08 – நீ அம்மா!
02 Jul 2011 1 Comment
“நீ அம்மா!!”
கருவுக்குள்
கரு வைத்து
உயிருக்குள்
உயிர் வைத்தாய்!
உதிரத்தில்
உரு வைத்து
உருவத்தை நீ சுமந்து
உலகத்தை காணவைத்தாய்!
கண்ணுக்குள்
இமை வைத்து
இமைக்குள்ளே எனைவைத்து
வளர்த்தெடுத்தாய்!
எட்டி உதைத்தகாலை
தொட்டிழுத்து
முந்தானை தூளியிட்டு
முகம் சிவக்க
முத்தமிட்டாய்!
அன்பாலே
அமுதூட்டி
அமுதோடு பாலூட்டி
அரவணைத்தாய்!
பிறவிக்குள்
பெரும்பேறு
பெற்றவளே உனைப்பெறும்
பெரும்பேற்றை
எனக்கருள்வாய்!
07 – புதிய புறநானூறு!
02 Jul 2011 Leave a comment
“புதிய புறநானூறு!”
சோதரிகளே!!
சொல்லுங்கள்….
நீங்கள்
வள்ளுவன் தந்த
வாசுகிகளா?
கம்பன் கண்ட
சீதைகளா?
இல்லை….
பாரதி கண்ட
புரட்சிப் பெண்களா?
தயக்கம் வேண்டாம்
சொல்லுங்கள்!
இதுவரை
நீங்கள் அடக்கம்!
இனிமேல்
அடக்கும் வர்க்கம்
உங்களுக்குள்ளே!
நெருப்பிலிருந்து
அவிந்தது போதும்!
அடுப்பை விட்டு
இறங்கி வாருங்கள்!
நீங்கள்
பாவையரல்ல..
பாயும் இனங்கள்!
நீங்கள்
பூவையரல்ல…
பூமி பிளக்கும்
பூகம்பங்கள்!
நீங்கள்
தேவலோகப் பெண்களுமல்ல..
தீயில் மிதக்கும்
செந்தாமரைகள்!
உங்களுக்காகத்தான்
புதிய புறநானூறு
எழுதப்படுகிறது!!
06 – பிரசவ வேதனை!
02 Jul 2011 Leave a comment
” பிரசவ வேதனை!”
இதன் அர்த்தம்
இதுவரை
பெண்களுக்குத்தான் தெரிந்திருந்தது!
இப்போதுதான்
எல்லோருக்குமே தெரியவருகிறது!
ஒரு ஆரோக்கியமான
குழந்தையைப் பெற்றெடுக்க
ஒரு தாய்
எவ்வளவு வேதனைப்படுகிறாள்?
எந்த ஒருதாயும்
தன் குழந்தையை
கருச்சிதைவு செய்ய
ஒருபோதும் சம்மதிக்கமாட்டாள்!
இருந்தும்
போலிக்காரணங்கள் காட்டி
வைத்தியரிடம் கூட்டிப்போவார்கள்!
இதில் ஒரு வேடிக்கை
என்னவென்றால்..
கருச்சிதைவுக்குப் பதிலாக
கருவளர்ச்சிக்கே மருந்து கொடுத்து
வைத்தியர் அனுப்பி வைப்பார்!
தொழிலின் தர்மம்
அதுதான் போலும்!!
இப்படித்தான் இன்று
பூரண வளர்ச்சி பெற்றுவிட்டது!
எப்படியும்
பிரசவித்துத்தான் ஆகவேண்டும்!
இலகுப்பிரசவங்கள் எல்லாம்
என்றோ வழக்கொழிந்து போயின!
இன்று அறுவைப் பிரசவங்கள் தான்
எங்கும் வழக்கிலுள்ளன!
இலகுப் பிரசவமாயின்
அனுபவமுள்ள
ஒரு மருத்துவிச்சி போதும்!
ஆனால்
அறுவைப் பிரசவமாயின்
ஒரு கைதேர்ந்த வைத்தியர்
அவசியம்தானே!
இனியும் தாமதிப்பதால்
உயிர்களுக்குத்தான் சேதம்!
பிரசவ வேதனை என்பது
பெண்ணுக்கு மட்டுமல்ல…
மண்ணுக்கும் தான்!
06 – சீதனம் என்றொரு…!
02 Jul 2011 Leave a comment
“சீதனம் என்றொரு சிறைஎதற்கு?”
