நானும் என் கவிதைகளும்

நானும் என் கவிதைகளும்! 

என் கவிதைகளைப் போலவே

என் வாழ்க்கையும் மிக இலகுவானவை!

இலக்கணங்கள் ஏதும் இல்லாதவை!

ஆனால்…

இனிமையானவை அல்ல!

எந்த நிலையிலும்

உன்னை முன் வைத்தேன்!

எந்த சபையிலும்

என்னை முன் வைப்பாய்!

இது எனது தாரக மந்திரம்!

என் ஆத்ம பலமும் இதுதான்!

தாங்கள் செய்த தவத்தால்

நான் பிறந்தேன்!

நான் செய்யாத தவத்தால்

தங்களை இழந்தேன்!

இது நான் செய்யாத தவம்!

ஒரு கவிதையைப் போல

எனக்குரிய இலக்கணத்தை

நானே வகுத்துக் கொள்ளுகிறேன்!

ஒரு நதியைப் போல

எனக்குரிய கரைகளை

நானே செதுக்கிக் கொள்ளுகிறேன்!

எனக்குரிய தாலாட்டைக்கூட

நானே பாடியபடி

தூங்கியிருக்கிறேன்!

என் கல்லறை

வாக்கியத்தைத்தானும்

நானே எழுதி வைத்திருக்கிறேன்!

இது என்னைப பற்றி நானே

எழுதி வைத்திருக்கும் வாக்கு மூலம்!

இங்கே என் தந்தையார்

தவமிருக்கின்றார்!

யாரும் கலைத்து விடாதீர்கள்!

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்

இவனே எனக்கு

மகனாகப் பிறக்கவேண்டும்

என்ற வரம் வேண்டி..

இங்கே என் தந்தையார்

தவமிருக்கின்றார்!

யாரும் கலைத்து விடாதீர்கள்!

இது என் தந்தையாருக்கு

நான் செய்யும் முதல் அஞ்சலி!

இது உங்களுக்காக!

உங்கள் நினைவுகளுக்காக!

என்னை வளர்த்தெடுத்து

இந்த நிலைக்கு உயர்த்தி வைத்த

என் அன்புத் தெய்வங்களுக்கும்!

என் மீது பிரியமுள்ள இதயங்களுக்கும்

இது சமர்ப்பணமாகிறது!…….

என்னை வளர்த்தெடுத்து

இந்த நிலைக்கு

உயர்த்தி வைத்த தெய்வங்களுக்கு!

சீதனம் என்றொரு சிறையினிலே

சிறைப்படும் சீதைகள் ஆயிரமே!

சாற்றிடும் வேதங்கள் பொய்த்திடுமோ?

தர்மத்தை மறந்துநீர் வாழ்ந்திடவோ?

14/06/1976

இது எனது முதலாவது எழுத்துப் பதிவு.

இதற்கு முந்திய எழுத்துக்களை

இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

கிடைக்கவில்லை.

இருண்ட என்வாழ்வில்

ஓர் அகல் விளக்கைத்தேடினேன்!

ஆயிரம் தீபங்கள் அணையாது ஒளிரும்

ஆலயம் ஒன்று

எனக்கு பரிசாகத்தரப்பட்டது!

இங்கிருந்து தான் எனது இல்வாழ்க்கை ஆரம்பமாகிறது!

உன்னோடு நான்

வாழ்ந்த நாட்களிலும் பார்க்க

உன் நினைவுகளோடு

வாழ்ந்த நாட்கள் தான் அதிகம்!

என் வாழ்வை இங்கே தொலைத்துள்ளேன்.

இழந்துவிட்ட நாட்களை இன்னும் தேடுகிறேன்!

இறைவன் செய்த அதிசயம்

உன்னை எனக்காகப் படைத்தது!

அதே இறைவன் செய்த

இன்னொரு அதிசயம்

என்னை உனக்காகப் படைத்தது!

இது எங்கள் இல்லற பந்தத்தின் சிறப்பு!

முதற்கண் இறைவனுக்கு நன்றி!

காலம் கிழித்துப் போட்ட

வெறும் காகிதத் துண்டுகள் அல்ல…

இறைவன் தனக்கென்று தானே கோர்த்தெடுத்த

அழகிய ரோஜாப் பூமாலை

நீயும் நானும்!

இதுவும்  எமது இல்லற பந்தத்தின்

இன்னொரு சிறப்பு!

