02 – தர்ஷினி கவிதைகள்!

“வல்லமை தாராயோ!

ஆய்வுரை..

தடங்கள் தவறாமல் தளம் வகுத்து,

தாயக மண்ணில் கால் பதித்து,

மண் வாசனையோடு

கவிதை மலர் வாசனையும் தூவும்

தர்ஷினி கனகசபைக்கு முதற்கண்

எனது நல்வாழ்த்துக்களும்! நல்லாசிகளும்!!

வாழ்க்கையின் பல கோணங்களை,

மனித வாழ்வின் ஏக்கங்களை,

ஆசையின் அழகுக் கோலங்களை

அன்புப் பிடியின் தவிப்புக்களை,

பெற்றோரின் பாசங்களை,

பிரிக்க முடியாத நேசங்களை

அள்ளித் தெளிக்கும் அன்புகளை,

அடங்க மறுக்கும் ஆசைகளை

மிகவும் அற்புதமாக…

அழகுத் தமிழில் கவியமுது படைக்கும்

இந்த இளம் கவிதாயினிக்கு 

ஆசியுரை எழுதுவதில்

என் பேனா மிக அகமகிழ்கிறது!

யாழ்ப்பாணத்திலுள்ள

புவிச்சரிதவியல் பணியகத்தில் 

தொழில் உதவிப் பணியாளராக

பணி புரியும் இவர்,

பள்ளி நாட்களில் சிறுகதை,

கவிதை போட்டிகளில் பங்கு பற்றி

முதல் பரிசையே எப்போதும் தட்டி வருவார்.

பேராதனை பல்கலைகழகத்தில்

பட்டப் படிப்பை மேற்கொண்ட காலத்தில்

இவர் எழுதிய பல கவிதைகள்

பல்கலைகழக வெளியீடான

சங்கப் பலகையிலும்  வெளிவந்து

எல்லோரினதும் வாழ்த்துக்களையும்

பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

தவிர இவர் எழுதிய

பல இசையும் கதையும் என்ற

வானொலி நாடகங்கள் பல

தமிழ் வானொலிகளில் ஒலிபரப்பாகியிருக்கின்றன.

கவிதையின் மிக உயர்ந்த பண்பு உணர்வுதான்!

வடிவம் எதுவாகவும் இருக்கலாம்!

ஆனால் அது எதோ ஒரு இரசத்தைப் பேசவேண்டும்!

காதல், அன்பு, சோகம், பாசம்,

உறவு, பிரிவு, வீரம், விடுதலை

எதுவாகவும் இருக்கலாம்!

கவிதை என்பது…

கன்னியைப்போல கண்ஜாடை காட்டிப்பேசும்! 

அத்தகைய அற்புதமான

கவிதைப் பூக்கள் பலவற்றை

இத்தொகுப்பில் எங்கும் காண முடிகிறது!

உங்கள் பார்வைக்காக

அவற்றில் சிலவற்றை  இங்கே

பறித்து வருகிறேன்!

முதற் சம்பளம் என்ற கவிதையில்

எமது சமுதாயத்தின்

ஆணாதிக்கத்தை சாடுகிறார் மிகவும் நயமாக…

………சம்பளம்

கணவன் கையில்

கனத்தது மனது…

கண்களில் கண்ணீர்..

பாவிகள் என்ற கவிதையில்…

பணம் ஏற்படுத்தும் அவலங்களை

மிக அழகாக சித்தரிக்கின்றார்!

பணம் இல்லாமல்

தன் வாழ்வு சிதறடிக்கப்பட்டதாக புலம்புகிறாள்

அங்கொருத்தி…

பணம் தான் தன்னுடைய வாழ்க்கையை

சிதைத்து விட்டதாக புலம்புகிறாள்

இங்கொருத்தி…

முடியுமா உங்களால்? என்ற கவிதையில்

தாயகத்தின் அவலங்களை படம்பிடித்து காட்டுகிறார்.

…..துரத்தி வந்த துப்பாக்கி குண்டுகளில்

மாண்டு போன

என் அம்மாவும்….

மாமாவும்…

மறுநாள்

ஆட்லறியில்…

துடிதுடித்து செத்துப்போன.. என்

அப்பாவும் தங்கையும்…

அள்ளி எடுத்து அழவும் முடியவில்லை…

மனிதம் II” என்ற கவிதையில்

மனிதத்தை தேடுகிறார்.

மாளிகையில் தொலைந்துபோன

மனிதத்தைத் தேடினேன்.. அது

குடிசை வீட்டில்

குந்தியிருந்தது

மரணத்தின் பின் என்றொரு கவிதையில்

எனக்காக இந்த உலகம் 

சுற்றாமல் நிற்கப் போவதில்லை

என்பதனை மிகவும் நுட்பமாகவும்

மிகவும் அழகாவும் சொல்லுகின்றார்.

முற்றத்து மல்லிகையும்

வேலியோர செம்பரத்தையும்

வழமை போல் பூக்கத்தான் போகின்றன…

ஆனாலும்

நானறிய மாட்டேன்

விதவை என்றொரு கவிதையில்

போர்ச்சூழலில் கிழிந்து நொந்து போன

ஒரு சமுதாயம் விதவை பெண்களை

எப்படி நடத்துகின்றது என்பதனை

மிகவும் வேதனையோடு விபரிக்கின்றார்.

இப்போது மொத்தக் குடும்பத்திற்கும்

நான்தான் வேலைக்காரி.

இருபத்தைந்தில் திருமணம்

இருபத்தியாறில் விதவையாதலால்..

அறுவடை என்றொரு கவிதையில்

எமது அழகான தாயகத்தை

எப்படி படம் பிடிக்கின்றார் பாருங்கள்..

எங்களூரில்…

இப்போது அறுவடைக்காலம்..

விதைக்கப்பட்ட பயிர்களுக்கல்ல..

மிதிவெடிகளுக்கு..

முரண் என்றொரு கவிதையில்

எமது தாயகம் கிழிந்து போனாலும் 

எமது பண்பாடு இன்னும் கலைந்து போகவில்லை

என்பதைக் கூறவந்த கவிஞர்…

கண்ணா நீ போ… இனி

அவள் அண்ணாவுடன்தான் வருவாள்

அம்மா சொன்னாள்

அவனுக்கும் புரியவில்லை

எனக்கும் புரியவில்லை.

ஆத்மாவின் குரல் என்றொரு கவிதையில்..

எங்களின் கண்களை பனிக்க வைக்கின்றார்.

ஏழு வயது குழந்தையின் ஆத்மா அழுகிறது…

செத்துப் போன இந்நாளில்

திவசம் நீர் செய்ய

வந்திருந்து பார்க்கிறேன்..

வார்த்தைகள் வரவில்லை..

கண்களில் நீர் கோர்க்கின்றேன்..

அம்மா….

ஏன் கொன்றார் என்னை….?

எங்களின் கண்களை பனிக்க வைத்த 

இந்த இளம் கவிதாயினியின்

கன்னி முயற்சிக்கு

தமிழ் கூறும் நல்லுலகம் 

இன்முகம் காட்டி இனிது வரவேற்கும்!

வாழ்க தமிழ்! வளர்க இளம்கவியே!!

பழுதுகள் ஏதுமின்றி

பல கவிதை நீ யாத்து

விழுதுகள் பலவிறக்கி

வெற்றி வாகை நீ சூடு!

பூக்கள் தூவுவது….

ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்

ரியாத், சவூதி அரபியா

20/05/2011

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: