24 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 17. தராசு முனைகள்!

“மழை நதி கடல்!”
அவையடக்கம்!
தகைசான்ற தலைமைக்கும்!
தமிழறிந்த பெருந்தகைகள்
அனைவருக்கும்!
புகழ் பேசவந்திருக்கும்
புலவர் குழாமிற்கும்!
என் இனிய
பொன்மாலை வணக்கங்கள்!!
வாழ்த்துரை
வளமான தமிழ் மொழியை
வாரி இறைத்து!
மிக அற்புதமான கவிதைகளை
எங்கும் அள்ளித் தெளித்து!
அலட்சியமாகவும், ஏளனமாகவும்
பார்த்தவர்களையும் தன்பால் ஈர்த்துக்கொண்டு!
தனக்கே உரித்தான பாணியில்
வீறுநடை போடும் வெற்றி நாயகனே!
உந்தனுக்கு என் தமிழ் வணக்கம்!
இயற்கையான பேச்சுச்சந்தம்!
உணர்வுகளுக்கேற்ற அடியமைப்புக்கள்!
சொற்களை ஆயுதங்களைப் போல்
கையாளும் திறமை!
உள்ளடக்கத்திலிருந்து
பிரிக்க முடியாத இறுக்கம்!
புதிய பார்வை! சமகால உணர்வு!
ஆகியன இக்கவிதைத் தொகுப்பை
மேலும் மெருகேற்றுகின்றன!
மொழியின் உட்கருத்துக்களை
கண்டறிந்து வெளிப்படுத்துவதோடு,
சொற்களை விபரீதமான,
அபூர்வமான சேர்க்கையால்,
மொழியின் இயல்புக்கு மீறிய
அர்த்த சாத்தியங்களையும்
எழுதிக் காட்டுகிறார்!
சட்டாம்பிள்ளைத் தனத்தை
இவரிடம் சிறிதளவேனும்
காணமுடியவில்லை!
போதனைகள் போதிக்கும் ஒரு போதகராகவும்
இவரைப் பார்க்க முடியவில்லை!
இயற்கையின் இரசிகர்!
இதயங்ளையே அதிகம் நேசிப்பவர்!
பாசத்தின் பண்பு தெரிந்தவர்!
பண்பாட்டின் அர்த்தம் புரிந்தவர்!
பழகு தமிழில் நன்கு எழுதத் தெரிந்தவர்!
இத்தகைய இனிய நண்பர், இனியவன் இசாறுதீன்
அவர்களின் இந்த கவிதைத் தொகுப்பினை
இங்கே வாழ்த்தியுரை வழங்குவதில்
நான் மிக அக மகிழ்கின்றேன்!
இங்கே இவர்
பதித்துச்சென்ற முத்துக்களையும்!
பறித்தெடுத்து கோர்த்து வைத்திருக்கும்
முல்லை மலர்களையும்
உங்கள் பார்வைக்கு இங்கே
காட்சிப் படுத்துகிறேன்!
தாயின் பாசத்தை மிகவும் தத்துவ ரூபமாக
சித்தரிக்கவந்த கவிஞர்…
“தாய்தான் எல்லாம்
அவள்தான்
இரக்கத்தின் சிகரம்!
பாசத்தின் சமுத்திரம்!
மானுடத்தின் நதிமூலம்!
தன்னுயிர் கொடுத்து
இன்னுயிர் காக்கும்
தியாக தீபம்!
தான் பேசும் மொழிக்கும்
தான் பிறந்த மண்ணுக்கும்
மகத்துவம் சேர்க்கும்
மானுட மகுடம்!”
அடுத்து, தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள
தாளாத மோகத்தை….
முத்துச் சிரித்தால்
உன்னை
முல்லைத் தமிழ் என்போம்!
கண் மொழிந்தால்
உன்னை
கன்னித்தமிழ் என்போம்!
பரஸ்பரம் நிகழ்ந்தால்
உன்னை
பிள்ளைத்தமிழ் என்போம்!
ஆறுதல் வார்த்தையே
உன்னை
அன்னைத் தமிழ் என்போம்!
மேலும், “கறுப்புக்கொடி” என்ற ஒரு கவிதையில்
சமகால அரசியலை மிக நுட்பமாக சித்தரிக்கின்றார்..
“……
சுதந்திர தினத்தன்று
தேசத் தலைவருக்கு
ஆயுதக் காவல்!
தேசியக்கொடியில்
குருதிச்சுவடுகள்!
சுதந்திரச்சூரியனுக்கு
கறுப்புக்கொடி!
எங்களது வீட்டுக்குள்ளும்
அரை நிர்வாண
அகதிகள்!
மற்றும் “மழலை” என்றொரு கவிதையில்
எங்கள் மனதை மிகவும் நெகிழ வைக்கின்றார்.
நீ
தாய்ப்பாஷை பேசினால்
இசைக்குயிலின்
இராகம் கேட்கும்!
நீ
தமிழ் வார்த்தை உச்சரித்தால்
காவியப் பேரரசின்
கலைக் கூடம் தெரியும்!”
மேலும், “நான் பாரதியாக வேண்டும்”
என்ற கவிதையில்
இவரும் முண்டாசு கட்டிக்கொண்டு
முறுக்கு மீசை வைத்துக் கொள்ளுகிறார்.
“உன்னைப்போலவே
உருமாலை கட்டி
உன்னைப் போலவே
மீசையை வெட்டி
உன்னைப் போலவே
தலைப்பாகையும் கட்டினேன்!”
இதுவரை யாரும் தொடுவதற்கே அருவருப்படையும்
மண்புழுக்களைக் கூட தனது கவிதைக்கு
கதாநாயகனாக்கி இருக்கிறார்.
“மண் புழுக்களே
மண்ணின் மைந்தர்கள்!
ஓ..
விடு நிலத்தை
விளைநிலமாய் மாற்றும் நீங்கள்தான்
பூமியை
புனர்நிர்மாணம் செய்கிறீர்களா?
தியாகத்தின் உச்சத்தை “மெழுகுவர்த்தி”
என்றொரு கவிதையில் மிகவும் அழகாக சித்தரிக்கின்றார்!
“இருட்டின் ஆதிக்கத்தை விரட்ட
தீக்குளிக்கும் தியாகி நான்!
புகைந்துருகும் கற்பூரம் போலவும்
சிதைந்தெரியும் சாம்பிராணி போலவும்
எரிந்துதிரும் ஊதுவத்தி போலவும்
உங்கள் கைபட்டால் நான் தீக்குளிப்பது
என் மானம் காக்க மட்டும்தான்!”
“கவிதை” என்ற சொல்லுக்கு எத்தனையோ
கவிஞர்கள் இலக்கணம் கண்டிருக்கிறார்கள்.
அர்த்தங்கள் சொல்லி இருக்கிறார்கள்!
ஆனால் நம் கவிஞரோ
ஒரு புது வரைவிலக்கணமே கூறுகிறார்…
“உணர்ச்சிகளின் பாஷை
சுருக்கமான உலக மொழி!
சொற்களின் கைகுலுக்கல்
அர்த்தங்களின் அந்தப்புரம்!
அவலத்தின் அழுகுரல்
ஆனந்தப் பிரளயம்
சொர்க்கத்தின் கடைதிறப்பு
சோகத்தின் வெளிநடப்பு!
ஞானத்தின் ஊற்றுக்கண்
கவிஞனின் குழந்தை!
“கண்ணீர்” என்றொரு கவிதையில்
எங்கள் கண்களையும் கசிய வைக்கின்றார்.
“இமைகளுக்குள்
பிறக்கும்
ஈரக்குழந்தை!
இன்ப துன்பத்தின் பிரவாகத்தில்
இதயம் சுரக்கும்
அமுத சுரபி!
கண்களில் பிறந்து
கன்னத்தில் சங்கமிக்கும்
உப்புநதி!
“கவிஞன்!” என்றொரு கவிதையில்
நல்லதொரு கவிஞனை இனம் காட்டுகிறார்..
“கிழவனைப் போல் சிந்தித்து
குழந்தையாக வாழும்
வாலிப மனிதன்!
குபேரக் கற்பனையில்
குடித்தனம் நடத்தும்
கவுரவ ஏழை!
இதயத் துலாபாரமிட்டு
தீர்ப்பு எழுதும்
நீதிபதி!
எழுத்தேவுகணைகளை
எய்து கொண்டிருக்கும்
எழுச்சிப் போராளி!
மரணத்தால் கூட
மரிக்க வைக்க முடியாத தென்றல்”
இப்படி எத்தனை எத்தனையோ அற்புதமான,
அழகான கவிதைகளை
இந்த தொகுப்பு முழுவதும் காண முடிகிறது!
தமிழ் தாயின் பாதத்தில்
கவிஞர் இனியவன் இசாருதீன் சமர்ப்பிக்கும்
ஒர் அழகான அர்ச்சனை பூ இது!
இது பூத்து குலுங்கி!
திக்கெட்டும் சென்று
நறுமணம் வீச வேண்டுமென
மனதார வாழ்த்துகிறேன்!
கால வெள்ளம் ஓடி
ஒரு நாள் கடலில் கலக்கும் போது
நிச்சயம் இவரது கவிதைகளும்
கரை ஒதுங்கும்!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்
ரியாத், சவூதி அரபியா
22/06/2011
Like this:
Like Loading...
Related
Previous 03 – இரவீந்திரன் கவிதைகள்! Next 05 – வேதாவின் கவிதைகள்!