11 – கவிதை ஒன்று அரங்கேறுது!

கவிதை ஒன்று அரங்கேறுது!!

கண்ணிரண்டும் இசைபாட!

கையிரண்டும் தாளமிட!

காலிரண்டும் நடனமாட!

கவிதை ஒன்று அரங்கேறுது!

செந்தமிழில் சொல்லெடுத்து!

தேன்சுவையில் குழைத்தெடுத்து!

பைந்தமிழில் பாதொடுத்த!

பாடலொன்று அரங்கேறுது!

செங்கரும்பில் சாறெடுத்து!

செவ்விதழில் ஊறவைத்து!

சர்க்கரையில் பிழிந்தெடுத்த!

சங்கத்தமிழ் அரங்கேறுது!

முத்தமிழில் பாதொடுத்து!

முல்லை மலர் கோர்த்தெடுத்து!

முக்கனிகள் சுவைகலந்த!

மூத்த தமிழ் அரங்கேறுது!

காவியங்கள் பாடிவைத்து!

கற்பனையில் கவிதொடுத்து!

கன்னித்தமிழ் வளர்த்தெடுத்த!

கவிதை ஒன்று அரங்கேறுது! 

10 – புன்னகைப் பூவும் நீயே!

புன்னகைப் பூவும் நீயே!!

செந்ததமிழ் இசையும் நீயே!

தேன்தமிழ் சுவையும் நீயே!!

புன்னகைப் பூவும் நீயே!

புதுமலர்ச் செடியும் நீயே!!

கம்பனின் மகளும் நீயே!

காவியத் தமிழும் நீயே!!

நுண்பெரும் கலைகள் நீயே!

நுகர்ந்திடும் காற்றும் நீயே!!

தவழ்ந்திடும் தென்றல் நீயே!

தரணியில் செல்வம் நீயே!!

குளிர்தரு நிலவும் நீயே!

கொஞ்சிடும் மழலை நீயே!!

கண்களின் ஒளியும் நீயே!

காதலின் தெய்வம் நீயே!!

பெண்களில் இரதியும் நீயே!

பேசிடும் சிற்பம் நீயே!!

09 – கவிதை! கவிதை!! கவிதை!!!

“கவிதை!…கவிதை!!…கவிதை!!!”

 அன்பின் அதிர்வு கவிதை!

ஆத்மாவின் இராகம் கவிதை!

ஆசையின் துடிப்பு கவிதை!

அகிலத்தின் பிடிப்பு கவிதை!

இதயத்தின் இசைவு கவிதை!

இதழ்களின் உறவு கவிதை!

எண்ணத்தில் இனிப்பது கவிதை!

என்றும் உள்ளது கவிதை!

நேசத்தின் நெருக்கம் கவிதை!

நெஞ்சின் இணக்கம் கவிதை!

பாசத்தின் பிணைப்பு கவிதை!

பக்தியின் வெளிப்பாடு கவிதை!

உள்ளத்தின் உருக்கம் கவிதை!

உறவின் இறுக்கம் கவிதை!

உடலில் சிலிர்ப்பது கவிதை!

உயிரில் உறைவது கவிதை!

காலத்தின் கோலம் கவிதை!

கண்களின் ஜாலம் கவிதை!

கன்னியின் சிரிப்பு கவிதை!

காதலின் உயிர்ப்பு கவிதை!

குழந்தையின் மழலை கவிதை

கொஞ்சிடும் இதழ்கள் கவிதை!

இயற்கையின் அழகு கவிதை!

இளமையின் எழிலும் கவிதை!

வண்டினம் கவிதை பாடும்!

குயிலினம் கானம் இசைக்கும்!

மயிலினம் நடனம் ஆடும்!

மானினம் துள்ளி ஓடும்!

தென்றலும் தூது போகும்!

தேன்நிலா நனைந்து போகும்!

செந்தமிழ் கவிதை பாட

சிந்தையும் குளிர்ந்து போகும்!

08 – கன்னித் தமிழழகே!

கன்னித் தமிழழகே!”

கோல மயிலழகே!

கொஞ்சும் எழிலழகே!

காலைப் பொழுதழகே!

கன்னித் தமிழழகே!

சோலைக் கிளியழகே!

தோகை மயிலழகே!

கோடை மழையழகே!

கொட்டும் பனியழகே!

கோயில் சிலையழகே!

கொவ்வை இதழழகே!

காலைப் பொழுதழகே!

கன்னித் தமிழழகே!

மழலைச் சிரிப்பழகே!

மலரும் பூவழகே!

மங்கை முகமழகே!

மானின் விழியழகே!

கண்ணின் மணியழகே!

கருஞ்சாந்துப் பொட்டழகே!

காலைப் பொழுதழகே!

கன்னித் தமிழழகே!

தென்றல் காற்றழகே!

தென்னங் கீற்றழகே!

கன்னக் குழியழகே!

காதலியின் குழலழகே!

பெண்ணே நீயழகே!

பேசும் மொழியழகே!

காலைப் பொழுதழகே!

கன்னித் தமிழழகே!

07 – உன்னைத் தினம் எண்ணி!

“உன்னைத் தினம் எண்ணி!”

கொத்து மலர்ச் சரமே!
கொவ்வை இதழ் ரசமே!
தத்தும் நடை இனமே!
தள்ளாடும் இடை இனமே!

பவள மணிக்கொடியே!
பசுமை நிறத்தவளே!
பளிங்குச் சிலைஅழகே!
பல்லக்கு முத்தழகே!

காதல் கனிரசமே!
கண் மயக்கும் பேரழகே!
கண்ணே காவியமே!
கம்பன் கவிநயமே!

பொன்னே பூங்கொடியே!
பூஞ்சோலை மலர்வனமே!
பூத்த மலர் அழகே!
புகழ் பாடும் தாமரையே!

தாழும் குழல் அழகே!
தரணி வாழ் பேரழகே!
சங்கத் தமிழ் அழகே!
சந்தக் கவி அழகே!

திங்கள் முகத்தவளே!
செவ்வந்தி நிறத்தவளே!
தங்கத் தாமரையே!
சங்கு மணிக்கழுத்தே!

பேசும் சிலை அழகே!
பெண்ணில் பேரழகே!
கூவும் குயிலினமே!
கோல மயில் அழகே!

பெண்ணே நீ அழகு!
பூமியிலே பேரழகு!
உன்னைத் தினம் எண்ணி
உருகுவதும் ஓர் அழகு!

 

06 – புவியின்று உன்னைக்கண்டால்!

 

 

 

 

 

 

 

 

 

“புவியின்று உன்னைக் கண்டால்!”

தேன்தமிழ் வளர்க்க வந்த
செந்தமிழ்க் கவிஞ நீயே!
தீந்தமிழ் பாடி வாழ
தேவியின் அருளும் பெற்றாய்!

தூங்கி வாழ் பாரதத்தை
துடிப்புடன் விழிக்கச் செய்தாய்!
ஏங்கி வாழ் பாமரர்க்கும்
இனித்திடக் கவிகள் தந்தாய்!

தீங்கனிச் சோலை நாடும்
பூங்குயில் ஒன்றைக் கண்டாய்!
தூயநற் சொற்கள் சேர்த்து
துகிலுரி படலம் தந்தாய்!

ஆயநற் கலைகள் வாழ
அரும்பெரும் தொண்டு செய்தாய்!
அன்னையின் விலங் கொடிக்க
அவனியில் முழக்கம் செய்தாய்!

புவியின்று உன்னைக் கண்டால்
புதுயுக நினைவு கொள்ளும்!
புனர்ஜென்மம் நீயும் பெற்றால்
புவியுன்னை போற்றி வாழும்!

வந்தனம் தருவோம் நாமே
வையக மீதில் வந்தால்
வணங்கியே வாழ்வோம் நாமுன்
வார்த்தைகள் சிரமேற் கொண்டு!!

 

05 – தாளாது எங்கள்மொழி…!

“தாளாது எங்கள்மொழி எந்நிலையிலும்!”

தாயே! தமிழே!!
தமிழினமே! தமிழ் மண்ணே!!
தமிழ்ப் புலவர் தமையீன்று
தமிழாய்ந்த பெருநிலமே!

தமிழ்ச்சங்கம் தழைத்தோங்க
தமிழ் வளர்த்த தாயகமே!
தாளாது புகழ்கொண்டு
தரணியிலே தலை நிமிர்வாய்!!

அகரம் கண்ட அகத்தியனே!
ஆதித்தமிழன் தொல்காப்பியனே!
நெற்றிக்கண் கண்ட நக்கீரனே!
நெல்லிக்கனி பெற்ற ஒளவையே!

வையகம் வாழ்த்தும் வள்ளுவனே!
வான்புகழ் கொண்ட இளங்கோவே!
காவிய நாயகன் கம்பனே!
கன்னித் தமிழன் பாரதியே!

தமிழுக்கு உயிர்தந்த சான்றோரே!
தமிழ்வளர்த்த தார்வேந்தே பாண்டியரே!
தகைசான்ற பெரியோரே புலவர்களே!
தரணிவாழ் தன்மானத் தமிழர்களே!

தமிழுக்கு தலைவணக்கம் தந்தவரே!
தமிழ்என்றே முழங்கிநின்ற தலைவர்களே!
தாளாது எங்கள்மொழி எந்நிலையிலும்
தலைநிமிர்ந்து நின்றிடுமே தரணிபோற்றும்!!

