040 – அந்தி வானம்!
02 Jun 2011 Leave a comment
“அந்தி வானம்!”
அந்தி வானம் சிவக்கிறது!
அந்திப் பொழுது சாய்கிறது!
தென்றலது தவழ்ந்து வந்து
தேன்நிலாவை அழைக்கிறது!
மிதந்து வரும் முகிலினங்கள்
மெதுவாக நகர்கின்றன!
மீண்டு வரும் புள்ளினங்கள்
கூண்டிற்கு ஏகின்றன!
பாடிவரும் வண்டினங்கள்
பறந்தோடி மீள்கின்றன!
ஆடிவரும் மயிலினங்கள்
அந்தி கண்டு மகிழ்கின்றன!
கூடிவிட அலைகடலும்
குளிர் நிலவைத் தேடுகிறாள்!
தேடிவந்த மான்விழியாள்
திசைநோக்கிக் காத்திருந்தாள்!
039 – பூ முத்தம் நான் தரவோ?
02 Jun 2011 Leave a comment
“பூ முத்தம் நான் தரவோ?”
தேன்சிந்தும் பூவிதழ்கள்!
தெவிட்டாத தேன்துளிகள்!
பால்பொழியும் வெண்ணிலவு!
பனிவிழுந்த நள்ளிரவு!
தேன்நிலவில் நீ வந்தால்
தெவிட்டதோ தெள்ளமுதும்!
மான்விழியே உனக்கண்டால்
மயங்குவதேன் எந்தனுள்ளம்?
பூங்குயிலே உன்னிதழில்
பூ முத்தம் நான் தரவோ?
ஏங்குவதேன் என்னிதயம்
என்னுயிரே வாராயோ!
சோலைக் கிளிஅழகே!
தோகை மயிலழகே!
பாவை பைந்தமிழே!
பள்ளிகொள்ள வாராயோ!
038 – நிலவு!
02 Jun 2011 Leave a comment
“நிலவு!”
பாலாடை கட்டி வரும்
பருவப் பெண்ணே!
உன்மேலாடை மூடுவதன்
மர்மம் என்ன?
தோளோடு தோள்சேர்ந்த
கள்வன் எங்கே?
தொலைதூரம் போனானோ
திரும்பவில்லை?
துயர்தாங்க முடியாமல்
நீயும் அங்கே
தூதுவிட்டா ஏங்குகிறாய்
அவனை எண்ணி?
தொலைதூரம் போனவனும்
ஒருநாள் வந்து
தோகை மயில் நீசிரிக்க
தொட்டணைப்பான்!
037 – பரிசு!
02 Jun 2011 Leave a comment
“பரிசு!”
உன் பார்வைகளை
பரிசளித்தாய்
ஏற்றுக்கொண்டேன்!
உன் புன்னகையை
பரிசளித்தாய்
புரிந்துகொண்டேன்!
உன் உள்ளத்தை
பரிசளித்தாய்
வாங்கிக்கொண்டேன்!
உன் இதயத்தை
எனக்களிக்க
ஏனோ மறந்துவிட்டாய்?
036 – எது காதல்?
02 Jun 2011 Leave a comment
“எது காதல்?”
சொல்லித் தெரிவதல்ல
காதல்!
சொல்லாமல் புரிவதல்ல
காதல்!!
கண்கள் இடும் கோலமல்ல
காதல்!
கண்ணீரால் எழுதுவது
காதல்!!
உள்ளத்தில் உறைவது
காதல்!
உயிரில் உருகுவது
காதல்!!
எண்ணத்தில் இனிப்பது
காதல்!
என்றும் உள்ளது
காதல்!!
அன்பின் உறைவிடம்
காதல்!
அழகின் பிறப்பிடம்
காதல்!!
பண்பில் உயர்ந்தது
காதல்!
பாசத்தில் சிறந்தது
காதல்!!
என்புதோல் போர்த்ததல்ல
காதல்!
என்றும் உள்ளது
காதல்!!
தியாகத்தின் உச்சம்
காதல்!
தேசத்தின் கீதம்
காதல்!!
035 – தாஜ்மஹால்!
02 Jun 2011 Leave a comment
“தாஜ்மஹால்!”
என்று
நீ வந்து
என் முதல் அத்தியாயத்தை
எழுதுகின்றாயோ…
அன்றே நாட்டுவேன்
அடிக்கல் ஒன்று
இன்னொரு
தாஜ்மஹாலுக்காக!
034 – என்னுயிர் நீயே!
02 Jun 2011 Leave a comment
“என்னுயிர் நீயே!”
கோடை மழையே!
குளிர்தரு நிலவே!
வாடைக் காற்றே!
வசந்த மலரே!
உயிரை உருக்கும்
உன்னத உறவே!
உடலில் சிலிர்க்கும்
என்னுயிர் நீயே!
இரவில் வளரும்
இதய நிலாவே!
இதழில் சுரக்கும்
என்தமிழ்த் தேனே!
உன்னை நினைத்தே
உலகில் வாழ்வேன்!
உன்னைப் பிரிந்தால்
என்னுயிர் தரியேன்!
