07 – மலைமகளின் கவிதைகள்!

 

“காதலெனும் சோலையிலே!

அழகான சந்தம் கொண்ட

சிந்து கவி!

இங்கே அற்புதமாய் தவழ்கிறதே

ஒரு கங்கை நதி!!

ஓர் மதிப்பீடு!

கன்னித்தமிழ் சொல்லெடுத்து!

காதலெனும் பூதொடுத்து!

கவிதை மழை பொழிகின்ற

கார்முகிலே மலைமகளே!

காதலெனும் சோலையிலே

கண்டெடுத்தாய் தேன்கவிதை!

காலமெல்லாம் வாழ்ந்திருக்கும்

காதலர்கள் உள்ளவரை!

சொல்நயமும் பொருள்நயமும்

சோதிமிக்க நவகவிதை!

எந்நாளும் நிலைத்திருக்கும்

இனியதமிழ் உள்ளவரை!

தங்கத்தை மதிப்பிட்டேன்

தராசு பிழைத்த தன்றோ!

வைரத்தை மதிப்பிட்டேன்

வார்த்தைகள் வரவில்லை!

சர்க்கரைப் பந்தலிலே

தேன்மாரி சொரிகின்றாய்!

சங்கத்தமிழ் சொற்களிலே

சந்தனமாய் கரைகின்றாய்!

பூமாலை சொரிகின்றேன்!

பொன்மலர்கள் தூவுகிறேன்!

பாமாலை நீ சூடி

பல்லாண்டு வாழ்கவென்று!

வடித்துவைத்த கவிதைகளை

வரிசையிட்டு காட்டுகிறேன்

வாழ்த்தியுனை மகிழ்ந்திடுமே!

வாசமுள்ள மலர்களெல்லாம்!

புலத்தில் வேரூன்றினாலும்

பிறந்த தலத்தை மறவாத

தார்மீகப் பண்பையும்!

தாளாத பாசத்தையும்!

நெஞ்சைவிட்டு

நீங்காத நேசத்தையும்!

நினைவில் கொண்டு

தாயகத்தின் திசைநோக்கி  

தலை வணக்கம் செய்கின்றார்!

உன்னை வணங்குகிறேன்

அன்னைத் தமிழே!

அழகின் மொழியே!

என்னை ஈன்ற

இனிய தாயே!

மண்ணின் மகளே!

மலையின் ஊற்றே!

பெண்ணின் பெருமை

பேசும் திரு நாடே!

மும்மலை சூழ்ந்த

திருகோண மலையே!

முத்தமிழ் தித்திக்கும்

முது பெரும் நகரே!

உன்னை வணங்கி

உறவைத் தொழுகிறேன்!

என்னை வாழ்த்தி

இனிய வரம் தாராய்!

சந்தம் கொஞ்சி விளையாடும்

செந்தமிழ்க் கவிதைக்கு மட்டுமல்ல

எழுத்துக்கும் சொல்லுக்கும் கூட

இலக்கணம் கண்ட சங்கத் தமிழன்

காதலுக்கு மட்டும் ஏனோ

இலக்கணம் கூற மறந்து விட்டான்…

இதோ…

ஆழ்  மனஅறிவு

சொல்லில்

புரிவதல்ல

காதல்!

சொல்லாமல்

வெல்வதில்லை

காதல்!

புள்ளியிடும்

கோலமல்ல

காதல்!

உறவின்

பொக்கிஷமாய்

இருப்பதுதான்

காதல்!

விழி கொண்டு தீண்டினால்

ஒரு சுகம்!

விரல் கொண்டு தீண்டினால்

இன்னொரு சுகம்!

உடல் கொண்டு உரசினால்

வேறொரு சுகம்!

இதழ் கொண்டு எழுதினால்

என்ன சுகம்?

இன்ப சுகம்

விழி பேசினால்

ஒரு சுகம்!

விரல் தீண்டினால்

மறு சுகம்!

மொழி மலர்ந்தால்

தனிச்சுகம்!

மெளனம் பூத்தால்

இன்னுமோர் சுகம்!

காதலர்கள் செய்யும்

குறும்பை விட

இந்த காதல் செய்யும்

கொடுமை மிக மோசமானது..

காதல் சோலை

சிரிக்க வைத்ததும்

சிந்திக்க வைத்ததும்

அழவைத்ததும்

அவஸ்த்தை தந்ததும்

காதல்!

