05 – அகல் விளக்கு!
01 Jul 2011 Leave a comment
in 12. வாழ்த்துக்கள் பாடுவோம்!
“அகல் விளக்கு!!”
இருண்ட என் வாழ்வில்
ஓர் அகல் விளக்கைத் தேடினேன்!
ஆயிரம் தீபங்கள்
அணையாது ஒளிரும்
ஆலயம் ஒன்று
எனக்குப் பரிசாகத் தரப்பட்டது!
உன் பூஜைக்காக
தினமும் என் இதயக் குளத்தில்
ஆயிரம் பூக்களை பூப்பிப்பேன்!
ஆனால் நீயோ…
அதிகாலையில்
உன் புன்னகைப் பூ ஒன்றாலேயே
என்னை அர்ச்சனை செய்து விடுவாய்!
உன் நினைவோடு
நான் நெருப்பைத் தொட்டால்
குளிர்கிறது!
நெருஞ்சி முள்ளும் மலராகிறது!
உன் கண் மேகம்
பொழிந்த மழையெல்லாம்
கடலில் கலந்து விட்டதாக
எண்ணாதே!
என் இதயக் குளத்தில்
அணைபோட்டு
தேக்கி வைத்திருக்கிறேன்!
நிலவில் கூட
நிழல் தெரிகிறதே!
உன் நெற்றித் திலகத்தில்
ஏதும் களங்கம் இல்லை!
வெறும் சலவைக் கற்களால்
சாஜஹான் தரையில் கட்டிய
தாஜ்மஹால் தானும்
ஒரு நாள் இடிந்துவிடும்!
உன் புன்னகைப் பூக்களால்
என் இதயத்தில்
நீ கட்டியிருக்கும் ஆலயம்
ஆயிரம் யுகங்கள் கடந்தும்
உயிர் வாழும்!
நீ ஏற்றி வைத்த அகல் விளக்கோ
எத்தனை யுகங்களானாலும்
என்னுள்ளே ஒளி வீசும்!
05.12.1999
04 – மீண்டும் வாழ்த்துகிறேன்!
01 Jul 2011 Leave a comment
in 12. வாழ்த்துக்கள் பாடுவோம்!
“மீண்டும் வாழ்த்துகிறேன்!”
இதுவரை
நீ பெற்ற சித்திகளுக்கும்
இனிமேல்
பெறவிருக்கும் சித்திகளுக்கும்
என் வாழ்த்துக்கள்!
கடலில் மூழ்கியவன்
முத்தெடுக்காமல் வரலாம்!
ஆனால்..
பரீட்சை மண்டபத்தினுள் நுழைந்தவன்
கைநிறைய சித்திகளோடு தான்
வரவேண்டும்!
உன்னைப்போல….!
மீண்டும்… மீண்டும்…
வாழ்த்துகிறேன்!
வகுப்பறையில்
உன்வேர்களை
எவ்வளவு ஆழத்திற்கு
இறக்குகின்றாயோ
வாழ்க்கையில்
அவ்வளவு உயரத்திற்கு
உன்கிளைகள் உயரும்!
உன் “விலாச”த்தை
நீயே பொறித்துகொள்ளும் போதுதான்
உன் “விசால”த்தை
இந்த உலகம் அறிந்து கொள்ளும்!
பள்ளிப் படிப்பில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும்
எல்லா சிகரங்களையும்
நீ தொடவேண்டும்!
இன்று நீ
பெறுகின்ற சித்திகள்தான்
நாளை நீ
சூடப்போகும்
மகுடத்தின் மாணிக்கங்கள்!
உனக்காகவும்
உன் ஒவ்வொரு சித்திக்காகவும்
தவமிருக்கும்
தயார் பாதம் பணி!
நீ ஒளி பெறவேண்டும்
என்பதற்காக
திரியாக எரிந்த சூரியதீபங்களை
ஆராதனை செய்!
உன் வாழ்க்கைப் பாதையில்
பூக்கள் சொரிவோர்க்கு
நன்றி சொல்! கரங்கள்கூப்பு!!
முட்கள் புதைப்போரை
நினைவில் வை! காலம்வரும்!!
எல்லா தெய்வங்களும்
உன்னை ஆசீர்வதிக்கட்டும்!
இன்னும்… இன்னும்…
ஆயிரம்… ஆயிரம்…
சித்தி தேவதைகள்
உன் வசமாகட்டும்!
உன் உயரம் பார்த்து!
உன் வேர்களின் ஆழம்பார்த்து!
என் பேனா என்றென்றும்
வாழ்த்துரைக்கட்டும்!
அன்புடன் வாழ்த்துவது…
அம்மா அப்பா சகோதரங்கள்
மற்றும் உறவுகள்!
நீர் ஒளிபெற வேண்டும்
என்பதற்காக
திரியாக எரிந்த ஆசான்கள்!!
31-08-1999
03 – சின்னக் கலைவாணிக்கு!
01 Jul 2011 Leave a comment
in 12. வாழ்த்துக்கள் பாடுவோம்!
“சின்னக் கலைவாணிக்கு!”
சின்னக் கலைவாணிக்கு
சிறப்புநாள் வந்ததென்று
வண்ணக் கோலங்கள்
வாசலெங்கும் போடுகிறோம்!
வாழ்க நீர் பல்லாண்டு!
வளமோடு நலன்கள் பெற்று!
வாழ்க நீர் பல்லாண்டு!
வளமான உயர்வு கண்டு!
ஆயிரம் மலர்கள் சூட்டி!
அன்பெனும் மலர்கள் சாற்றி!
பண்பெனும் தீபம் ஏற்றி!
பல்லாண்டு காலம் வாழ்க!
சொர்க்கத்தின் திரை விளக்கி
சுகந்தி அக்கா மலர்தூவ!
