21 – உன் இதயம் சுமக்கட்டும்!
04 Jul 2011 Leave a comment
“உன் இதயம் சுமக்கட்டும்!”
உயிருள்ள
வார்த்தைகளை
உன் உதடுகள்
உதிர்க்கட்டும்!
உயர் கலை
சிற்பங்களை
உன் விரல்கள்
செதுக்கட்டும்!
உன்னத
சிந்தனையை
உன் இதயம்
சுமக்கட்டும்!
உலகம்
உள்ளவரை
உன் பெருமை
பேசட்டும்!
காலம்
உள்ளவரை
உன் கண்கள்
தேடட்டும்!
பூமி
உள்ளவரை
புன்னகை
பூக்கட்டும்!
20 – புன்னகைப் பூக்கள் மலரட்டும்!
04 Jul 2011 Leave a comment
“புன்னகைப் பூக்கள் மலரட்டும்!”
இனிய இரவுகள் மலரட்டும்!
இதமாக உன்கண்கள் வளரட்டும்!
இலட்சியக் கனவுகள் தோன்றட்டும்!
எண்ணங்கள் யாவும் நிறைவேறட்டும்!!
கற்பனை வளங்கள் பெருகட்டும்!
காவிய மலர்கள் பூக்கட்டும்!!
சிந்தனைச் சிறகுகள் விரியட்டும்!
செந்தமிழ் கலைகள் வளரட்டும்!!
காதலர் நெஞ்சங்கள் கனியட்டும்!
கண்களின் வார்த்தைகள் புரியட்டும்!!
சீரிய குணங்கள் சிறக்கட்டும்!
சீதனக் கொடுமைகள் ஒழியட்டும்!!
ஆலய மணிகள் ஒலிக்கட்டும்!
ஆயிரம் தீபங்கள் ஒளிரட்டும்!!
அறநெறி வாழ்வு நிலைக்கட்டும்!
ஆண்டான் அடிமை மறையட்டும்!!
பூமியில் யுத்தம் ஒழியட்டும்!
புதிய யுகங்கள் தோன்றட்டும்!!
புன்னகைப் பூக்கள் மலரட்டும்!
பூமியில் வசந்தம் வீசட்டும்!!
19 – மதங்களைக் காப்போம்!
04 Jul 2011 Leave a comment
“மதங்களை காப்போம்!”
எங்களுக்கு சம்மதம்
எல்லா மதங்களும்!
ஆனால்…
எங்களுக்கு வேண்டாம்
எந்த மதமும்!!
அதோ…
மனிதனுக்கு மேலே மதங்கள்!
மதங்களுக்கு கீழே மனிதன்!!
ஆச்சரியம்!!
மரங்களுக்கு மேலே வேர்கள்!
மண்ணுக்கு கீழே கிளைகள்
இருப்பது போல!
எல்லா நதிகளும்
கடலில் சங்கமம்!
எல்லா மதங்களும்
இறைவனைச்சேரும்!
மதங்கள் வேறு!
மனிதன் வேறு!!
மதத்தோடு பிறந்த
மனிதன் இல்லை!
மனிதனோடு பிறந்த
மதமும் இல்லை!!
மதங்கள் ஒருபோதும்
மனிதன் ஆவதில்லை!
மனிதன் ஒருபோதும்
மதங்கள் ஆவதில்லை!
மனிதனை எரித்துவிட்டு
மதங்களை வளர்க்கிறோம்!
வேண்டாம்…
மதங்களை விலக்கிவிட்டு
மனிதனை வாழவைப்போம்!
மதங்கள் மதங்களாகவே
இருக்கட்டும்!
நாங்கள் மனிதராக இருப்போம்!
பூமியைப் பொறுத்தவரை
மனிதனின் முதல் எதிரி
அணுவல்ல..
மதங்கள் தான்!
வல்லரசுகளே!!
அணுவுக்கு அல்ல…
முதல் விலங்கை
மதங்களுக்கு மாட்டுங்கள்!!
05/12/1999
18 – ஆயுதம்!
04 Jul 2011 Leave a comment
“ஆயுதம்!”
விலங்கின் பரிணாமம்
மனிதன்!
கல்லின் பரிணாமம்
ஆயுதம்!
மிருக வேட்டைக்கு
கல்லைக் கண்டெடுத்த மனிதன்
மனித வேட்டைக்கு
ஆயுதத்தை கண்டு பிடித்தான்!
மிருகத்தை மனிதனாக்கியது
உயிரியல் பரிணாமம்!
