05 – பாதங்கள் தொழுகின்றேன்!
22 Jul 2011 3 Comments
“பாதங்கள் தொழுகின்றேன்!”
பாதங்கள் தொழுகின்றேன்!
பாடியுமை மகிழ்கின்றேன்!
பக்தியுடன் உமைநினைந்தே
பாரினிலே வாழ்கின்றேன்!
தாயேஉன் முகமறியேன்!
தவறென்ன நான்செய்தேன்?
பாவியெனைப் புறந்தந்தே
பாதிவழி போயினையோ?
முந்தித் தவமிருந்தாய்!
முன்னூறு நாள் சுமந்தாய்!
வந்து பிறந்த என்னை!
வளர்த்தெடுக்க நீயில்லை!
கொடிய நோய் வந்து
கொடிமரமே சாய்ந்தாயோ!
பிரிய மனமின்றி
பிரிந்து நீயும் சென்றாயோ!
காலன் வகுத்த விதி
கனிமரமே கண்மறைந்தாய்!
சேய்நான் அருகிருந்தும்
செய்யவில்லை ஒருதொண்டும்!
உள்ளம் குளிரவைத்து
உச்சி மோந்தாயே!
உயிருள்ள வரை நாளும்
உம்பாதம் நான் துதிப்பேன்!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
17/07/2011
04- முதல் அஞ்சலி!
01 Jul 2011 1 Comment
“முதல் அஞ்சலி!!”
இலக்கணம் மீறிய கவிதை!
இல்லக்கணம் தவறினாலும்
ஒரு நல்ல கவிதை
தனக்குரிய இலக்கணத்தை
தானே வகுத்துக்கொள்ளும்!
கவிதைக்கு மட்டுமல்ல…
வாழ்க்கைக்கும் இது பொருந்தும்!
இலக்கணங்கள் இங்கே
மீறப்பட்டாலும்
கவிதை கவிதைதான்!
வாழ்க்கை வாழ்க்கைதான்!!
இலக்கணம் மீறிய கவிதை போல
முகவரி தவறியவன் என்பதனாலோ
என் பெயரும் இங்கே
பொறிக்கப்படவில்லை!
ஒரு கவிதையைப் போல
எனக்குரிய இலக்கணத்தை
நானே வகுத்துக் கொள்ளுகிறேன்!
ஒரு நதியைப் போல
எனக்குரிய கரைகளை
நானே செதுக்கிக் கொள்ளுகிறேன்!
எனக்குரிய தாலாட்டைக்கூட
நானே பாடியபடி
தூங்கியிருக்கிறேன்!
என் கல்லறை
வாக்கியத்தைத்தானும்
நானே எழுதி வைத்திருக்கிறேன்!
இது அஞ்சலி அல்ல…
இது ஒரு
இலக்கணம் மீறிய கவிதை!
இதுவரை
எந்த ஒரு மகனுக்கும்
கிடைக்காத பாக்கியம் ஒன்றை
எனக்குத் தந்து சென்றீர்கள்!
தங்கள் கல்லறையை
என் கவிதை வரிகளால்
அலங்கரிக்கின்றேன்!
“இங்கே என் தந்தையார்
தவமிருக்கின்றார்!
யாரும் கலைத்து விடாதீர்கள்!”
“எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
இவனே எனக்கு
மகனாகப் பிறக்கவேண்டும்”
என்ற வரம் வேண்டி..”
“இங்கே என் தந்தையார்
தவமிருக்கின்றார்!
யாரும் கலைத்து விடாதீர்கள்!”
05.04.2003