033 – மனமது களித்தேன்!
02 Jun 2011 Leave a comment
“மனமது களித்தேன்!”
தென்றல் காற்று
மெதுவாக வீச!
தென்னங்கீற்று
இசையோடு பாடும்!
தேனிலா அங்கே
பால்அள்ளி சொரிய
தேவியின் முகத்தில்
செந்தூரம் பரவும்!
மேலைக்கடலில்
செவ்வானம் சிவக்க!
மாலைக் கருக்கலில்
மல்லிகை பூக்கும்!
மஞ்சள் கடலில்
மாநிலம் குளிக்க!
மயங்கிய பொழுதில்
மனமது களித்தேன்!
032 – கள்வனவன் யாரடியோ?
02 Jun 2011 Leave a comment
“கள்வனவன் யாரடியோ?”
கண்ணுக்குள் உறவாடி
கனவுக்குள் விளையாடும்
கள்வனவன் யாரடியோ?
கண்ணனவன் பேரடியோ!
சேலைமாற்றும் வேளையிலும்
லீலைபல செய்துநிற்கும்
காதலனும் யாரடியோ?
கண்ணனவன் பேரடியோ!
மனதுக்குள் உறவாடி
மஞ்சத்தில் எனையழைக்கும்
மன்னவனும் யாரடியோ?
கண்ணனவன் பேரடியோ!
கொள்ளையிடும் நாயகனாம்
கோபியரின் காதலனாம்
கள்வனவன் யாரடியோ?
கண்ணனவன் பேரடியோ!
031 – உளிகொண்டு செதுக்காத!
02 Jun 2011 Leave a comment
“உளிகொண்டு செதுக்காத!”
உளிகொண்டு செதுக்காத
சிற்பம் நீயோ!
ஒளிகண்டு சிரிக்காத
கமலம் நீயோ!
சொல்கொண்டு எழுதாத
கவிதை நீயோ!
மொழிகொண்டு பேசாத
மழலை நீயோ!
வண்டுவந்து தீண்டாத
மலரும் நீயோ!
வாசல் வந்து வீசாத
தென்றல் நீயோ!
குயில்வந்து கூவாத
சங்கீதம் நீயோ!
குரல்கொண்டு பாடாத
தாலாட்டும் நீயோ!
மொழிகொண்டு விளையாடும்
விழியும் நீயோ!
முத்தமிழ்கொண்டு உறவாடும்
கவியும் நீயோ!
030 – பள்ளி கொள்வோம் வாமயிலே!
02 Jun 2011 Leave a comment
“பள்ளி கொள்வோம் வாமயிலே!”
மலர்பறித்து சரம் தொடுத்தேன்
மங்கை உந்தன் கூந்தலுக்கு!
மை எடுத்து நான் கொடுத்தேன்
மான் விழிகள் மயங்குதற்கு!
பஞ்சணைகள் இட்டுவைத்தேன்
வஞ்சிமகள் நான் உனக்கு!
நெஞ்சணையில் நீ துயில்வாய்
நேசமுடன் நாமிருப்போம்!
பூச்சரங்கள் நான் தொடுத்தேன்
பொன்மயிலே நீ சிரித்தாய்!
பாச்சரங்கள் நான் தொடுப்பேன்
பள்ளிகொள்வோம் வாமயிலே!!
029 – ஆசைமுகம் தேடுவதேன்?
02 Jun 2011 Leave a comment
“ஆசைமுகம் தேடுவதேன்?”
செவ்வந்தி மயங்குவதேன்?
செந்தூரம் சிந்துவதேன்?
பொன்னந்தி மாலையிலே
பூமகளும் நாணுவதேன்?
கண்துயிலும் வேளையிலும்
கண்மணியே உந்தன்முகம்!
வந்துவந்து போவதுமேன்?
வாடுதடி எந்தன்மனம்!
மங்கையுந்தன் புன்னகையில்
மல்லிகையும் மயங்குதடி!
மாங்கனிஉன் கண்ணசைவில்
மனமதுவும் சோருதடி!
செங்கமலம் நீ சிரித்தால்
சிந்தையெலாம் நோவதுமேன்?
அந்திவரும் வேளையிலும்
ஆசைமுகம் தேடுவதேன்?
028 – மழை!
02 Jun 2011 Leave a comment
“மழை!”
பூமிக்கு
வானம் நடாத்தும்
பூப்புனித நீராட்டுவிழா!
பூமியின்
உச்சி குளிரும்!
உடலெங்கும் நனையும்!
நாணத்தில்
பூமி நெளியும்!
மஞ்சள் பூசும்!
கூந்தல் நீவி
முதுகு தேய்த்துவிடும்!
பூமி புன்னகைக்கும்!
பொட்டு வைத்துக்கொள்ளும்!
புத்தாடை புனைந்து
புதுப்பெண் போல
பூமி வெட்கப்படும்!
ஊடலில்
திளைத்த பூமி
இப்போது
கூடலுக்குத் தயாராகிவிடும்!
வானம் சாந்தி பெறும்!
பூமியோ
சிலிர்த்துக் கொள்ளும்!
027 – பூ வாசம் வீசுதடி!
