06 – அந்தி வானம்!

அந்தி வானம்!

 

அந்தி வானம் சிவக்கிறது!

அந்திப் பொழுது சாய்கிறது!

தென்றலது தவழ்ந்து வந்து

தேன்நிலாவை அழைக்கிறது!

மிதந்து வரும் முகிலினங்கள்

மெதுவாக நகர்கின்றன!

மீண்டு வரும் புள்ளினங்கள்

கூண்டிற்கு ஏகின்றன!

பாடிவரும் வண்டினங்கள்

பறந்தோடி மீள்கின்றன!

ஆடிவரும் மயிலினங்கள்

அந்தி கண்டு மகிழ்கின்றன!

கூடிவிட அலைகடலும்

குளிர் நிலவைத் தேடுகிறாள்!

தேடிவந்த  மான்விழியாள் 

திசைநோக்கிக் காத்திருந்தாள்!

05 – நிலவு!

 நிலவு!

 

பாலாடை கட்டி வரும்

பருவப் பெண்ணே!

உன்மேலாடை மூடுவதன்

மர்மம் என்ன?

தோளோடு தோள்சேர்ந்த

கள்வன் எங்கே?

தொலைதூரம் போனானோ

திரும்பவில்லை?

துயர்தாங்க முடியாமல்

நீயும் அங்கே

தூதுவிட்டா ஏங்குகிறாய்

அவனை எண்ணி?

தொலைதூரம் போனவனும்

ஒருநாள் வந்து

தோகை மயில் நீசிரிக்க

தொட்டணைப்பான்!

04 – மழை!

மழை!!

 

பூமிக்கு

வானம் நடாத்தும்

பூப்புனித நீராட்டுவிழா!

பூமியின்

உச்சி குளிரும்!

உடலெங்கும் நனையும்!

நாணத்தில்

பூமி நெளியும்!

மஞ்சள் பூசும்!

கூந்தல் நீவி

முதுகு தேய்த்துவிடும்!

பூமி புன்னகைக்கும்!

பொட்டு வைத்துக்கொள்ளும்!

புத்தாடை புனைந்து

புதுப்பெண் போல

பூமி வெட்கப்படும்!

ஊடலில்

திளைத்த பூமி

இப்போது

கூடலுக்குத் தயாராகிவிடும்!

வானம் சாந்தி பெறும்!

பூமியோ

சிலிர்த்துக் கொள்ளும்!

03 – கண் விழித்தெழுவாய்!

கண் விழித்தெழுவாய்!”

 

காலைக் கதிரே! கண் விழித்தெழுவாய்!

கதிரொளி பரப்பி! காரிருள் களைவாய்!

பொற்சுடர் பரப்பி! பூமியில் விரைவாய்!

புதுப்பொலிவோடு பூமகள் சிரிப்பாள்!

பொய்கையில் தாமரை பூமுகம் மலர்வாள்!

புன்னகை புரிந்தே பொலிவுடன் திகழ்வாள்!

பள்ளி எழுந்துவிடு! பகற்பொழுது விடியட்டும்!

துள்ளி எழுந்துவிடு! கீழ்வானம் சிவக்கட்டும்!

கூவும் குயிலொன்று கூவுவது கேட்கலையோ!

பாடும் வண்டொன்று பாடுவது கேட்கலையோ!

சோலைக் குயிலொன்று சோதிமுகம் தேடுதிங்கே!

பூஞ்சோலைக் கிளியொன்று புதுராகம் பாடுதிங்கே!!

02 – தாம்பத்திய தர்மம்!

தாம்பத்திய தர்மம்!”

 

தென்றலே!

நீ யாரைக்கண்டு

மயங்குகிறாய்?

ஓ..!

உன் நிலவுக்காதலனின்

சேதி கிடைத்ததா?

அதுசரி..

அவன் வரும் நேரமாகிறதே!!

ஏன் இன்னும் நீ

அலங்காரம் செய்து கொள்ளவில்லை?

மாறாக…

உன் கூந்தலை ஏன்

அவிழ்த்துப் போட்டிருக்கிறாய்??

சூரியனிடத்தில்  நீயும்

சோரம் போனாயா?

தப்பு…

அவன் தான் உன்னை

வம்புக்கிழுத்திருப்பான்!

அதோ பார்!!

பொய்கையிலே நின்று

இதுவரைக்கும் அவனுடன்

தாம்பத்தியம் நடத்திய தாமரை

முகம் வாடி அழுகிறாள்!

ஆமா..

உன் சக்களத்தி அல்லி

என்ன ஆனாள்??

உனக்குத்தெரியாத

தாம்பத்திய தர்மமா?

05/12/1999

01 – கதிரோனை நாம் புகழ்வோம்!

கதிரோனை நாம் புகழ்வோம்!”

 

சோலை குயிலுக்கு

சொல்லுங்கள் முதல்வணக்கம்!

தோகை மயிலுக்கு

தூவுங்கள் அகவணக்கம்!

பாடும் பறவைகளே

பறந்தோடி வாருங்கள்!

பாச மலரொன்று

பாடுவதைக் கேளுங்கள்!

காலைச் சூரியனே!

கதிரொளியே எழுந்திடுக!

கண்கள் சிவந்துவிடு!

காரிருளைக் களைந்துவிடு!

கத்தும் கடலலையே!

கரைமோதி மீளுங்கள்!

கமல மலரினமே!

கதிரோனை வணங்குங்கள்!

தென்றல் காற்றே!

திக்கெட்டும் வீசிடுக!

தென்னங் கீற்றே!

இசைமீட்டிப் பாடிடுக!

தேடும் வண்டினமே!

வாசமலர் தேடுங்கள்!

சுரக்கும் ஆவினமே!

பாலமுதைச் சொரியுங்கள்!

கூந்தல் மலர்சூடி

கூறுங்கள் நேசத்தை!

காலை மலர்ந்ததென்று

களிநடனம் ஆடுங்கள்!

காலைச் சூரியனை

வணங்கி நாம் தொழுவோம்!

கமல மலர்தூவி

கதிரோனை நாம் புகழ்வோம்!

18-04-2011