிகள் ஒலிக்கட்டும்!
ஆயிரம் தீபங்கள் ஒளிரட்டும்!!
அறநெறி வாழ்வு நிலைக்கட்டும்!
ஆண்டான் அடிமை மறையட்டும்!!
பூமியில் யுத்தம் ஒழியட்டும்!
புதிய யுகங்கள் தோன்றட்டும்!!
புன்னகைப் பூக்கள் மலரட்டும்!
பூமியில் வசந்தம் வீசட்டும்!!
19 – மதங்களைக் காப்போம்!
04 Jul 2011 Leave a comment
“மதங்களை காப்போம்!”
எங்களுக்கு சம்மதம்
எல்லா மதங்களும்!
ஆனால்…
எங்களுக்கு வேண்டாம்
எந்த மதமும்!!
அதோ…
மனிதனுக்கு மேலே மதங்கள்!
மதங்களுக்கு கீழே மனிதன்!!
ஆச்சரியம்!!
மரங்களுக்கு மேலே வேர்கள்!
மண்ணுக்கு கீழே கிளைகள்
இருப்பது போல!
எல்லா நதிகளும்
கடலில் சங்கமம்!
எல்லா மதங்களும்
இறைவனைச்சேரும்!
மதங்கள் வேறு!
மனிதன் வேறு!!
மதத்தோடு பிறந்த
மனிதன் இல்லை!
மனிதனோடு பிறந்த
மதமும் இல்லை!!
மதங்கள் ஒருபோதும்
மனிதன் ஆவதில்லை!
மனிதன் ஒருபோதும்
மதங்கள் ஆவதில்லை!
மனிதனை எரித்துவிட்டு
மதங்களை வளர்க்கிறோம்!
வேண்டாம்…
மதங்களை விலக்கிவிட்டு
மனிதனை வாழவைப்போம்!
மதங்கள் மதங்களாகவே
இருக்கட்டும்!
நாங்கள் மனிதராக இருப்போம்!
பூமியைப் பொறுத்தவரை
மனிதனின் முதல் எதிரி
அணுவல்ல..
மதங்கள் தான்!
வல்லரசுகளே!!
அணுவுக்கு அல்ல…
முதல் விலங்கை
மதங்களுக்கு மாட்டுங்கள்!!
05/12/1999
18 – ஆயுதம்!
04 Jul 2011 Leave a comment
“ஆயுதம்!”
விலங்கின் பரிணாமம்
மனிதன்!
கல்லின் பரிணாமம்
ஆயுதம்!
மிருக வேட்டைக்கு
கல்லைக் கண்டெடுத்த மனிதன்
மனித வேட்டைக்கு
ஆயுதத்தை கண்டு பிடித்தான்!
மிருகத்தை மனிதனாக்கியது
உயிரியல் பரிணாமம்!
மனிதனை மிருகமாக்குவது
ஆயுத பரிணாமம்!
அரசன் கையில்
அன்று செங்கோல் இருந்தது!
ஆழ்வோர் கையில்
இன்று சுடுகோல் இருக்கிறது!
செங்கோல் உயர உயர
மக்கள் வாழ்ந்தனர்!
சுடுகோல் பெருக பெருக
மக்கள் அழிந்தனர்!
இதுவரை…
ஆயுதத்தை மனிதன் தயாரித்தான்!
இனிமேல்…
மனிதனை ஆயுதம் தீர்மானிக்கும்
13/01/2000
17 – சாதனை!
04 Jul 2011 Leave a comment
“சாதனை!”
எதையும்
சாதிக்கப் பிறந்தவனே!
எதனையும்
சாதிக்காமல் போய் விடாதே!
இதுவரை
நீ சாதித்தவை எல்லாம்
சாதனைகளே அல்ல..
இனிமேல் தான்
சாதிக்கப் போகின்றாய்!
சூரியனையே சுட்டெரிக்கும்
நெருப்பு உன்னுள்ளே!
வெறும் குப்பி விளக்காய்
அணைந்து விடாதே!
பெரும் புயலையே புறம்காணும்
மூச்சு உன்னுள்ளே
சிறு புல்லாங்குழல் ஊத
பயன் பட்டுவிடாதே!
இப் பூமிப்பந்தின் சரித்திரத்தையே
ஒரு நொடியில் புரட்டிவிடும்
ஆற்றல் உன்னிடம்…
பாரம் இழுக்கும் காளை மாடாய்
பலியாகி விடாதே!
நீ சாதிக்கப் பிறந்தவன்!
இதுவரை
உன் சந்ததி சொன்னது!
இனிமேல்
சரித்திரம் சொல்லட்டும்!!
13/01/2000
16 – பார்த்தேன்!
04 Jul 2011 Leave a comment
“பார்த்தேன்!”
வாசல் தெளிக்கும்
வளைக்கரங்கள் பார்த்தேன்!
கோலம் போடும்
சரிந்த குழல் அழகு பார்த்தேன்!
செக்கச் சிவந்த
நெற்றித்திலகங்கள் பார்த்தேன்!
சிந்தி வழியும்
அழகுப்புன்னகைகள் பார்த்தேன்!
பார்த்த இடமெங்கும்
பைந்தமிழைக் கண்டேன்!
பழகிய உறவுகளில்
பாசமலர்கள் கண்டேன்!
சென்ற இடமெங்கும்
சிரித்த முகம் கண்டேன்!
செப்புகின்ற வார்த்தைகளில்
செந்தமிழைக் கண்டேன்!
வந்தாரை வரவேற்கும்
வாயிற்கதவுகள் பார்த்தேன்!
வரவேற்கக் காத்திருக்கும்
வாசற்படிகள் பார்த்தேன்!
உதவிக்கரம் நீட்டும்
உறவுகளைப் பார்த்தேன்!
உரத்துப் பேசாத
உயர் குணங்கள் பார்த்தேன்!
சந்திகள் தோறும்
சந்நிதிகள் பார்த்தேன்!
சாலைகள் தோறும்
சனசந்தடிகள் பார்த்தேன்!
தெருக்கள் தோறும்
தெய்வீக இராகம் கேட்டேன்!
திருத்தலங்கள் தோறும்
மணியோசை கேட்டேன்!
பூக்கடைகள் எங்கும்
புன்னகை நிலவுகள் பார்த்தேன்!
பூத்திருந்த மல்லிகையில்
முத்துப் பல்லழகு பார்த்தேன்!
மொட்டவிழ்ந்த தாமரைகள்
முகத்தழகு பார்த்தேன்!
முகம்மூடும் சேலைக்குள்
மோகனங்கள் பார்த்தேன்!
கலைகள் வாழும்
கலைகூடங்கள் பார்த்தேன்!
கண்ணைக் கவரும்
கார்குழல் மேகங்கள் பார்த்தேன்!
கைகாட்டி விலகும்
காதலர்கள் பார்த்தேன்!
கண்சிமிட்டி போகும்
தாவணிகள் பார்த்தேன்!
15 – வியாபாரம்!
04 Jul 2011 Leave a comment
“வியாபாரம்!!”
“மொழியை விற்று
பதவிகள் வாங்கினோம்!
நாட்டை விற்று
சுடு காட்டை வாங்கினோம்!
இனத்தை விற்று
அரசியல் வாங்கினோம்!!
அந்நிய தேசத்தில்
எங்களை விற்கிறோம்
எதுவுமே வாங்காமல்!!”
13/01/2000
14 – நாளைய மனிதன்!
04 Jul 2011 Leave a comment
“நாளைய மனிதன்!”
மனிதனுக்குரிய
மதிப்பீடுகள் குறையும்!
ஆனால்…
மிகச்சக்தி வாய்ந்த
இயந்திரமும் அவன்தான்!
ஆண்டுகள் தோறும்
தன்னையும்
வடிவமைத்துக்கொள்வான்!
மனித மூளை
ஒரு சிம் (SIM) அளவில்
செறிவாக்கம் செய்யப்பட்டு
பொருத்தப்படும்!
இதுவரை..
ஆண் பெண் வேறுபாடு
இயற்கையின் நியதி!
இனிமேல்…
அவன் விருப்பப்படி!
எங்கும் நடக்கும்
கலப்புத் திருமணம்…
கன்னிக்கும் கணனிக்கும்!
சிறு பொத்தானில் அடங்கும்
சூரிய(னி) குடும்பம்!
தேவைக்கேற்ப
கணனி தீர்மானிக்கும்
கால நகர்வு… காற்று மழை…
புவிச்சுழற்சி!
உலகின் குடிப்பரம்பல்
ஏனைய கிரகங்களுக்கும்
நகர்த்தப்படும்!
அணு பரிசோதனைகளுக்கு
பூமியில் களம் அமையும்!
செவ்வாய்க் கிரகத்திலிருந்து
பூமி இயக்கப்படும்!
இயந்திர மனிதன்
பூமியை மட்டுமல்ல
பிரபஞ்சத்தையும் காவல் காப்பான்!
ஆயுதங்கள்…
ஏவுகணைகள்…டாங்கிகள்… புடைசூழ
இயந்திரமனிதன் அணிவகுத்து செல்வான்
நாளைய மனிதனோ
குண்டு துளைக்காத கூண்டிற்குள்
பதுங்கி இருப்பான்!
05/12/1999
13 – அன்பு!
04 Jul 2011 Leave a comment
“அன்பு!”
இதயத்தின்
மெல்லிய சுவர்களில்
இது ஊற்றெடுக்கிறது!
உயிரின் துல்லியமான
அதிர்வுகளால்
இது பயிராகிறது!
பாசம் விளையும்
மனித நிலங்களில்
இது பூத்து குலுங்குகிறது!
பண்பெனும்
நீர்ப்பாசனம் பெற்று
இது முற்றிக்கதிராகிறது!
முகங்கள் காணாமல்
அன்பு முளைப்பதில்லை!
யார் சொன்ன பொய் இது??
இதோ…
வார்த்தைகள் சுமந்து வரும்
மலர்களில் தானே
வாசனை அதிகம் இருக்கிறதே!!
05/12/1999