…….

துடிக்க வைத்ததும்

துன்பம் தந்ததும்

துணையாய் இருந்ததும்

துயரம் கொடுத்ததும்

காதல்!

மழலைத் தமிழில்

மனதைக் கொள்ளை கொள்கிறதே

இந்தச் சின்னஞ்சிறு முல்லைப் பூ!

முல்லைப் பூவே!

முல்லைப் பூவே!

முத்து மணியே!

பிள்ளை வடிவில்

பேசும் நிலவே!

தத்தித் தத்தி 

தாவும் குயிலே!

முத்தம் தந்து

முகிழ்க்கும் மலரே!

புலம் பெயர் மண்ணின்

பொய்யான வாழ்வையும்

அது தரும் அவலங்களையும்

எப்படியோ இனம் காட்டுகிறார்!

வெளி நாடு!

வாடைக்காற்று

வந்த போதும்

வண்ண மலர்கள்

மலர்ந்த போதும்

வாழ்வில் இங்கு

அமைதி இல்லையே!

பெண் என்ற பண்புக்குள்

இன்னும் நீ

அடங்கி விடாதே!

ஆசை காட்டி

மோசம் செய்யும்

ஆண் வர்க்கத்தை

அடையாளம் காண்!

பெண்ணே!

உன்னை எரித்து

தன்னை வளர்க்கும்

ஆண்களை

அடையாளம் காண்!

ஏக்கங்கள் கொடுத்து

தூக்கத்தை கெடுக்கும்

ஆண்களை

அடையாளம் காண்!

புன்னகை உடையணிந்து

புதியதோர் உலகம் காண

புறப்படுகின்றார்!

அன்பு வழி நின்று

மனிதம் வளர்க்க

அறைகூவல் விடுக்கின்றார்!

புதிய உலகம்

…….

புன்னகை உடையணிந்து

புதியதோர் பாபுனைந்து

பூக்களை தூவியிங்கு

புதியதோர் உலகம் செய்வோம்!

இரண்டு கைகள் உண்டு

இளமை உணர்வுமுண்டு

அறிவின் துணையைக் கொண்டு

அன்பில் நிலைப்போம் நன்று!

தங்கத் தமிழெடுத்து

தாலாட்டுப்பாடி

தாய்மைக்கே ஒரு

சாமரம் வீசுகிறது

ஒரு கவிதை!   

தாய்!

உயிரைக் கருவில்

சுமப்பவள்

உதிரம் கொடுத்து

காப்பவள்

கண்ணின் இமையாய்  

இருப்பவள்

காலம் அறிந்து

நடப்பவள்

இயற்கையின் எழில் கூறவந்த

கவிதாயினி

இளங்கதிரோன் எழுந்து வரும்

அழகு கூறுகிறார்!

அதிகாலை!

அதிகாலைப்

பொழுதொன்று

உதிக்கின்றதே!

அதை

அறியாத மனமிங்கு

தூங்குகின்றதே!

உனக்குள்ளே நான்!

எனக்குள்ளே நீ!

இந்த உறவும் இந்த நெருக்கமும்

என்றும் வேண்டும் எமக்குள்ளே!

என்னுள் நீ!

விழிமூடும் போதும்

விளக்காக நீ!

மொழி பேசும் போதும்

இதழாக நீ!

உள்ளத்தில் நல்

உணர்வாக நீ!

தன்னம்பிக்கை யூட்டும்

ஒரு நன்னம்பிக்கை கவிதை!

பூமிப் பந்தையே

ஒரு நொடியில் புரட்டிப்போடும்

ஒரு நெம்புக்கோல் கவிதை இது!

கலங்காதே!

பாதைகளில் நமக்கு

தடைகள் வரலாம்!

பகலிரவாய் துன்பங்கள்

தேடி வரலாம்!

நாளை என்பது நமக்கு

வராமலா போகும்?

நம்பிக்கையை நீயும்

இழக்காதே நண்பனே!

அழகான சந்தம் கொண்ட

ஒரு சிந்துகவி!

இங்கே…

அற்புதமாய் தவழ்கிறதே

ஒரு கங்கை நதி!!

மாற்றம்

மனதுக்கு

வேண்டும்!