சின்னமுகம் திருத்தி!
சின்னக்கா சிரிக்க வைப்பாள்!
அம்மா மகிழ்ந்திருக்க!
அப்பா வாழ்த்துரைக்க!
அம்மம்மா அருகிருந்து
ஆசைமுகம் பார்த்திருக்க!
அண்ணன்மார் அகம் மகிழ!
மாமன்மார் மனம் குளிர!
சித்தப்பா சித்தி
சிறந்த நல்வாழ்த்துரைக்க!
சுற்றம் சூழ்ந்துவர!
தோழிமார் சேர்ந்துவர!
கல்வி தந்த ஆசான்கள்
கலைவாணி உனை வாழ்த்த!
சின்னக் கலைவாணிக்கு
சிறப்புநாள் வந்ததென்று
வண்ணக் கோலங்கள்
வாசலெங்கும் போடுகிறோம்!
வாழ்க நீர் பல்லாண்டு!
வளமோடு நலன்கள் பெற்று!
வாழ்க நீர் பல்லாண்டு!
வளமான உயர்வு கண்டு!
அம்மா அப்பா சகோதரங்கள்
மற்றும் உறவுகள்!
இருளகற்றி! ஒளியேற்றி!
எழுத்தறிவித்த ஆசான்கள்!!
15-06-1999
02 – அருந்தவச் செல்வி வாழ்க!
01 Jul 2011 1 Comment
in 12. வாழ்த்துக்கள் பாடுவோம்!
“அருந்தவச் செல்வி வாழ்க!”
எங்கள் செல்ல மகளுக்கு
சிறப்பு நாள் வந்ததன்றோ!
எங்கள் சின்ன மயிலுக்கு
மங்கல நாள் வந்ததன்றோ!
எங்கள் சோலைக் குயிலுக்கு
சுபவேளை வந்ததன்றோ!
எங்கள் கோயில் புறாவிற்கு
குதுகல நாள் வந்ததன்றோ!
பூவினில் மணம் எடுத்து!
புன்னகை மலர் தொடுத்து!
புதுப் பட்டு நீர் உடுத்து!
பூமி வலம் வரும்போது!
அக்காள் முகம் மலர!
அண்ணன்மார் அகம் குளிர!
தங்கையுளம் சிரித்திருக்க!
தோழியர்கள் வாழ்த்துரைக்க!
சித்தி அனைத்திருக்க!
சித்தப்பபா மனம் மகிழ!
அம்மம்மா மடியிருந்து
ஆனந்தம் பொங்கி வாழ்க!
மாமன்மார் மனம் மகிழ!
மாமிமார் மலர் தூவ!
சீர்கள் பல நீரும் பெற்று!
செல்வமகள் நீடு வாழ்க!
அம்மா மகிழ்ந்திருக்க!
அப்பா நெகிழ்ந்திருக்க!
ஆயிரம் ஆண்டு காலம்
அருந்தவச் செல்வி வாழ்க!
பல்கலை நீரும் கற்று!
பதினாறு வளமும் பெற்று!
பழுதிலாப் பண்பு கொண்டு!
பல்லாண்டு காலம் வாழ்க!
எங்கள் உள்ளம் குளிர வைத்த
செல்வத் திருமகளே!
எங்கள் இல்லம் சிறக்க வந்த
சின்னக் கலைமகளே!
ஆல்போல் விழுதிறக்கி!
அற்குபோல் வேரூன்றி!
வாழ்க நீர் பல்லாண்டு!
வளமுடன் வாழ்க! வாழ்க!!
ஆயிரம் மலர்கள் தூவி!
அன்பெனும் மாலை சாற்றி!
அருந்தவச் செல்வி உம்மை!
அன்புடன் வாழ்த்துகிறோம்!
அம்மா அப்பா சகோதரங்கள்
மற்றும் உறவுகள்!
இருளகற்றி! ஒளியேற்றி!
எழுத்தறிவித்த ஆசான்கள்!!
14-04-1997
01 – எங்கள் செல்விக்கு!
01 Jul 2011 Leave a comment
in 12. வாழ்த்துக்கள் பாடுவோம்!
“எங்கள் செல்விக்கு!”
எங்கள் செல்விக்கு!
எமதருமைப் புதல்விக்கு!
மங்கலநாள் வந்ததென்று
மனதார வாழ்த்துகிறோம்!
பூப்புனித நீராடி!
புத்தாடை நீர்புனைந்து!
புதியயுகப் பெண்போல
புதுப்பவனி வரும்போது
சுற்றம் புடைசூழ
தோழியர்கள் வாழ்த்துரைக்க!
தம்பிமார் தங்கையர்கள்
உம்மோடு களித்திருக்க!
அம்மாவின் அன்பு மனம்
அருகிருந்து மகிழ்ச்சி கொள்ள
அப்பாவின் அன்பு உள்ளம்
இங்கிருந்து வாழ்த்துரைக்க!
அம்மம்மா உம்மருகில்
ஆசையுடன் பார்த்திருக்க!
சித்தப்ப சித்தியுடன்
சிறப்பாக வாழ்த்துரைக்க!
மாமன்மார் மாமிமார்
மனங்கொள்ளா மகிழ்ச்சி கொள்ள
எங்கள் செல்விக்கு!
எமதருமைப் புதல்விக்கு!
மங்கலநாள் வந்ததென்று
மனதார வாழ்த்துகிறோம்!
வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!!
வாழியநீர் பல்லாண்டு!
இன்றுபோல் என்றென்றும்
இனிதாக வாழியவே!
அம்மா அப்பா சகோதரங்கள்
மற்றும் உறவுகள்!
இருளகற்றி! ஒளியேற்றி!
எழுத்தறிவித்த ஆசான்கள்!!
19-09-1993