17 – செல்வமகள் உன்நினைவால்!
01 Jul 2011 Leave a comment
“செல்வமகள் உன்நினைவால்!”
தென்றல் வீசுதம்மா!
செவ்வந்தி பூக்குதம்மா!
சேயிழையே உன்நினைவால்
சிந்தை மிக வாடுதம்மா!
காலம் நகருதம்மா!
கண்கள் பனிக்குதம்மா!
கண்மணியே உன்பிரிவால்
கைகால்கள் சோருதம்மா!
தெய்வம் பொய்த்தம்மா!
செய்த தவங்கள் பிழைத்ததம்மா!
செல்லவமகள் உன் நினைவால்
சித்தம் தொலைந்ததம்மா!
பொழுது புலருதம்மா!
பொய்கை மலர் பூக்குதம்மா!
பொன்மகளே உன் நினைவால்
பூமியில் நாம் வாடுகிறோம்!
22-08-2000
16 – பூமியிலே உன்பாதம்!
01 Jul 2011 Leave a comment
“பூமியிலே உன்பாதம்!”
பிள்ளை நீ தெய்வம் அம்மா!
பேசும் மொழி கீதம் அம்மா!
கொள்ளையிடும் சிரிப்பினிலே
கோடிசுகம் இருக்குதம்மா!
(பிள்ளை நீ…..)
துள்ளி எழு மயிலே நீ!
தூங்கியது போதும் அம்மா!
பள்ளி செல்லும் நேரமிது
பாங்கியர்கள் தேடுகிறார்!
(பிள்ளை நீ…..)
தென்றலிலே உன் மூச்சு
சேர்ந்து மணம் வீசுதம்மா!
திசையெல்லாம் உன் புகழை
சொல்லி மனம் ஆறுதம்மா!
(பிள்ளை நீ…..)
சோலையிலே பூக்கள் எல்லாம்
சோர்ந்து மனம் வாடுதம்மா!
சொர்கத்தின் திரை விலக்கி
சிரித்த முகம் காட்டுமம்மா!
(பிள்ளை நீ…..)
கொட்டுமேளம் கொட்டவில்லை!
கோடி மலர் வாழ்த்தவில்லை!
பட்டாடை கட்டி நீயும்
பவனிவரப் பார்த்ததில்லை!
(பிள்ளை நீ…..)
குத்து விளக்கேற்றவில்லை!
குலைவாழை நிறுத்தவில்லை!
கோடி சனம் கூடிவந்து
கொண்டாடிப் போனதில்லை!
(பிள்ளை நீ…..)
போனவழி பார்த்திருப்போம்! – எங்கள்
பொன்மகளே நீர் வாரும்!
பூமியிலே உன் பாதம் – நாங்கள்
பூஜிப்போம் நாள் தோறும!
(பிள்ளை நீ…..)
13-04-1999
15 – கற்பூரம் நீ!
01 Jul 2011 Leave a comment
“கற்பூரம் நீ!”
காற்றினில் கரையாத
கற்பூரம் நீ!
கடலினில் கிடைக்காத
நல்முத்தும் நீ!
பூமியில் விளையாத
புது வைரம் நீ!
புன்னகையில் மாறாத
பொற்சிலையும் நீ!
மண்ணிலே கிடைக்காத
மாணிக்கம் நீ!
மனங்களிலே நீங்காத
மணிமுடியும் நீ!
தென்றலிலே பிறவாத
தென்பாங்கு நீ!
தேனமுதில் சுவைக்காத
செந்தமிழும் நீ!
சொந்தங்கள் தாராத
உறவுகளும் நீ!
சொற்களில் வாராத
சொத்துசுகம் நீ!
கல்வியிலே குன்றாத
கலைமகளும் நீ!
காலத்தால் அழியாத
காவியமும் நீ!
நேசத்தில் இனிக்கின்ற
எம்மகளே கேளும்!
நெஞ்சத்தில் சுமக்கின்றோம்
நினதன்பை நாளும்!
20-04-1999
14 – காலமெல்லாம் நாங்கள்!
01 Jul 2011 Leave a comment
“காலமெல்லாம் நாங்கள்!“
காலையில் மலர்ந்து
மாலையில் வாடிவிடும்
மலர்களைப் போல!
அதி காலையில் தோன்றி
அந்திமாலையில் மறையும்
ஆதவனைப் போல!
கருவறையில் உருவாகி
கல்லறையில் கரைந்துபோகும்
மனித வாழ்வைப் போல!
கண்களிலே கருவாகி
நெஞ்சினிலே கோவில் கொண்ட
எங்கள் நேசமலரே!
நெஞ்சத்தாமரையே!
காலமெல்லாம் நாங்கள்
கைகள் கூப்புகிறோம்!
கண்மலர்கள் சாத்துகிறோம்!
21-03-2000
13 – நெஞ்சம் தாங்கிடுமோ?
01 Jul 2011 Leave a comment
“நெஞ்சம் தாங்கிடுமோ?”
காலைக் கதிரொளியே!
எங்கள்
கண்ணின் கருவிழியே!
சோலைக் கிளிமொழியே!
எங்கள்
தோகை மயிலழகே!
ஆசைக் கனியமுதே!
எங்கள்
அன்பின் திருவுருவே!
நேசம் மறந்திடுமோ?
எங்கள்
நெஞ்சம் தாங்கிடுமோ?
19-04-2000
12 – இன்னும் எத்தனை பிறவிகள்?
01 Jul 2011 Leave a comment
“இன்னும் எத்தனை பிறவிகள்?”
முத்துப் பற்களும்!
முகிழ் சிரிப்பும்!
சிறிய புருவமும்!
சிவந்த உருவமும்!
பிறை நிலா நெற்றியில்
பெளர்ணமி பொட்டும் காண
எங்கள்
அன்புச் செல்வமே!
ஆசைத்திலகமே!
இன்னும்
எத்தனை பிறவிகள்
நாங்கள்
தவமிருக்கவேண்டும்?
21-03-2000
11 – எந்நாளும் நீயே!
01 Jul 2011 Leave a comment
“எந்நாளும் நீயே!”
நாம் செய்த தவமெல்லாம்
வீணாகிய தேனோ?
நாளெல்லாம் உமை நினைந்து
நாம் வாடுதல் முறையோ?
கண் மணியே நீ உறங்க!
கண்களிலே நீர் இறங்க!
காலமெல்லாம் துயர்சுமந்த
கரைகாணா வாழ்வெதற்கு?
ஒளிநிலவே! இளம் பிறையே!
உமைப் பிரிந்த நாள் முதலாய்
ஒளியிழந்தோம் வாழ்வினிலே
உயிர்மூச்சு வாங்குகிறோம்!
எம் உள்ளத்தில் உறைகின்ற
எமதருமை மகளே!
எம் எண்ணத்தில் நிறைகின்றாய்
எந்நாளும் நீயே!
20-04-1999
10 – எங்களின் மகளே வா!
01 Jul 2011 Leave a comment
“எங்களின் மகளே வா!”
திங்களின் மகளே வா!
செந்தமிழ் சுவையே வா!
எங்களின் மகளே வா!
இன்னொரு நிலேவே வா!
ஆதவன் மகளே வா!
ஆயிரம் நிலவே வா!
ஆலய மணியே வா!
ஆயிரம் ஒளியே வா!
பூமியின் மகளே வா!
புன்னகை மலரே வா!
எங்களின் மகளே வா!
இன்னொரு நிலவே வா!
அன்பெனும் நதியே வா!
ஆழ்கடல் முத்தே வா!
பண்பெனும் உருவே வா!
பெளர்ணமி நிலவே வா!
22-08-2000
09 – நீ எங்கள் தங்க நிலா!
01 Jul 2011 Leave a comment
“நீ எங்கள் தங்க நிலா!”
எங்கள் இல்லத்தில் மட்டுமல்ல..
உள்ளத்திலும்
ஒளிவீசிக் கொண்டிருந்த
எங்கள் தங்க நிலா
இன்று அணைந்துவிட்டது!
எங்கும் எவ்வேளையிலும்
மணம் பரப்பிக் கொண்டிருந்த
எங்கள் மஞ்சள் தாமரை
இன்று மறைந்து விட்டது!
எங்கள் வண்ணப் பூங்காவின்
மிக அற்புத ஆணிவேர் ஒன்று
இன்று அறுந்துவிட்டது!
எங்கள் இல்லம்
இருளை எடுத்து
போர்த்திக் கொள்கிறது!
எங்கள் இதயமோ
இரத்த நாளங்களிலிருந்து
வெடித்துச்சிதறி வேறாகிவிட்டது!
காலத்தால் அழியாத
எங்கள் காவியத்தை!
உதிரத்தால் எழுதிய
ஓர் உன்னத இலக்கியத்தை
கருணை ஒரு சிறிதுமின்றி
இறைவன் தன கைகளாலேயே
கிழித்துப் போட்டுவிட்டான்!
காலதேவன்
எழுதிவந்த கணக்கு
பிழைத்துவிட்டது!
இறைவன்
தப்பான ஒரு தீர்ப்பினை
வழங்கியமைக்காக
தன்னிலையிலிருந்து
தாழ்ந்துவிட்டான்!
12-05-1999