குயில்கள் கூவுகிறது

குருவிகள் பேசுகிறது

கோடை காலத்தை

குதூகலித்து

கொண்டாடுகிறது!

மயில்கள் நடக்கிறது

மான்கள் துள்ளுகிறது

புவியில் பசுமையோ

புற்களாய் தவழ்கிறது

உலகை மறந்து

காதல் உலாப் போகும்

உள்ளங்கள்!

உறவு கலந்து

ஊஞ்சலாடும் எண்ணங்கள்!

அன்பென்னும்

பாலத்தில்

அன்பெனும் சோலையிலே

அழகாக நடந்தோம்

இன்பங்கள் பெறவே

இதயங்கள் கலந்தோம்!

 வசந்த கால

ஒரு மாலைப் பொழுதில்

மிக உயர்ந்தமலைச்

சிகரம் நோக்கி

தன் இறக்கைகளை  விரிக்கின்றார்

இந்த கவிதாயினி

இமயம்!

……

வண்ண வசந்தமென

என்னைக் கவர்ந்தவனே

விண்ணோடும் முகிலோடும்

விளையாடி மகிழ்ந்தவனே

உன்னைச் சரணடைந்தே

உலகில் புதுமைகண்டேன்

எண்ணச் சிறகெடுத்தே

இமயம் வரை நானுயர்ந்தேன்!

இந்தக் கண்ணீருக்கு

எத்தனை வலிமை?

கண்ணை விட்டு ஓடும்

இந்த கண்ணீருக்குத்தான்

எத்தனை சுகம்?

கண்ணீர்!

மனமெனும் தாய்

உணர்வுகளோடு

மல்லுக்கட்டுகிறாள்!

நினைவு மகள்

நெஞ்சைப் பிழிந்து

நீராகக் கொட்டுகிறாள்!

காரணம் சொல்லாமல்

கண்களுக்குள் திரண்டு

என் கன்னத்தைத் தழுவ

கண்ணீருக்கு

இத்தனை ஆசையா?

சொந்தம் கூறும்

ஒரு சந்தக் கவிதை!

இங்கே

சிந்தி வழிகிறதே

காதலும் தேனும்!

நீயும் நானும்!

காதலும்

நேசமும்

நெருப்பும்

நீ!

பூவும்

வாசமும்

தேனும்

நான்!

தேய்ந்து தேய்ந்து வளரும்

நிலவைப் போல் அல்லவே

உன்னை

நினைந்து நினைந்து உருகும்

நான்!

நான் நிலவல்ல! 

…….

உறங்காமல்

உனக்காக

பூவிழி நோகவே

விழித்திருந்தேன்

…..

வளர்பிறையாய்

மீண்டும் வர

நான் என்ன

வான் நிலவா?

தத்தித் தத்தி தவழும்

ஒரு முத்து நிலவை

சித்தம் இனிக்க இனிக்க

இங்கே

முத்தமிடுகிறார்!              

கொஞ்சம் வா!

தத்தித் தத்தி

தவழ்ந்து வந்த

முத்து நிலவே!

சித்தம் இனிக்க

முத்தம் தந்த

செம்பவளமே!

வாழ்வின் அர்த்தத்தை

வாழ்வின் அதிசயத்தை

ஒரு வண்ண மலரோடு

ஒப்பீடு செய்கின்றார்

மிக அற்புதமாக…

அனுபவித்துப்பார்!

காலையில் மலர்ந்து

மாலையில் மடியும்

மலருக்குள் எத்தனை

வண்ணங்கள்!

ஒரு பொழுதுக்குள்

மடியும்

பூவுக்குள் எத்தனை

நம்பிக்கை.

அழகான சொற்சந்தம்!

அற்புதமான கோர்வை!

விடியல் பற்றி விரியும்

இந்த கவிதையின்

விசித்திரம் பாருங்கள்!

விடியல்

இரவைக் கிழித்து

நிமிரும்

இனிய

விடியலைப் பார்!

அரவம் இன்றி

மலரும்

அழகிய

மலர்களைப் பார்!

பெண்ணின் பெருமை பேசும்

ஒரு பூச்செண்டுக் கவிதை!

எம் கண்ணைக் கவருவதில்

ஆச்சரியம் தான்!

பெண்

பூக்களின்

ராணியாக

பூமியில்

பூத்தவள்!

புது மணம்

பரப்பியே

பூக்களை

வென்றவள்!

