01 – அகல் விளக்கு!

அகல் விளக்கு!”

 

இருண்ட என்வாழ்வில்

ஓர் அகல் விளக்கைத்தேடினேன்!

ஆயிரம் தீபங்கள் அணையாது ஒளிரும்

ஆலயம் ஒன்று

எனக்கு பரிசாகத்தரப்பட்டது!

உன் பூஜைக்காக தினமும்

என் இதயக்குளத்தில்

ஆயிரம் தாமரைகளை பூப்பிப்பேன்!

ஆனால் நீயோ அதிகாலையில்

உன் புன்னகைப்பூ ஒன்றாலேயே

என்னை அர்ச்சனை செய்து விடுவாய்!

உன் நினைவோடு

நான் நெருப்பைத் தொட்டால் குளிர்கிறது!

நெருஞ்சி முள்ளும் மலராகிறது!

நிலவில் கூட நிழல்தெரிகிறதே!

உன் நெற்றித் திலகத்தில்

ஏதும் களங்கம் இல்லை!

வெறும் சலவைக் கற்களால்

தரையில் கட்டிய தாஜ்மஹால் தானும்

ஒரு நாள் இறந்துவிடும்!

நீ கட்டியிருக்கும் ஆலயம்

ஆயிரம் யுகங்கள் கடந்தும்

உயிர்வாழும்!

நீ ஏற்றி வைத்த அகல் விளக்கோ

எத்தனை யுகங்கள் ஆனாலும்

என்னுள்ளே ஒளி வீசும்!!