மனிதனை மிருகமாக்குவது
ஆயுத பரிணாமம்!
அரசன் கையில்
அன்று செங்கோல் இருந்தது!
ஆழ்வோர் கையில்
இன்று சுடுகோல் இருக்கிறது!
செங்கோல் உயர உயர
மக்கள் வாழ்ந்தனர்!
சுடுகோல் பெருக பெருக
மக்கள் அழிந்தனர்!
இதுவரை…
ஆயுதத்தை மனிதன் தயாரித்தான்!
இனிமேல்…
மனிதனை ஆயுதம் தீர்மானிக்கும்
13/01/2000
17 – சாதனை!
04 Jul 2011 Leave a comment
“சாதனை!”
எதையும்
சாதிக்கப் பிறந்தவனே!
எதனையும்
சாதிக்காமல் போய் விடாதே!
இதுவரை
நீ சாதித்தவை எல்லாம்
சாதனைகளே அல்ல..
இனிமேல் தான்
சாதிக்கப் போகின்றாய்!
சூரியனையே சுட்டெரிக்கும்
நெருப்பு உன்னுள்ளே!
வெறும் குப்பி விளக்காய்
அணைந்து விடாதே!
பெரும் புயலையே புறம்காணும்
மூச்சு உன்னுள்ளே
சிறு புல்லாங்குழல் ஊத
பயன் பட்டுவிடாதே!
இப் பூமிப்பந்தின் சரித்திரத்தையே
ஒரு நொடியில் புரட்டிவிடும்
ஆற்றல் உன்னிடம்…
பாரம் இழுக்கும் காளை மாடாய்
பலியாகி விடாதே!
நீ சாதிக்கப் பிறந்தவன்!
இதுவரை
உன் சந்ததி சொன்னது!
இனிமேல்
சரித்திரம் சொல்லட்டும்!!
13/01/2000
16 – பார்த்தேன்!
04 Jul 2011 Leave a comment
“பார்த்தேன்!”
வாசல் தெளிக்கும்
வளைக்கரங்கள் பார்த்தேன்!
கோலம் போடும்
சரிந்த குழல் அழகு பார்த்தேன்!
செக்கச் சிவந்த
நெற்றித்திலகங்கள் பார்த்தேன்!
சிந்தி வழியும்
அழகுப்புன்னகைகள் பார்த்தேன்!
பார்த்த இடமெங்கும்
பைந்தமிழைக் கண்டேன்!
பழகிய உறவுகளில்
பாசமலர்கள் கண்டேன்!
சென்ற இடமெங்கும்
சிரித்த முகம் கண்டேன்!
செப்புகின்ற வார்த்தைகளில்
செந்தமிழைக் கண்டேன்!
வந்தாரை வரவேற்கும்
வாயிற்கதவுகள் பார்த்தேன்!
வரவேற்கக் காத்திருக்கும்
வாசற்படிகள் பார்த்தேன்!
உதவிக்கரம் நீட்டும்
உறவுகளைப் பார்த்தேன்!
உரத்துப் பேசாத
உயர் குணங்கள் பார்த்தேன்!
சந்திகள் தோறும்
சந்நிதிகள் பார்த்தேன்!
சாலைகள் தோறும்
சனசந்தடிகள் பார்த்தேன்!
தெருக்கள் தோறும்
தெய்வீக இராகம் கேட்டேன்!
திருத்தலங்கள் தோறும்
மணியோசை கேட்டேன்!
பூக்கடைகள் எங்கும்
புன்னகை நிலவுகள் பார்த்தேன்!
பூத்திருந்த மல்லிகையில்
முத்துப் பல்லழகு பார்த்தேன்!
மொட்டவிழ்ந்த தாமரைகள்
முகத்தழகு பார்த்தேன்!
முகம்மூடும் சேலைக்குள்
மோகனங்கள் பார்த்தேன்!
கலைகள் வாழும்
கலைகூடங்கள் பார்த்தேன்!
கண்ணைக் கவரும்
கார்குழல் மேகங்கள் பார்த்தேன்!
கைகாட்டி விலகும்
காதலர்கள் பார்த்தேன்!
கண்சிமிட்டி போகும்
தாவணிகள் பார்த்தேன்!
15 – வியாபாரம்!
04 Jul 2011 Leave a comment
“வியாபாரம்!!”
“மொழியை விற்று
பதவிகள் வாங்கினோம்!
நாட்டை விற்று
சுடு காட்டை வாங்கினோம்!
இனத்தை விற்று
அரசியல் வாங்கினோம்!!
அந்நிய தேசத்தில்
எங்களை விற்கிறோம்
எதுவுமே வாங்காமல்!!”
13/01/2000
14 – நாளைய மனிதன்!
04 Jul 2011 Leave a comment
“நாளைய மனிதன்!”
மனிதனுக்குரிய
மதிப்பீடுகள் குறையும்!
ஆனால்…
மிகச்சக்தி வாய்ந்த
இயந்திரமும் அவன்தான்!
ஆண்டுகள் தோறும்
தன்னையும்
வடிவமைத்துக்கொள்வான்!
மனித மூளை
ஒரு சிம் (SIM) அளவில்
செறிவாக்கம் செய்யப்பட்டு
பொருத்தப்படும்!
இதுவரை..
ஆண் பெண் வேறுபாடு
இயற்கையின் நியதி!
இனிமேல்…
அவன் விருப்பப்படி!
எங்கும் நடக்கும்
கலப்புத் திருமணம்…
கன்னிக்கும் கணனிக்கும்!
சிறு பொத்தானில் அடங்கும்
சூரிய(னி) குடும்பம்!
தேவைக்கேற்ப
கணனி தீர்மானிக்கும்
கால நகர்வு… காற்று மழை…
புவிச்சுழற்சி!
உலகின் குடிப்பரம்பல்
ஏனைய கிரகங்களுக்கும்
நகர்த்தப்படும்!
அணு பரிசோதனைகளுக்கு
பூமியில் களம் அமையும்!
செவ்வாய்க் கிரகத்திலிருந்து
பூமி இயக்கப்படும்!
இயந்திர மனிதன்
பூமியை மட்டுமல்ல
பிரபஞ்சத்தையும் காவல் காப்பான்!
ஆயுதங்கள்…
ஏவுகணைகள்…டாங்கிகள்… புடைசூழ
இயந்திரமனிதன் அணிவகுத்து செல்வான்
நாளைய மனிதனோ
குண்டு துளைக்காத கூண்டிற்குள்
பதுங்கி இருப்பான்!
05/12/1999
13 – அன்பு!
04 Jul 2011 Leave a comment
“அன்பு!”
இதயத்தின்
மெல்லிய சுவர்களில்
இது ஊற்றெடுக்கிறது!
உயிரின் துல்லியமான
அதிர்வுகளால்
இது பயிராகிறது!
பாசம் விளையும்
மனித நிலங்களில்
இது பூத்து குலுங்குகிறது!
பண்பெனும்
நீர்ப்பாசனம் பெற்று
இது முற்றிக்கதிராகிறது!
முகங்கள் காணாமல்
அன்பு முளைப்பதில்லை!
யார் சொன்ன பொய் இது??
இதோ…
வார்த்தைகள் சுமந்து வரும்
மலர்களில் தானே
வாசனை அதிகம் இருக்கிறதே!!
05/12/1999
12 – முத்தான உறவுகளே!
04 Jul 2011 Leave a comment
“முத்தான உறவுகளே!”
முகம்காட்டிச் சிரிக்கின்ற
முத்தான உறவுகளே!
முகம்காட்ட மறுக்கின்ற
முகமறியா நிலவுகளே!
அகம்காட்டிச் சிரிக்கின்ற
அன்பான உறவுகளே!
அறியாது உறவுகொள்ளும்
அடையாளச் சின்னங்களே!
கரையேற வழியின்றி
கரைந்துவிட்டோம் முகநூலில்
திசையேதும் அறியாமல்
திக்கெட்டும் அலைகின்றோம்!
உறவோடு உறவாடி!
உயிரோடு உயிர்தேடி!
உலவுகின்ற நாம்இங்கே
ஒருதாயின் பிள்ளைகளே!
கனவுகள் கலையவேண்டாம்!
காதலர்கள் பிரியவேண்டாம்!
உறவுகள் மலரவேண்டும்!
உன்னதம் பெருகவேண்டும்!
தடையேதும் இல்லைஇங்கே!
தரணிஎங்கும் போய்வரலாம்!
தமிழோடு உறவாடி!
தமிழாலே நாம்இணைவோம்!
பேசுவது தமிழ் என்றால்
பிள்ளைத்தமிழ் பிழைபொறுப்போம்!
எழுதுவது தமிழ் என்றால்
இலக்கணத்தைத் தள்ளிவைப்போம்!
முகநூலை அலங்கரிப்போம்!