நீ கிடந்த பாயருகில்

நாமிருந்து கண்சொரிந்தோம்  

நீ தொழுத இறைவனுக்கு

நெஞ்சுருகும் என்றிருந்தோம்

நெஞ்சுருக வில்லையம்மா!

நீ பிழைக்க வில்லையம்மா!

நேசமுள்ள விழிகளெல்லாம்

நீர் சொரிந்து போனதம்மா!

இது எமது வாழ்வில்

இறக்கி வைக்க முடியாத சோகம்!

ஈடு செய்ய முடியாத துன்பம்!

வளமான தமிழ் கொண்டு

வாழ்த்துப்பா பாடும் என்னை

இனிதான தமிழ் கொண்டு

இரங்கற்பா எழுத வைத்தாய்!

என் எழுத்துப் பயணம் இங்கே

இடை நிறுத்தப் படுகிறது!

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள்

நான் காணமல் போய்விடுகிறேன்!

காதல் கவிதைகள்

எழுதவதில்லை என்று தீர்மானித்தேன்!

இன்று உன் கண்களைக் கண்டபின்

மாற்றிக் கொண்டேன்

இனிமேல் வேறு கவிதைகள்

எழுதுவதில்லை என்று! (06/06/2003).

என் எழுத்துப் பயணம் மீண்டும்

இங்கிருந்து அதிரடியாக தொடங்குகின்றது

காலத்தை எழுதி முடிக்கு முன்னமே

கவிஞனைக் காலம் எழுதி விடுகிறது!

இன்னும் இரண்டாயிரம்

ஆண்டுகளுக்குப் பின்னர்

என் வழித்தோன்றல் ஒருவன்

என் கவிதைகளைத் தோண்டி எடுப்பான்!

அவனுக்காக இதனை

ஆவணப் படுத்துகிறேன்!

என் எழுத்துக்களை

ஆவணப் படுத்த வேண்டுமென்ற

அவசியத்தையும் உணர்ந்து கொள்கிறேன்!

பூக்களாயின்

அள்ளிச்சொரியுங்கள்!

முட்களாயின்

எடுத்து எறியுங்கள்!

வசைகளாயின்

அள்ளி வீசுங்கள்!

வாழ்த்துக்களாயின்

மனதார வாழ்த்துக்கள்!

உங்களின் நியாயமான தீர்ப்புக்களுக்காக

என் கவிதைகள் இன்னும் காத்திருக்கின்றன!

நான் நடந்து வருகின்றேன்!

என் கவிதைகளோடு!

பாதம் நோக நான் நடந்து வருகின்றேன்!

நான் இட்டஅடி ஒவ்வொன்றையும்

அழகிய கவிதையாக்கி இருக்கிறேன்!

அதே போல் எடுத்து வைக்கும்

ஒவ்வொரு அடியையும்

உங்களுக்கு விருந்து வைப்பேன்!

நான் நடந்து வருகின்றேன்!

என் கவிதைகளோடு!

பாதம் நோக நான் நடந்து வருகின்றேன!

வார்த்தை அலங்காரங்களில்!

நான் மனதை பறிகொடுப்பவன்!

காதல் இரசங்களை

கொஞ்சம் அதிகமாக

விரும்பிச் சுவைப்பேன்!

என் கவிதைகளுக்கு

செவ்விதழில் தேனெடுத்து

செந்தமிழில் சொல்லெடுப்பேன்!

மானிடத்தை நோக்கி

என் பயணம் தொடர்கிறது!

மாண்டு போகும்

மனித வாழ்வைப் போல

மனிதமும் மாண்டு விடக் கூடாது!

கால வெள்ளம் கடலில் கலக்கும் போது…

என் கவிதைகளும் கரை ஒதுங்கும்!

நான் நடந்து வருகின்றேன்!

என் கவிதைகளோடு!

பாதம் நோக நான் நடந்து வருகின்றேன்!

ஆம்!!… என்பாதம் நோக

என் கவிதைகளோடு

நான் நடந்து வருகிறேன்!

வண்டுக்குத் தூதுவிடும் வாசமலரே!

வண்டுவந்து தீண்டுகையில் நாணுவதுமேன்?

கண்டுகொண்ட சுகமென்ன கன்னிமலரே!

கண்களிலே கானல்வரி பாடுநிலவே!

கொஞ்சுமொழி பிஞ்சுமுகம் கொண்டமலரே!

கோலவிழி தான்சிரிக்க மூடுவதுமேன்?

கார்குழலை நீவிரித்தாய் கோதைமயிலே!

கண்களிலே நீதவழ்வாய் காதல்மலரே!

நெற்றியிலே குழலாடும் நேசமலரே!

நீலவிழி போதையிலே நீந்துவதுமேன்?

கொத்துமலர் கொண்டையிலே சூடுமலரே!

கோதைமுகம் பார்த்திருக்கும் ஏழைமனமே!

வானவில்லின் ஜாலமென்ன வண்ணமலரே!

வஞ்சிமகள் அன்னநடை பின்னுவதுமேன்?

வண்டுவரும் வேளையிது முல்லைமலரே!

வந்தபின்னே கூடியிரு வஞ்சிமலரே!

14/04/2011

இது நேற்று வரை எழுதிய கவிதை!

இதுவரை…

இவன் எழுதியது கவிதைகளே அல்ல!

என்றேனும் ஒருநாள்

இவனும் கவிதைகள் எழுதுவான்!

என்ற அசையாத நம்பிக்கையோடு

என்பேனா முனை மெதுவாக நகர்கிறது!

                                      ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா                                         

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்

ரியாத், சவூதி அரபியா

05/07/2011

srisuga2278@yahoo.com

 

5 Comments (+add yours?)

  1. கோவை கவி
    Jul 08, 2011 @ 23:09:57

    நானும் என் கவிதைகளும் எனும் தலைப்பில் வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள். உங்கள் பயணம் சிறப்புற அமைய நல் வாழ்த்துகள்.

    Reply

  2. ஸ்ரீஸ்கந்தராஜா
    Jul 09, 2011 @ 11:47:18

    தங்களைப் போன்றவர்களின் அன்பும் ஆசியும்
    இருக்கும்வரை என் எழுத்துப் பயணம் தொடரும்!
    மிகவும் நன்றி அம்மா!

    Reply

  3. பொன்-சிவகௌரி
    Jul 21, 2011 @ 06:34:33

    நானும் என் கவிதைகளும் என்ற தலைப்பில் உங்களைப் பற்றி வித்தியாசமாக எழுதியிருப்பது வலிமையான உள்ளங்களையும் தளர்வடைய வைத்து விடும் என்பதில் ஐயமில்லை.

    “ஒரு கவிதையைப் போல
    எனக்குரிய இலக்கணத்தை
    நானே வகுத்துக் கொள்ளுகிறேன்!
    ஒரு நதியைப் போல
    எனக்குரிய கரைகளை
    நானே செதுக்கிக் கொள்ளுகிறேன்!
    எனக்குரிய தாலாட்டைக்கூட
    நானே பாடியபடி
    தூங்கியிருக்கிறேன்!
    என் கல்லறை
    வாக்கியத்தைத்தானும்
    நானே எழுதி வைத்திருக்கிறேன்!”
    இது என்னைப பற்றி நானே
    எழுதி வைத்திருக்கும் வாக்கு மூலம்!

    உங்களுக்கு நீங்களே எழுதி வைத்திருக்கும் இந்த வாக்கு மூலம் என் மனதை சற்று தளர்வடைய வைத்து விட்டது.

    ஒரு வாசகனுக்கு தெரிந்ததெல்லாம் வாக்கியங்களின் வாளிப்பு மட்டுந்தான். அந்த வாக்கியத்திருகுப் பின்னால் இருக்கும் வலி, அந்த வாக்கியத்தை வார்த்தவனின் முனகல் தன் உணர்ச்சியை அவன் சித்தரிக்க எத்தனித்த ரணம் இவை யாவும் மறைந்தே கிடக்கின்றன.சோகங்களை வார்த்தைகளால் அலங்கரித்து வாசகர்களுக்கு நீங்கள் வழங்கியிருக்கும் விதம் மிக அருமை!

    தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்!

    Reply

  4. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
    Jul 30, 2011 @ 15:56:23

    என்பாதம் நோக
    என் கவிதைகளோடு
    நான் நடந்து வருகிறேன்!……

    வாருங்கள் ஸ்ரீ , வரவேற்க நாங்கள் உள்ளோம். வாழ்த்துக்கள் !!

    Reply

  5. ஸ்ரீஸ்கந்தராஜா
    Jul 30, 2011 @ 20:57:17

    மிகவும் நன்றி ஐயா திரு தமிழ்க்கிறுக்கன் நடாசிவா அவர்களே!!

    வாழ்த்துக்கள்!!!

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: