12 – முத்தான உறவுகளே!

முத்தான உறவுகளே!”

 

முகம்காட்டிச் சிரிக்கின்ற

முத்தான உறவுகளே!

முகம்காட்ட மறுக்கின்ற

முகமறியா நிலவுகளே!

அகம்காட்டிச் சிரிக்கின்ற

அன்பான உறவுகளே!

அறியாது உறவுகொள்ளும்

அடையாளச் சின்னங்களே!

கரையேற வழியின்றி

கரைந்துவிட்டோம் முகநூலில்

திசையேதும் அறியாமல்

திக்கெட்டும் அலைகின்றோம்!

உறவோடு உறவாடி!

உயிரோடு உயிர்தேடி!

உலவுகின்ற நாம்இங்கே

ஒருதாயின் பிள்ளைகளே!

கனவுகள் கலையவேண்டாம்!

காதலர்கள் பிரியவேண்டாம்!

உறவுகள் மலரவேண்டும்!

உன்னதம் பெருகவேண்டும்!

தடையேதும் இல்லைஇங்கே!

தரணிஎங்கும் போய்வரலாம்!

தமிழோடு உறவாடி!

தமிழாலே நாம்இணைவோம்!

பேசுவது தமிழ் என்றால்

பிள்ளைத்தமிழ் பிழைபொறுப்போம்!

எழுதுவது தமிழ் என்றால்

இலக்கணத்தைத் தள்ளிவைப்போம்!

முகநூலை அலங்கரிப்போம்!

முத்தான தமிழ்மொழியால்!

முடிந்தவரை முயற்சிப்போம்

முத்தமிழை நாம்வளர்ப்போம்!

11 – மானுடம் பிழைக்கட்டும்!

மானுடம் பிழைக்கட்டும்!

 

போதும் மனிதா போதும்!!

கொஞ்சம் விடு

இந்த பூமி கருத்தரிக்கட்டும்!

உன் ஆள்காட்டி விரல்

அசைந்தாலே போதும்

பூமி என்ன

இந்த பிரபஞ்சமே இறந்துவிடும்!

மன்னித்துவிடு!

முடியவில்லையா போகட்டும்

இந்த மானுடத்தையாவது

வேறொரு கிரகத்துக்கு

நாடுகடத்து…

அகதிகளாகவேனும்

உயிர் பிழைக்கட்டும்!

10 – இதுவரை…!

இதுவரை…!

 

இதுவரை…

இவன் எழுதியது

கவிதைகளே அல்ல…

என்றேனும் ஒரு நாள்

இவனும்

கவிதைகள் எழுதுவான்!

09 – பணம்!

பணம்!

 

உன்னைத் தேடுகிறேன்

மிக நீண்ட காலமாக!

நிச்சயம்

ஒரு நாள் கண்டுபிடிப்பேன்

அதுவரை…

உன் விலாசத்தை

மாற்றிக்கொள்ளாதே!

08 – தோல்விகள்!

தோல்விகள்!

 

தோல்விகளை

நேசிக்கத் தெரிந்துகொள்!

வெற்றியின் இரகசியம்

உனக்குப் புரியும்!

தோல்விகள்

உன்னைத் துரத்தும்போது

புறமுதுகு காட்டாதே!

நேர் நின்று பொருது!

வாள் எடுத்து வீசு!

07 – பதிவு!

பதிவு!

 

வாழ்க்கையை

பதிவு செய்தல் என்பதுவும்

ஒருவித கலைதான்!

சுய வாழ்க்கையை

பதிவு செய்வதாயின்

உனக்கு ஒரு வரலாறு

இருக்கவேண்டும்!

முதலில்

விலாசத்தை தேடிக்கொள்

வரலாறு

தன்னைத்தானே பதிவு செய்யும்!

06 – கனவுகள்!

கனவுகள்!

 

உன்னோடு

கனவுகள் தூங்கலாம்!

ஆனால்

கனவுகளோடு

நீ தூங்கிவிடாதே!

கண் துயிலும்போது

உன்னை

வெற்றி கொள்ளும் கனவுகள்

கண் விழித்தபோது

ஏன் தோற்றுப் போய்விடுகின்றன?

தினமும் கனவுகள் உன்னை

வெற்றி கொள்ளட்டும்!

என்றேனும் ஒருநாள்

கனவுகளை

நீ வெற்றி கொள்வாய்!

05 – பலவீனம்!

பலவீனம்!

 

உன் பலம்

உனக்குத் தெரியாமல்

இருக்கலாம்!

ஆனால்…

உன் பலவீனத்தை

தெரியாமல்

இருந்துவிடாதே!

உன் பலத்தால்

ஒரு சிறு அறுகம் புல்லைத்தானும்

அசைக்க முடியாமல் போகலாம்!

ஆனால்

உன் பலவீனத்தால்

பெரும் மலையைக் கூட

பெயர்த்துவிடலாம்!

04 – உச்சித்தவம்!

உச்சித்தவம்!

 

உனக்குள்ளே…

ஓமம் வளர்த்து

யாகத் தீ மூட்டி

ஒற்றைக்கால் தவம் நடத்து!

உன் உச்சித்தவம் கண்டு

உலகம் வியக்கட்டும்!

அதுவரை…

ஆயிரம்

மணி முடிகள் சூட்டுவார்கள்

தாங்கிக்கொள்ளாதே!

ஆயிரம்

பொன்னாடை போர்த்துவார்கள்

வாங்கிக்கொள்ளாதே!

11 – சித்திராவின் பிறந்தநாள்!

03 – சிகரங்கள்!

சிகரங்கள்!

 

வானத்தையே

வளைத்துப் போடும்

வல்லமை

உன்னிடம் இருக்கும்போது

இந்த

சிகரங்கள் எம்மாத்திரம்?

வில்லை வளைத்து

நாணைப்பூட்டி எய்துபார்..

சிகரங்கள் எல்லாம்

உன் காலடியில்

வந்து விழும்!

02 – பூக்கள்!

பூக்கள்!

 

பூக்களாயின்

அள்ளிச் சொரியுங்கள்!

முட்களாயின்

எடுத்து எறியுங்கள்!

வசைகளாயின்

அள்ளி வீசுங்கள்!

வாழ்த்துக்களாயின்

மனதார வாழ்த்துக்கள்!

01 – ஆவணம்!

ஆவணம்!

 

காலத்தை

எழுதி முடிக்கும் முன்னமே

கவிஞனை

காலம் எழுதி விடுகிறது!

இன்னும் இரண்டாயிரம்

ஆண்டுகளுக்குப் பின்

என் வழித்தோன்றல் ஒருவன்

என் கவிதைகளை

தோண்டி எடுப்பான்!

அவனுக்காக

இதனை ஆவணப் படுத்துகிறேன்!

06 – அந்தி வானம்!

அந்தி வானம்!

 

அந்தி வானம் சிவக்கிறது!

அந்திப் பொழுது சாய்கிறது!

தென்றலது தவழ்ந்து வந்து

தேன்நிலாவை அழைக்கிறது!

மிதந்து வரும் முகிலினங்கள்

மெதுவாக நகர்கின்றன!

மீண்டு வரும் புள்ளினங்கள்

கூண்டிற்கு ஏகின்றன!

பாடிவரும் வண்டினங்கள்

பறந்தோடி மீள்கின்றன!

ஆடிவரும் மயிலினங்கள்

அந்தி கண்டு மகிழ்கின்றன!

கூடிவிட அலைகடலும்

குளிர் நிலவைத் தேடுகிறாள்!

தேடிவந்த  மான்விழியாள் 

திசைநோக்கிக் காத்திருந்தாள்!

05 – நிலவு!

 நிலவு!

 

பாலாடை கட்டி வரும்

பருவப் பெண்ணே!

உன்மேலாடை மூடுவதன்

மர்மம் என்ன?

தோளோடு தோள்சேர்ந்த

கள்வன் எங்கே?

தொலைதூரம் போனானோ

திரும்பவில்லை?

துயர்தாங்க முடியாமல்

நீயும் அங்கே

தூதுவிட்டா ஏங்குகிறாய்

அவனை எண்ணி?

தொலைதூரம் போனவனும்

ஒருநாள் வந்து

தோகை மயில் நீசிரிக்க

தொட்டணைப்பான்!

04 – மழை!

மழை!!

 

பூமிக்கு

வானம் நடாத்தும்

பூப்புனித நீராட்டுவிழா!

பூமியின்

உச்சி குளிரும்!

உடலெங்கும் நனையும்!

நாணத்தில்

பூமி நெளியும்!

மஞ்சள் பூசும்!

கூந்தல் நீவி

முதுகு தேய்த்துவிடும்!

பூமி புன்னகைக்கும்!

பொட்டு வைத்துக்கொள்ளும்!

புத்தாடை புனைந்து

புதுப்பெண் போல

பூமி வெட்கப்படும்!

ஊடலில்

திளைத்த பூமி

இப்போது

கூடலுக்குத் தயாராகிவிடும்!

வானம் சாந்தி பெறும்!

பூமியோ

சிலிர்த்துக் கொள்ளும்!

03 – கண் விழித்தெழுவாய்!

கண் விழித்தெழுவாய்!”

 

காலைக் கதிரே! கண் விழித்தெழுவாய்!

கதிரொளி பரப்பி! காரிருள் களைவாய்!

பொற்சுடர் பரப்பி! பூமியில் விரைவாய்!

புதுப்பொலிவோடு பூமகள் சிரிப்பாள்!

பொய்கையில் தாமரை பூமுகம் மலர்வாள்!

புன்னகை புரிந்தே பொலிவுடன் திகழ்வாள்!

பள்ளி எழுந்துவிடு! பகற்பொழுது விடியட்டும்!

துள்ளி எழுந்துவிடு! கீழ்வானம் சிவக்கட்டும்!

கூவும் குயிலொன்று கூவுவது கேட்கலையோ!

பாடும் வண்டொன்று பாடுவது கேட்கலையோ!

சோலைக் குயிலொன்று சோதிமுகம் தேடுதிங்கே!

பூஞ்சோலைக் கிளியொன்று புதுராகம் பாடுதிங்கே!!

02 – தாம்பத்திய தர்மம்!

தாம்பத்திய தர்மம்!”

 

தென்றலே!

நீ யாரைக்கண்டு

மயங்குகிறாய்?

ஓ..!

உன் நிலவுக்காதலனின்

சேதி கிடைத்ததா?

அதுசரி..

அவன் வரும் நேரமாகிறதே!!

ஏன் இன்னும் நீ

அலங்காரம் செய்து கொள்ளவில்லை?

மாறாக…

உன் கூந்தலை ஏன்

அவிழ்த்துப் போட்டிருக்கிறாய்??

சூரியனிடத்தில்  நீயும்

சோரம் போனாயா?

தப்பு…

அவன் தான் உன்னை

வம்புக்கிழுத்திருப்பான்!

அதோ பார்!!

பொய்கையிலே நின்று

இதுவரைக்கும் அவனுடன்

தாம்பத்தியம் நடத்திய தாமரை

முகம் வாடி அழுகிறாள்!

ஆமா..

உன் சக்களத்தி அல்லி

என்ன ஆனாள்??

உனக்குத்தெரியாத

தாம்பத்திய தர்மமா?

05/12/1999

01 – கதிரோனை நாம் புகழ்வோம்!

கதிரோனை நாம் புகழ்வோம்!”

 

சோலை குயிலுக்கு

சொல்லுங்கள் முதல்வணக்கம்!

தோகை மயிலுக்கு

தூவுங்கள் அகவணக்கம்!

பாடும் பறவைகளே

பறந்தோடி வாருங்கள்!

பாச மலரொன்று

பாடுவதைக் கேளுங்கள்!

காலைச் சூரியனே!

கதிரொளியே எழுந்திடுக!

கண்கள் சிவந்துவிடு!

காரிருளைக் களைந்துவிடு!

கத்தும் கடலலையே!

கரைமோதி மீளுங்கள்!

கமல மலரினமே!

கதிரோனை வணங்குங்கள்!

தென்றல் காற்றே!

திக்கெட்டும் வீசிடுக!

தென்னங் கீற்றே!

இசைமீட்டிப் பாடிடுக!

தேடும் வண்டினமே!

வாசமலர் தேடுங்கள்!

சுரக்கும் ஆவினமே!

பாலமுதைச் சொரியுங்கள்!

கூந்தல் மலர்சூடி

கூறுங்கள் நேசத்தை!

காலை மலர்ந்ததென்று

களிநடனம் ஆடுங்கள்!

காலைச் சூரியனை

வணங்கி நாம் தொழுவோம்!

கமல மலர்தூவி

கதிரோனை நாம் புகழ்வோம்!

18-04-2011

09 – பூமியில் தெய்வம் என்றார்!

பூமியில் தெய்வம் என்றார்!!

 

பூமியில் தெய்வம் என்றார்!

பெண்ணென்று உன்னைச் சொன்னார்!

பூக்களின் மென்மை என்றார்!

பெண்களின் தன்மை என்றார்!

கண்களில் கனிவு என்றார்!

கண்மணி உன்னைச் சொன்னார்!

திங்களின் குளிர்மை என்றார்!

தேவிஉன் தேகம் என்றர்!

செந்தமிழ் சுவைகள் என்றார்!

தேன்தரும் இதழ்கள் என்றார்!

பொங்கிடும் அலைகள் என்றார்!

பொறுமையின் சின்னம் என்றார்!

பாசத்தில் தாய்மை என்றார்!

பக்கத்தில் துணையும் என்றார்!

தேசத்தின் விடியல் என்றார்!

திக்கெட்டும் உனைப் புகழ்ந்தார்!

Previous Older Entries Next Newer Entries