சீதனம் என்றொரு சிறையினிலே
சிறைப்படும் சீதைகள் ஆயிரமே!
சாற்றிடும் வேதங்கள் பொய்த்திடுமோ?
தர்மத்தை மறந்துநீர் வாழ்ந்திடவோ?
சாதனை செய்பவர் நாங்களன்றோ!
சான்றுகள் பலவுள பூமியிலே!
வேதனை மிகுந்திடும் வாழ்வெதற்கு?
விலங்கினை ஒடித்திட வேண்டாமோ?
சாதிகள் பேசியே தரம்பிரித்தீர்!
தரணியில் நாங்கள் தலைகுனிந்தோம்!
நீதிகள் பேசியே நாமிருந்தோம்!
நித்தமும் எங்களை கலங்கவிட்டீர்!
சீரிய குணங்களை நாம்பெற்றோம்!
சீதனம் என்றொரு சிறைஎதற்கு?
செந்தமிழ் மரபு பிழைத்திடவோ?
சிறப்புடன் வாழ்வோம் தமிழினமே!!
04 – பாஞ்சாலி!
02 Jul 2011 Leave a comment
“பாஞ்சாலி!”
துகிலுரியப் பட்டபோது
துடித்தது பாரதி மீசை!
பார்த்திருந்தார்
பதுமைப் பாண்டவர்!
எதிரியின் இழிசெயல்கள் கண்டும்
காணாதிருக்கும் எங்களைப் போல!
அவன் கவிதைத் துப்பாக்கியோ
வெறும் தோட்டாச் சொற்களையே
துப்பின!
பாஞ்சாலியோ
“பெண்” விலங்கு போட்டிருந்தாள்!!
03 – இன்னும் உனக்கு…!
02 Jul 2011 Leave a comment
“இன்னும் உனக்கு….!”
இயற்கையின் அகராதியில்
இன்னும் உனக்கு
இலக்கணம் எழுதப்படவில்லை!
“பெண்புத்தி பின்புத்தி”
உனக்குள் இருக்கும் புதிர்களை
இவர்களால்
புரிந்துகொள்ள முடியவில்லை!
கதிரியக்க வீச்சுக்களிலும் பார்க்க
உன்கண் வீச்சில்தான்
ஆபத்து அதிகம்!
பொய் சொல்லாதே
உன் சுபாவம் அதுதான் என்று!
சமுத்திரத்திலும் பார்க்க
உன் கண்ணீர்த் துளிகளுக்குத்தான்
அடர்த்தி அதிகம்!
எறிகணைகளுக்கும்
ஏவுகணைகளுக்கும்
அடங்காத உலகம்
உன் தலையணை மந்திரத்தால்
செயலிழந்து போகும்!
பெண்ணே இனியாவது
உண்மை பேசு!
உன் புன்னகை ஒன்றிற்காகத்தானே
இந்தப் பூமியே சுழல்கிறது!
உன் கண்ணீரையும் புன்னகையையும்
மிஞ்சும் ஆயுததத்தை
ஏன் இன்னும் இந்த
விஞ்ஞான உலகம்
கண்டு பிடிக்கவில்லை??
02 – நீ ஒரு அதிசயம்!
02 Jul 2011 Leave a comment
“நீ ஒரு அதிசயம்!”
இறைவன் சிருஷ்டியில்
நீ ஒரு அதிசயம்!
விஞ்ஞானத்திற்கும்
உன் விசித்திரம் விளங்காது!
அடிக்கடி தோற்றுப்போகிறது!
மானிடத்தின் மணிமுடி
உன்னிடம்தான் தரப்பட்டிருக்கிறது!
உனக்குள் எதையோ
இந்த உலகம் தேடுகிறது!
ஐந்தாவது வேதம் நீ!
ஆறாவது பூதம் நீ!
ஏழாவது சுவை நீ!
எட்டாவது சுரம் நீ!
நீ வரம்!
உனக்கெதற்கு தவம்?
நீ தென்றல்!!
உனக்கெதற்கு விடுதலை??
01 – சுமை தாங்கி!
02 Jul 2011 Leave a comment
“சுமை தாங்கி!“
பூக்கள் தந்து
உன் புத்தி மழுக்கினார்!
தங்கம் போட்டு
உன் தரம் குறைத்தார்!
பட்டும் பொட்டும் தந்து
உன் பலம் அழித்தார்!
இன்னுமா புரியவில்லை?
நீ ஒரு சுமை தாங்கி!
கற்பம் சுமக்க மட்டுமே!!