பிஞ்சுவிரல்! பஞ்சு மெத்தை!!

கொஞ்சு மொழி! குவிந்த இதழ்!!

நெஞ்சமெலாம் நிறைந்து நின்று

நேசமுடன் இனிக்கிறதே!

மழலையின்பம்!

குட்டிக்குட்டி குழந்தைகளே!

குரல் எழுப்பும் பிள்ளைகளே!

கட்டி அணைத்து முத்தமிட்டால்

கவலை போக்கும் செல்வங்களே!   

பத்துமாத சுமைகளெல்லாம்

பஞ்சு பஞ்சாய் பறந்து விடும்!

சொத்து சுகம் ஏதும் வேண்டாம்!

சொந்தமாக நீயே போதும்!

ஓர் அக்கினிக் கவிதை ஒன்று!

அடைத்து நிற்கும்

தடைகளையெல்லாம்

உடைத்தெறிந்து வருகிறது

வெளியே!

புறப்படு பெண்ணே!

அடங்கி அடங்கி நீ

அடிமையாய்

இருந்தது போதும்!

முடங்கி முடங்கி நீ

முணுமுணுத்தது போதும்!

புறப்படு பெண்ணே

புதுயுகம் படைப்போம்!

சந்தனமும் பன்னீரும் தெளித்து

எம் சிந்தையை குளிரவைக்கிறது

ஒரு சந்தக் கவிதை!

மழலையாய் மாறு!

மறுபடியும் மறுபடியும்

மன்னிக்கத் தெரியவேண்டும்!

பொறுமையென்னும் பூக்களால்

புன்னகை புரிய வேண்டும்!

வெறுமையும் வறுமையும்     

வென்று உயர வேண்டும்!

சிறுமையைத் தர்த்தெறிய

சிந்திக்கத் தெரியவேண்டும்!

அடுக்கு மல்லிப் பூவெடுத்து!

அழகழகாய்த் தொடுத்தெடுத்த

ஓர் அற்புதமான கவிதை இது!

நானிங்கு இல்லை!

அடுக்குமல்லிப் பூவெடுத்து

அழகழகாய் மாலைகட்டி

தொடுத்துவைத்த பூச்சரத்தை

சூடிக்கொள்ள ஆசைப்பட்டேன்!

எத்தனை நாள் ஆசை

எனக்குள்ளே இருந்தது

அத்தனையும் நிறைவேறும்

அற்புத நாள் வந்தது!

சந்தமும் செந்தமிழும்

சேர்ந்தே ஒலிக்கிறதே!

சந்தனமும் செந்தூரமும்

சேர்ந்தே மணக்கிறதே!!

வாழுவோம்!

எழுதும் போது

என்னை மறப்பேன்!  

எழுதாத நேரம்

உன்னுள் தொலைவேன்!

…..

எனது பார்வையில்

நீதான் இருப்பாய்

எனது பாதையிலும்

நீதான் நடப்பாய்!

இது ஒரு கவிதைச்சிற்பம்!

காலகாலமாக வரும்

காதலர்களுக்கு

இது சமர்ப்பணம்!

காதல்! காதல்!!

…….

ஓர விழியின்  

பார்வை தேடி

உயிர் துறக்கும்

காதல்!

…..

உண்மை என்னும்

கோயில் தன்னில்

உறைந்த வேதம்

காதல்!

…..

பூத்துச் சொரியும்

நிலவைப் போலே

அமுதைப் பொழியும்

காதல்!

…..

சத்தமின்றி

தனக்குத்தானே

முத்தமிடுவது

காதல்!

சாவைக் கடந்து

வாழ்வோம் என்று

சபதமிடுவது

காதல்

இது வெறும்

சொற்களின் குவியல்கள் அல்ல!

அழகிய முத்துக் குவியல்கள்!

இங்கே இருப்பவை

வெறும் எழுத்துக்களின் கோர்வைகள் அல்ல!

விலைமதிப்பற்ற கோஹினூர் வைரங்கள்!!

இந்தக் கவிதைக்கடலில்

நான் முத்துக் குளித்து எடுத்து வந்த

முத்துக்களோ கொஞ்சம்!

இன்னும் கொட்டி கிடக்கிறதே

அள்ளக் குறையாத எத்தனையோ 

தங்கப் பாளங்கள்!

