08 – மேரிமாதா உன்புகழை

 

 

 

 

 

 

“மேரிமாதா உன்புகழை!”

கோடிமுறை கரம்குவித்தேன்!
கொஞ்சுதமிழ் பாவெடுத்தேன்!
தேடியுனைச் சரணடைந்தேன்!
தேவிஎனைக் காத்தருள்வாய்!

ஆழ்கடலில் தத்தளித்தேன்!
ஆயகலை நானறியேன்!
தேவிஉனைத் தொழுவதன்றி
செய்ததவம் ஏதுமில்லை!

திங்கள்முகம் பார்க்கவந்தேன்!
திருவருளைத் தேடிவந்தேன்!
மாண்புமிகு நாயகியே!
மனமுருகிப் பாடவந்தேன்!

மேரிமாதா உன்புகழை!
மேதினியில் நான்பாட
கோடிபலம் எனக்கருள்வாய்!
உன்காலடியில் சரணடைந்தேன்!

 

07 – கலைவாணி

 

 

 

 

 

 

 

“கலைவாணி!”

செந்தமிழில் சொல்லெடுத்து!
தேன்சுவையில் குழைத்தெடுத்து!
பைந்தமிழில் பாதொடுத்து!
பாடவந்தேன்  நான்உனக்கு!

வந்தனங்கள் தந்துஎனை
வாழ்த்தி யருள் தாயே!
வையகத்தில் நானும்உந்தன்
புகழ்தனையே பாட!

நாவினிலே வந்துறைவாய்!
நாயகியே நீயும்!
நல்லதமிழ் சொல்லெடுத்து
தந்திடுவாய் நாளும்!

பூவிரியும் காவிரியில்
பிறந்தவளே தாயே!
பொங்கிவரும் வைகையிலே
பூத்தவளும் நீயே!

தென்பொதிகை உறைகின்ற
செந்தமிழே வாராய்!
திக்கெட்டும் உன்புகழை
பாடுகிறேன் கேளாய்!

முச்சங்கம் தனில்வளர்ந்த
முத்தமிழே தாயே!
மூவேந்தர் வளர்த்தெடுத்த
முதல்மகளும் நீயே!

சிலையாக உனைஎந்தன்
சிந்தையிலே இருத்தி!
கலைவாணி தினம்உன்னை
நான்பாட வேண்டும்!

தமிழோடு விளையாடும்
சிறுபிள்ளை நானே!
தாயாக நீயிருந்து
எனை ஆளவேண்டும்!

06 – எங்கள் கருமாரியம்மா

 

 

 

 

 

 

 

 

 

 

“எங்கள் கருமாரியம்மா!”

எங்கள் கருமாரியம்மா!

இங்கெழுந்து வாரும் அம்மா!

தொல்லை தரும் இவ்வுலகில்

தோன்றி வரம் தாரும் அம்மா!

                                                             (எங்கள்……)

கருணையுள்ள தெய்வம் அம்மா!

கரம் எடுத்து நாம் தொழுவோம்!

காலமெல்லாம் உன்பெயரை

கணமேனும் நாம் மறவோம்!

                                                            (எங்கள்…….)

திங்கள் முகம் காண்பதற்கே

தேவியுனை நாடிவந்தோம்!

மங்களமாய் உன் நாமம்

மனதினிலே சுமந்து வந்தோம்!

                                                            (எங்கள்…….) 

இன்பதுன்பம் இல்லை அம்மா!

இருவினைகள் தொல்லை அம்மா

சங்கடங்கள் ஏதுமில்லை

தாயவளைச் சரண் புகுந்தால்!

                                                            (எங்கள்……)

05 – கருணையுள்ள தெய்வம் நீ!

 

 

 

 

 

 

 

 

 

 “கருணையுள்ள தெய்வம் நீ!”

கருனையுள்ள தெய்வம் நீ!

காத்தருள வாருமம்மா!

காலமெல்லாம் உன் புகழை

நாம் பாட வேண்டுமம்மா!

செய்த வினை போக்கவந்தோம்

தெய்வம் நீ காத்தருள்வாய்!

செய்யும் பிழை நாமறியோம்

தெய்வம் நீ பொறுத்தருள்வாய்!

தலை நகரின் நடுவினிலே

தாயவளின் கோவிலிலே

தஞ்சமென வந்தடைந்தோம்

தாயவளே நீ அருள்வாய்!

பால் பழங்கள் தந்து உன்னை

பக்தியுடன் நாம் பணிவோம்!

பாமாலை சூட்டி உந்தன்

புகழ் பாடி நாம் மகிழ்வோம்!

குத்து விளக்கேற்றி வைத்து

கோலமிட்டு நடுவினிலே

நீ கொலுவிருக்கும் காட்சிதனை

கண்டு நாம் களித்திருப்போம்!

வேதங்கள் நாமறியோம்!

வேதாந்தம் நாமறியோம்!

உன் பாதங்கள் தொழுவதன்றி

பக்தி நிலை வேறறியோம்!

சிரம் தாழ்த்தி வணங்குகையில்

சினம் தணிந்து போகுதம்மா!

கரம் குவித்து வணங்குகையில்

கடுந்துன்பம் விலகுதம்மா!

கண்கண்ட தெய்வம் அம்மா

கணமும் உன்னை நாம் தொழுவோம்!

காலமெல்லாம் உன்னடியில்

கைதொழுது நாம் வாழ்வோம்!

 

04 – எங்கள் முத்துமாரி

 

“எங்கள் முத்துமாரி!”

செய்த வினை போக்க வந்தோம்

எங்கள் முத்துமாரி!

செய்யும் பிழை பொறுத்தருள்வாய்

எங்கள் முத்துமாரி!

உன்னடியை நாடி வந்தோம்

எங்கள் முத்து மாரி!

உன் புகழைப் பாட வந்தோம்

எங்கள் முத்துமாரி!

தாயவளைக் காண வந்தோம்

எங்கள் முத்துமாரி!

தந்து வரம் காத்தருள்வாய்

எங்கள் முத்துமாரி!

 நல்ல தமிழ் சொல்லெடுத்து

எங்கள் முத்துமாரி!

நாளும் உனைப் பாடிடுவோம்

எங்கள் முத்துமாரி!

எங்கள் குல தெய்வம் அம்மா

எங்கள் முத்துமாரி!

என்றும் நீ   துணையிருப்பாய்

எங்கள் முத்துமாரி!

 தாயவளே! தாயவளே!

எங்கள் முத்துமாரி!

தாரணி புகழ் கொண்டவளாம்

எங்கள் முத்துமாரி!

வெள்ளை மணல கடலருகே

எங்கள் முத்துமாரி!

வெள்ளவத்தை நகர்தனிலே

எங்கள் முத்துமாரி!

கோயில்கொண்டு அமர்ந்தவளாம்

எங்கள் முத்துமாரி!

குறைகளெல்லாம் தீர்ப்பவளாம்  

எங்கள் முத்துமாரி!

 குலமகளிர் மனங்களிலே

எங்கள் முத்துமாரி!

கொலுவிருக்கும் தெய்வம் அம்மா

எங்கள் முத்துமாரி!

கோடி பணம் மாடி மனை

எங்கள் முத்துமாரி!

தேடி வரும் உன்னருளால்

எங்கள் முத்துமாரி!

நாடி உனைச் சரணடைந்தால்

எங்கள் முத்துமாரி!

நோய்நொடிகள் துன்பமில்லை

எங்கள் முத்துமாரி!

பால் பழங்கள் அபிஷேகம்

எங்கள் முத்துமாரி!

பாதமலர் பணிந்திடுவோம் 

எங்கள் முத்துமாரி!

 ஆறுகால பூஜை செய்வோம்

எங்கள் முத்துமாரி!

ஆலயத்தில் தவ்மிருப்போம்

எங்கள் முத்துமாரி!

மூன்று கால பூஜை செய்வோம்

எங்கள் முத்துமாரி!

முத்தி நிலை நாம் பெறுவோம்

எங்கள் முத்துமார்!

கால பயம் இல்லையம்மா

எங்கள் முத்துமாரி!

கையெடுத்து நாம் தொழுவோம்

எங்கள் முத்துமாரி!

பெருங்கடலை நாம் கடப்போம்

எங்கள் முத்துமாரி!

பிறப்பெடுத்த பயன் தருவாள்

எங்கள் முத்துமாரி!

கண்களில் நீர் பெருகுதம்மா

எங்கள் முத்துமாரி!

கருணை உள்ளம கொண்டவளாம்

எங்கள் முத்துமாரி!

கண்கண்ட தெய்வம் அம்மா

எங்கள் முத்துமாரி!

காத்திடுவாள் எந்நாளும்

எங்கள் முத்துமாரி!

தாயுள்ளம் கொண்டவளாம்

எங்கள் முத்துமாரி!

தாய்மைக்கே இலக்கணமாம்

எங்கள் முத்துமாரி!

திசை எட்டும் உன் புகழை

எங்கள் முத்துமாரி!

தினந்தோறும் பாடுதம்மா

எங்கள் முத்துமாரி!

03 – உருகுது இறைவா!

 

“உருகுது இறைவா!”

உருகுது இறைவா எந்தனுள்ளம்

பெருகுது கண்கள் உனை நினைந்தாலே!

வருவது எந்தன் தேவனென்றாலே

வாழ்வினில் துன்பம்  இனியேது?

மானிட ஜென்மம் எனக்களித்தாயே!

உன்மலரடி தொழுதிட வரமளிப்பாயே!

மறுபடி என்னைப் பிறக்க வைத்தாலும்

உனை மறவாதிருக்க வரம் தருவாயே!

ஆயநற்கலைகள் அரும்பெரும் செல்வம்

அவனியில் தேடி நான் அலைந்தேனே!

பிறவிகளில்லா நிலையது காண இறைவா

உன்னருள் தேடி நான் அலைந்தேனா?

தூய நற்தமிழில் துதிபல பாட

தூயவனே நின்துணை பெற வேண்டும்!

கொடியது துன்பம் எதுவந்த போதும்

உன்காலடி வந்தால் குறைந்திடுமே ஐயா!

தாயினுமினிய தந்தையும் நீயே!

தரணியில் வாழ்வேன் உன்தயவாலே!

அமைதியைத் தேடி நான் அலைந்தேனே

ஐயநின் பாதம் சரண் புகுந்தேனே!

02 – இது உங்களுக்காக

இது உங்களுக்காக!

உங்கள்

நினைவுகளுக்காக!

 

என்னை வளர்த்தெடுத்து

இந்த நிலைக்கு உயர்த்திவைத்த

எனது

அன்புத் தெய்வங்களுக்கும்!

என்மீது பிரியமுள்ள

இதயங்களுக்கும்

இது சமர்ப்பணமாகிறது!

 

01 – எந்த நிலையிலும்

 

எந்த நிலையிலும்

உன்னை முன் வைத்தேன்!

எந்த சபையிலும்

என்னை முன் வைப்பாய்!