முத்தான தமிழ்மொழியால்!
முடிந்தவரை முயற்சிப்போம்
முத்தமிழை நாம்வளர்ப்போம்!
11 – மானுடம் பிழைக்கட்டும்!
04 Jul 2011 Leave a comment
“மானுடம் பிழைக்கட்டும்!”
போதும் மனிதா போதும்!!
கொஞ்சம் விடு
இந்த பூமி கருத்தரிக்கட்டும்!
உன் ஆள்காட்டி விரல்
அசைந்தாலே போதும்
பூமி என்ன
இந்த பிரபஞ்சமே இறந்துவிடும்!
மன்னித்துவிடு!
முடியவில்லையா போகட்டும்
இந்த மானுடத்தையாவது
வேறொரு கிரகத்துக்கு
நாடுகடத்து…
அகதிகளாகவேனும்
உயிர் பிழைக்கட்டும்!
09 – பணம்!
04 Jul 2011 Leave a comment
“பணம்!”
உன்னைத் தேடுகிறேன்
மிக நீண்ட காலமாக!
நிச்சயம்
ஒரு நாள் கண்டுபிடிப்பேன்
அதுவரை…
உன் விலாசத்தை
மாற்றிக்கொள்ளாதே!
08 – தோல்விகள்!
04 Jul 2011 Leave a comment
“தோல்விகள்!”
தோல்விகளை
நேசிக்கத் தெரிந்துகொள்!
வெற்றியின் இரகசியம்
உனக்குப் புரியும்!
தோல்விகள்
உன்னைத் துரத்தும்போது
புறமுதுகு காட்டாதே!
நேர் நின்று பொருது!
வாள் எடுத்து வீசு!
07 – பதிவு!
04 Jul 2011 Leave a comment
“பதிவு!”
வாழ்க்கையை
பதிவு செய்தல் என்பதுவும்
ஒருவித கலைதான்!
சுய வாழ்க்கையை
பதிவு செய்வதாயின்
உனக்கு ஒரு வரலாறு
இருக்கவேண்டும்!
முதலில்
விலாசத்தை தேடிக்கொள்
வரலாறு
தன்னைத்தானே பதிவு செய்யும்!
06 – கனவுகள்!
04 Jul 2011 Leave a comment
“கனவுகள்!”
உன்னோடு
கனவுகள் தூங்கலாம்!
ஆனால்
கனவுகளோடு
நீ தூங்கிவிடாதே!
கண் துயிலும்போது
உன்னை
வெற்றி கொள்ளும் கனவுகள்
கண் விழித்தபோது
ஏன் தோற்றுப் போய்விடுகின்றன?
தினமும் கனவுகள் உன்னை
வெற்றி கொள்ளட்டும்!
என்றேனும் ஒருநாள்
கனவுகளை
நீ வெற்றி கொள்வாய்!
05 – பலவீனம்!
04 Jul 2011 Leave a comment
“பலவீனம்!”
உன் பலம்
உனக்குத் தெரியாமல்
இருக்கலாம்!
ஆனால்…
உன் பலவீனத்தை
தெரியாமல்
இருந்துவிடாதே!
உன் பலத்தால்
ஒரு சிறு அறுகம் புல்லைத்தானும்
அசைக்க முடியாமல் போகலாம்!
ஆனால்
உன் பலவீனத்தால்
பெரும் மலையைக் கூட
பெயர்த்துவிடலாம்!
04 – உச்சித்தவம்!
04 Jul 2011 Leave a comment
“உச்சித்தவம்!”
உனக்குள்ளே…
ஓமம் வளர்த்து
யாகத் தீ மூட்டி
ஒற்றைக்கால் தவம் நடத்து!
உன் உச்சித்தவம் கண்டு
உலகம் வியக்கட்டும்!
அதுவரை…
ஆயிரம்
மணி முடிகள் சூட்டுவார்கள்
தாங்கிக்கொள்ளாதே!
ஆயிரம்
பொன்னாடை போர்த்துவார்கள்
வாங்கிக்கொள்ளாதே!
03 – சிகரங்கள்!
03 Jul 2011 Leave a comment
“சிகரங்கள்!”
வானத்தையே
வளைத்துப் போடும்
வல்லமை
உன்னிடம் இருக்கும்போது
இந்த
சிகரங்கள் எம்மாத்திரம்?
வில்லை வளைத்து
நாணைப்பூட்டி எய்துபார்..
சிகரங்கள் எல்லாம்
உன் காலடியில்
வந்து விழும்!