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்

ஒவ்வொரு கவிதைகளையும் விரித்தால்

அவை ஓராயிரம் கவிதைகளாக

விரிகின்றனவே!

இது கவிதை நூலுக்கு மட்டுமல்ல

கவிதாயினியின் ஆற்றலுக்கும்

சான்று பகர்கின்றது!

காலத்தால் அழியாத கல்வெட்டு இது!

அடுத்த சந்ததிக்கு மட்டுமல்ல

இன்னும் ஆயிரம் சந்ததிகளின் கைகளிலும்

இந்த கவிதை நூல் தவழும்!

அழகு தமிழ் எழில் கூட்டி!

அற்புதமாய் கோர்த்தெடுத்து!

பழகு தமிழ்க் கவிதை தந்து!

பாரெங்கும் புகழ் பரப்பும்!

கவிதை மகள் நாயகியே!

கவிதாயினி மலைமகளே!

கன்னித் தமிழ்  எடுத்து

கவி மாலை சூட்டுகிறேன்!

பூக்கள் பல தொடுத்து

பூச்சரங்கள் நீட்டுகிறேன்!

பேசும் தமிழ் எடுத்து

பேசுகிறேன் உன் கவிதை!

பிள்ளைத் தமிழ் தொடுத்து

பாடி வைப்பேன் உன்புகழை!

பள்ளித் தமிழ் எடுத்து

பார்புகழ வாழ்த்துரைப்பேன்!

வாழ்க நீ பல்லாண்டு!

வளரட்டும் உன்தமிழ் தொண்டு!!

ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்

ரியாத், சவூதி அரபியா

25/06/2011

3 Comments (+add yours?)

 1. பொன்.சிவகௌரி
  Jul 25, 2011 @ 21:24:06

  கவிஞர் ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களே, கவிதையை கவிதை வடிவில் நீங்கள் விமர்சித்திருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது! வாழ்த்துக்கள்!

  கன்னித்தமிழ் சொல்லெடுத்து!
  காதலெனும் பூதொடுத்து!
  கவிதை மழை பொழிகின்ற
  கார்முகிலே மலைமகளே!
  காதலெனும் சோலையிலே
  கண்டெடுத்தாய் தேன்கவிதை!
  காலமெல்லாம் வாழ்ந்திருக்கும்
  காதலர்கள் உள்ளவரை!

  என அழகு தமிழில் கவிஞர் மலைமகளை நீங்கள் சிறப்பித்திருப்பது கவிஞர் மலைமகளுக்கு மட்டுமல்ல மதியுரைஞராகிய உங்களுக்கும் பெருமை சேர்க்கிறது!
  வாழ்க தமிழ்!

  படித்ததில் மிகவும் சுவைத்த வரிகள்!

  “முல்லைப் பூவே!”
  முல்லைப் பூவே!
  முத்து மணியே!
  பிள்ளை வடிவில் பேசும் நிலவே!
  தத்தித் தத்தி தாவும் குயிலே!
  முத்தம் தந்து முகிழ்க்கும் மலரே!”

  “வாழுவோம்!”
  எழுதும் போது என்னை மறப்பேன்!
  எழுதாத நேரம் உன்னுள் தொலைவேன்!

  கவிஞர் மலைமகள், உங்கள் பயணம் தொரட எனது வாழ்த்துக்கள்! உங்களைப் போன்ற தமிழ் வல்லாளர்களை தமிழ் உலகம் மறப்பதில்லை! தமிழ் உலகம் உள்ளவரை உங்களைப் போன்றோரது புகழும் நிலைத்து வாழும்!
  நன்றி.

  Reply

 2. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  Jul 25, 2011 @ 21:49:57

  அழகு தமிழில் மிகவும் அற்புதமான
  கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கும்
  பொன்.சிவகௌரிக்கு என் மனம் நிறைந்த
  நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
  வழங்குகிறேன்!

  மிகவும் நன்றி!!

  Reply

 3. கோவை கவி
  Jul 29, 2011 @ 23:20:53

  இது வெறும்
  சொற்களின் குவியல்கள் அல்ல!
  அழகிய முத்துக் குவியல்கள்!

  அதை நாம் சுவைக்க சிறிது தந்த சிறீக்கும் மலைமகளுக்கும் வாழ்த்ததுள் உங்கள் இருவர் பணியும் மேலும் வளர்க!….

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: