02 – பகிர்ந்துண்போம் பொங்கலை…!

பகிர்ந்துண்போம் பொங்கலைநாம்!”

 

காலை குளித்தெழுந்து!

கதிரவனைக் கரம் குவித்து

கழுவி நிலம் மெழுகி

கணபதியை கொலுவிருத்தி

கோலமிட்டு விளக்கேற்றி

மாவிலைத் தோரணங்கள்!

மஞ்சளோடு குங்குமமும்

திருநீறும் குழைத்தெடுத்து!

புத்தாடை புனைந்தங்கே

புதுப்பானை உலைஏற்றி

பொங்கிவரும் வேளையிலே

தலைவாழை இலைபோட்டு!

பால்பழங்கள் கரும்போடு

படைஅமுதும் பொங்கிவைத்து

பகலவனைப் பணிந்துநின்று!

பகிர்ந்துண்போம் பொங்கலைநாம்

14-01-2011

01 – பொங்கல் வாழ்த்து!

பொங்கல் வாழ்த்து!”

 

மங்கலம் பொங்கும் – இத்

தைத்திங்கள் திருநாளில்

பொங்கல் பொங்குவோம் – புதுப்

பொங்கல் பொங்குவோம்!

கார்வளம் செழித்தோங்கப்

பொங்கல் பொங்குவோம்!

போர்வளம் இலாதொழியப்

பொங்கல் பொங்குவோம்!

மாநிலம் செழித்தோங்கப்

பொங்கல் பொங்குவோம்!

மனிதஇனம் தழைத்தோங்கப்

பொங்கல் பொங்குவோம்!

இன்னல்கள் இலாதொழியப்

பொங்கல் பொங்குவோம்!

சென்னல் வளம் சிறக்கப்

பொங்கல் பொங்குவோம்!