02 Jun 2011 Leave a comment
“பூ வாசம் வீசுதடி!”
பூஞ்சோலைக் குயிலொன்று
புதுராகம் பாடுதடி!
மாஞ்சோலைக் கிளியொன்று
மழலை மொழி பேசுதடி!
மல்லிகையில் வண்டொன்று
மயங்கிக் கிடக்குதடி!
மாங்கனியே உன்இதழில்
மச்சங்கள் இருக்குதடி!
பொங்கிவரும் கடலைகள்
புதுக்கோலம் போடுதடி
பெண்மயிலே உன்கூந்தல்
பூவாசம் வீசுதடி!
கன்னிஉந்தன் கண்ணசைவில்
காதல் விஷம் ஏறுதடி!
கனவினிலும் உந்தன்முகம்
காதல் மொழி பேசுதடி!
026 – கவிதை மொழி!
02 Jun 2011 Leave a comment
“கவிதை மொழி!”
கடலோரம் அலைமோதும்!
கார்கால மழைமேகம்!
காதோரம் குழலாடும்!
கன்னியவள் விழிமோதும்!
நடைபோடும் நந்தவனம்!
நாலுவகை குணமிருக்கும்!
நாதமிடும் கைவளையும்
நாணமுடன் தான்ஒதுங்கும்!
தென்றலது தவழ்ந்துவந்து
தென்பாங்கு இசைபாடும்!
தேன்நிலவு பால்பொழிந்து
செந்தமிழில் கவிபாடும்!
கன்னியவள் கவிதைமொழி!
காதோரம் பேசிடுவாள்!
மன்னவனின் மார்பினிலே
மங்கையவள் முத்தெடுப்பாள்!
025 – புன்னகை பூக்களாகும்!
02 Jun 2011 Leave a comment
“புன்னகை பூக்களாகும்!”
நினைவுகள் சுமையானவை!
நெஞ்சை உருகவைக்கும்!
கனவுகள் சுகமானவை!
கண்ணீரை வரவழைக்கும்!
கண்கள் அழகானவை!
காதலை சொல்லவைக்கும்!
புன்னகை பூக்களாகும்!
பூவிழி சரங்களாகும்!
கைகளோ மாலையாகும்!
கால்களோ இரதங்களாகும்!
நெஞ்சமோ மஞ்சமாகும்!
நீள்இரவு சொர்க்கமாகும்!
கண்களோ தீபமாகும்!
காதலோ கவிதையாகும்!
023 – பூமஞ்சம் மலர் தூவி!
02 Jun 2011 Leave a comment
“பூமஞ்சம் மலர் தூவி!”
மல்லிகையில் சரம் தொடுத்தே
மணப்பந்தல் போட்டு வைப்பேன்!
மாவிலைத் தோரணங்கள்
மாளிகையில் கட்டி வைப்பேன்!
பூமஞ்சம் மலர் தூவி
பூமாலை தொடுத்து வைப்பேன்!
பாமாலை சாற்றி உந்தன்
பாதம் பணிந்திருப்பேன்!
தென்றல் வரும் வீதியெல்லாம்
தெம்மாங்கு இசை கேட்கும்!
தேர்ப்பவனி வரும் வேளை
செங்கதிரோன் குடை பிடிக்கும்!
ஊர் கூடி வாழ்த்துரைக்க!
உன் நெஞ்சில் நான் உறங்க!
பஞ்சணையில் பள்ளி கொண்டே
பார்புகழ வாழ்ந்திருப்பேன்!
022 – கண்ணகியாள் நீயே என்று!
02 Jun 2011 Leave a comment
“கண்ணகியாள் நீயே என்று!”
முல்லைமலர் தருகின்றேன்
முகநூலில் இணைத்துக்கொள்!
வாசமலர் தருகின்றேன்!
வாழ்வில் நீ வந்துவிடு!
கண்மலர்கள் தருகின்றேன்
காதலை நீ ஏற்றுக்கொள்!
கமலமலர் தருகின்றேன்
காலமெலாம் துணைஇருப்பாய்!
கவிதைமலர் நான்தொடுப்பேன்
கண்மணியாள் உனைஎண்ணி!
காவியங்கள் பலபடைப்பேன்
கண்ணகியாள் நீயேஎன்று!
021 – தஞ்சமென உன்மடியில்!
02 Jun 2011 Leave a comment
“தஞ்சமென உன்மடியில்!”
நெஞ்சினிலே நீயிருந்து
எனையாள வேண்டும்!
நீங்காத சுகமனைத்தும்
நீ வழங்க வேண்டும்!
பஞ்சணையில் உனையணைத்து
நான் தூங்க வேண்டும்!
நெஞ்சணையில் நீங்காமல்
நீ வாழ வேண்டும்!
வஞ்சிஉனைத் தொட்டணைத்து
நான் மகிழ வேண்டும்!
தஞ்சமென உன்மடியில்
தலைசாய்க்க வேண்டும்!
கொஞ்சிவரும் பேரழகில்
நான் மயங்க வேண்டும்!
கொள்ளையிடும் பெண்மயிலே
நீயாக வேண்டும்!