 

04 – கம்பனின் மகளே வா!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 “கம்பனின் மகளே வா!”

காவியத் தமிழே வா!
கம்பனின் மகளே வா!
ஓவியத் திருவே வா!
ஒளிவளர் விளக்கே வா!

சுந்தர எழிலே வா!
சுவையுறு கனியே வா!
செந்தமிழ் சுவையே வா!
தேன்தமிழ் இசையே வா!

குளிர்தரு நிலவே வா!
குவலயப் பொருளே வா!
கார்குழல் மயிலே வா!
காவிரி அலையே வா!

போதவிழ் மலரே வா!
புன்னகை நதியே வா!
பைங்கிளி இதழே வா!
பள்ளியில் பயில்வோம் வா!

03 – தேவியுனை நான் தொழுவேன்!

“தேவியுனை நான் தொழுவேன்!”

உள்ளம் எனும் கோவிலிலே

ஊஞ்சலாடும் ரோஜாவே!

கண்கள் எனும் அரங்கினிலே

கவிபாடும் பூங்குயிலே!

காலை இளம் செங்கதிரே!

கார்முகிலே! பனிமலரே!

சோலையிலே வந்துதித்த

சொர்க்கத்தின் திருவுருவே!

மொட்டவிழ்ந்த தாமரையே!

முகைவெடித்த மல்லிகையே!

கட்டவிழ்ந்த புன்னகையில்

கண்கவரும் பைங்கிளியே!

தென்றல் உனைத் தீண்டுகையில்

சித்த்மது கலங்குதடி!

தேவியுனை நான் தொழுவேன்

நாவினிலே வந்துறைவாய்!

02 – தங்கத் தமிழணங்கே!

“தங்கத் தமிழணங்கே!”

முத்துப் பல்லழகி! முல்லைச் சிரிப்பழகி!

தத்தும் நடையழகி! தள்ளாடும் இடையழகி!

கொத்தும் கிளியழகி!  கோயிற் சிலையழகி!

போற்றும் பெண்ணழகி! பூமியிலே பேரழகி!

கங்கையிலே நீராடி காவிரியில் வளர்ந்தவளே!

மங்காத புகழோடு  மணங்கமழும் மாதரசே!

மானின் இனம்நீயோ! மைவிழிகள்  உனதழகோ!

தேனின் இனம்நீயோ! தெவிட்டாத செவ்விதழோ!

மயிலின் இனம்நீயோ!  தோகை விரித்தாடு!

குயிலின் இனம்நீயோ! கூடி உறவாடு!

சிந்தைதனில் உறைந்த செல்வதிருமகளே!

சங்கம்தனில் வளர்ந்த தங்கத்  தமிழணங்கே!

கட்டியுனை அணைத்தால் காணுமின்பம் பலகோடி!

தொட்டுக்கலந்து விட்டால் சொர்க்கம் அதுதாண்டி!

பட்டுத்தளிர் மேனி பைந்தமிழே பூந்தேரே!

பக்கத்துணை யிருந்தால் பாடியுனை மகிழ்வேனே!

 

01 – ஓவியமாய் நீயே!

“ஓவியமாய் நீயே!”

செந்தமிழில் சிந்துகவி பாடுகின்ற குயிலே!

வந்தனங்கள் தந்துஉனை வாழ்த்துகிறேன் மயிலே!

பைந்தமிழில் சொல்லெடுத்து  பாடுகிறேன் பூங்குயிலே!

வந்தமர்ந்து பாதொடுத்து தந்திடுவாய் மாமயிலே!

முகம் காட்ட மறுக்கின்ற முத்தமிழும் நீயோ!

அகம்காட்டி போகின்ற ஆரணங்கே நீயரோ?

கவிதை மழைபொழிகின்ற கார்முகிலும் நீயோ!

கன்னித்தமிழ் பாடுகின்ற  கவிக்குயிலே நீயரோ?

பாமாலை சாத்துகிறேன் பைந்தமிழே வாராய்!

பூமாலை சூடிநிற்கும் பூங்குயிலே கேளாய்!

வந்தமர்ந்து கவியுரைக்க வேண்டுகிறேன் தாயே!

வாழ்த்தியுனை வணங்கிடுவேன்  வந்தருள்வாய் நீயே!

இதயத்தில் உறைகின்ற இசைத்தமிழே வாராய்!

எண்ணத்தில் இனிக்கின்ற செந்தமிழே கேளாய்!

காலத்தால் அழியாத காவியமே வாராய்!

கண்களிலே உறைகின்றாய் ஓவியமாய் நீயே!